உப்புமாவும், கிச்சடியும்தானா? பள்ளி காலை உணவு மெனு இதோ!

தமிழகம்

தமிழகத்தில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் என்ற பெயரில் முதற்கட்டமாக  1,545 அரசு தொடக்கப் பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு அரசாணை இன்று (ஜூலை 27) வெளியிட்டுள்ளது.

திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசின் ஓராண்டு நிறைவையொட்டி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.

அதில் முதலாவதாக ”அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இனிமேல் காலை நேரத்தில் சிற்றுண்டி வழங்கப்படும். முதற்கட்டமாக சில மாநகராட்சி, நகராட்சிகளிலும், தொலைதூரக் கிராமங்களிலும் இத்திட்டம் தொடங்கப்படவுள்ளது.

ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலக்கூடிய தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு அனைத்துப் பள்ளி நாட்களிலும் காலை வேளையில் சத்தான சிற்றுண்டி வழங்கப்படும். இதனை உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக வழங்குவோம். படிப்படியாக அனைத்துப் பகுதிகளுக்கும் இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்படும். என தெரிவித்திருந்தார்.

தற்போது முதற்கட்டமாக மாநகராட்சி, நகராட்சி மற்றும் கிராமப்புறங்களில் உள்ள 1,545 பள்ளிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ள நிலையில் இதற்காக ரூ.33.56 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தில் வழங்கப்படும் சிற்றுண்டி உணவின் விவரம்:

திங்கட்கிழமை – ரவா உப்புமா, சேமியா உப்புமா, அரிசி உப்புமா, கோதுமை ரவா உப்புமா + காய்கறி சாம்பார்.


செவ்வாய் கிழமை – ரவா காய்கறி கிச்சடி, சேமியா காய்கறி கிச்சடி, சோள காய்கறி கிச்சடி, கோதுமை ரவா காய்கறி கிச்சடி.


புதன் கிழமை – ரவா பொங்கல் , வெண் பொங்கல் + காய்கறி சாம்பார்.


வியாழக்கிழமை – ரவா உப்புமா, சேமியா உப்புமா, அரிசி உப்புமா, கோதுமை ரவா உப்புமா + காய்கறி சாம்பார்


வெள்ளிக்கிழமை – ரவா காய்கறி கிச்சடி, சேமியா காய்கறி கிச்சடி, சோள காய்கறி கிச்சடி, கோதுமை ரவா காய்கறி கிச்சடி + ரவா கேசரி, சேமியா கேசரி ஆகியவை வழங்கவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வாரத்தில் குறைந்தது 2 நாட்கள் அந்தந்த பகுதிகளில் கிடைக்கும் சிறு தானியங்களால் ஆன உணவை வழங்க வேண்டும் எனவும் முதலமைச்சரின் இந்த காலை உணவு திட்டம் சரியாக செயல்படுகிறதா என்பதை கண்காணிக்க குழு அமைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • க.சீனிவாசன்
+1
0
+1
1
+1
1
+1
2
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *