கடந்த மூன்று ஆண்டுகளில் தீயணைப்புத்துறைக்கு 72.82 கோடி செலவில் புதிய வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
“தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை
2021 முதல் 2023 முடிய இத்துறைப் பணியாளர்கள் 61,288 தீ விபத்து அழைப்புகளிலும், 2,57,209 மீட்பு அழைப்புகளிலும் பணியாற்றி 42,224 மனித உயிர்களையும், ரூ.605.06 கோடி மதிப்புள்ள உடைமைகளையும் காப்பாற்றி அரும்பணி புரிந்துள்ளார்.
ரூ.55.60 கோடியில் பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள்
முதலமைச்சர் ஸ்டாலின் தீயணைப்புப் பணியாளர்களின் பாதுகாப்பிற்காக ரூ.55.62 கோடி செலவில் தலைக்கவசம் மற்றும் காலணியுடன் கூடிய 1850 தீ பாதுகாப்பு உடைகள், 650 மூச்சுக் கருவிகள், பாதுகாப்பு உபகரணங்களுடன் கூடிய 3500 மீட்பு உடைகள் வாங்கிட ஆணையிட்டுள்ளார்.
ரூ.86.83 கோடியில் நவீன வாகனங்கள் மற்றும் உபகரணங்கள்
ரூ.72.82 கோடி செலவில் தீயணைப்பு மீட்புப் பணிகள் துறைக்காக 75 புதிய நீர்தாங்கி வண்டிகள், 12 அவசரகால சிறிய மீட்பூர்திகள், 44 பெரும் தண்ணீர் லாரிகள், ஒரு வான்நோக்கி நகரும் ஏணி கொண்ட ஊர்தி, 7 அதி உயரழுத்த நீர்தாங்கி வண்டி, 1 சிறிய நுரைநகர்வு ஊர்தி, 50 ட்ரோன்கள், 4 புகைவெளியேற்றும் கருவி, 21 கோம்பி 4 கருவிகள், ஆட்களை ஏற்றிச் செல்லும் ஊர்திகள் 4 முதலியன கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.
ரூ.92.40 கோடியில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையங்களுக்கு புதிய கட்டடங்கள்
முதலமைச்சர் ஸ்டாலின் ரூ.45.82 கோடி செலவில் காஞ்சிபுரம், தேனாம்பேட்டை, திருவையாறு, கடமலைக்குண்டு, இராஜபாளையம், செங்குன்றம், மணலி, வண்ணாரப்பேட்டை, சேலம் திருவரங்கம் ஆகிய தீயணைப்பு – மீட்புப் பணி நிலையங்களுக்கும், காஞ்சிபுரத்திற்கும் மற்றும் அம்பத்தூரில் சென்னை புறநகர் மாவட்ட அலுவலகத்திற்கும் புதிய கட்டடங்கள் கட்டுவதற்கு ஆணையிட்டுள்ளார்.
மேலும், ரூ. 40.63 கோடி செலவில் செங்குன்றம், போடிநாயக்கனூர், துறையூர், இராணிப்பேட்டை, சிவகாசி, பெரும்பாக்கம் ஆகிய இடங்களில் அலுவலர்கள், பணியாளர்களுக்கு 173 குடியிருப்புகள் கட்டவும் ரூ.5.95 கோடி செலவினத்தில் திருவல்லிக்கேணியில் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலையங்களுக்குப் புதிய கட்டடம் கட்டவும் நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ரூ.69.43 கோடியில் புதிய தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி நிலையங்கள்
பொதுமக்களின் சிறப்பான சேவைக்கென ரூ. 62.18 கோடி செலவில் திங்கள்நகர், கோவைபுதூர், சின்னமனூர், வாய்மேடு, தெள்ளார், அன்னியூர், திருப்பரங்குன்றம், ஏழாயிரம்பண்ணை, கொளத்தூர், காலவாக்கம், கண்ணமங்கலம், ஆட்டையாம்பட்டி, ஊத்துக்குளி, இளையாங்குடி, வையம்பட்டி, குமராட்சி, நயினார்பாளையம், ஒரகடம், திருவெறும்பூர், இராதாபுரம், ரிசிவந்தியம் ஆகிய 21 இடங்களில் புதிய தீயணைப்பு நிலையங்களும் சிவகாசி, ஓசூர், தாம்பரம், இராணிப்பேட்டை ஆகிய 4 தரம் உயர்த்தப்பட்ட தீயணைப்பு நிலையங்களும் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. பூந்தமல்லி, கீழ்ப்பாக்கம் தீயணைப்பு நிலையங்கள் ரூ.1.06 கோடி மேம்படுத்தப்படுகின்றன.
ரூ.39.30 கோடி செலவில் மாநில பயிற்சிக் கழகம்
முதலமைச்சர் ஸ்டாலின் தீயணைப்பு மீட்புப் பணித்துறை பணியாளர்களுக்கு வழங்கப்படும் பயிற்சிகளை மேம்படுத்தும் விதமாக ரூ. 39.30 கோடி செலவில் மாநிலப் பயிற்சிக் கழகம் மற்றும் உலகத்தரத்திலான நிகழ்நேர மாதிரி கூடம் ஆகியவற்றை காலவாக்கத்தில் அமைத்திடவும் ஆணையிட்டுள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
சிறைவாசிகள் பயன்பாட்டிற்காக 1 லட்சம் புத்தகங்கள்: தமிழக அரசு
சிங்கத்துடன் ஷூட்டிங்… மிரட்டும் ’மாம்போ’ ஃபர்ஸ்ட் லுக்!