திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் அருகே சேகரையில் சேதமடைந்த பள்ளி கட்டடத்தை இடித்துவிட்டு புதிதாக கட்டடம் கட்டித்தர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் அருகே உள்ள பொதக்குடி ஊராட்சியில் சேகரை கிராமம் உள்ளது. இந்தக் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி உள்ளது. ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள இந்தப் பள்ளியில் சேகரை, பொதக்குடி, பூதமங்கலம், மிளகு குளம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள கிராமப்புற பள்ளி மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இந்தப் பள்ளி வளாகத்தில் இரண்டு பள்ளி கட்டடம் மட்டுமே கட்டப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகிறது. அதில் ஒரு பள்ளி கட்டடம் கடந்த ஐந்து ஆண்டுகளாக சேதமடைந்து காணப்படுகிறது. தற்போது கட்டடத்தில் விரிசல்கள் ஏற்பட்டு கான்கிரீட் கம்பிகள் வெளியில் தெரிகின்றன. எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது.
இதனால் அந்த கட்டடத்தில் வகுப்புகள் நடத்துவது நிறுத்தப்பட்டு, மூன்று தளங்கள் உள்ள மற்றொரு கட்டடத்தில் வைத்து வகுப்புகள் நடத்தப்படுவதால்
ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக மாணவர்கள் படிக்க முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சேதமடைந்த கூத்தாநல்லூர் அருகே சேகரை பள்ளி கட்டடத்தை இடித்துவிட்டு அதே இடத்தில் புதிய கட்டடம் கட்டித்தர வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-ராஜ்