govt warns to Jacto Geo
ஜாக்டோ ஜியோ அமைப்பினர் வேலை நிறுத்த போராட்டம் அறிவித்திருக்கும் நிலையில் அரசு ஊழியர்கள் பணிக்கு வராவிட்டால் ஊதியம் கிடையாது என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக ஜாக்டோ ஜியோ அமைப்பினர் அறிவித்துள்ளனர்.
தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்றால் பிப்ரவரி 26 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் என்றும் கூறியுள்ளனர்.
இந்த நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று(பிப்ரவரி 13) ஜாக்டோ ஜியோ அமைப்பினருடன் அமைச்சர்கள் எ.வ.வேலு, முத்துசாமி மற்றும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் கோரிக்கைகள் குறித்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும், முதலமைச்சர் உங்களது கோரிக்கைகள் தொடர்பாக அறிவிப்பு வெளியிடுவார் என்று அமைச்சர்கள் உறுதியளித்தனர்.
இந்த சூழலில் செய்தியாளர்களைச் சந்தித்த ஜாக்டோ ஜியோ அமைப்பினர், ‘முதல்வரின் அறிவிப்புக்காகக் காத்திருக்கிறோம். அவர் அறிவிப்பு வெளியிடவில்லை என்றால் ஏற்கனவே நாங்கள் அறிவித்தபடி எங்களது வேலை நிறுத்தம் நடைபெறும்’ என்று தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து நேற்று இரவு அமைச்சர் தங்கம் தென்னரசு, “அரசு நிதி நிலைமையைக் கருத்தில் கொண்டு ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டத்தைக் கைவிட வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
அதுபோன்று தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா அனைத்து அரசுத் துறை செயலாளர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
அதில், ‘தமிழ்நாடு அரசு ஊழியர்களின் அங்கீகாரம் மற்றும் அங்கீகாரம் பெறாத அமைப்பினர் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர்.
அரசு விதிப்படி அரசின் செயல்பாடுகள் பாதிக்கக்கூடிய எந்தவித வேலை நிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் அரசு ஊழியர்கள் ஈடுபடக் கூடாது. அதுபோன்று போராட்டத்தில் ஈடுபடுவதாகப் பயமுறுத்தவும் கூடாது.
இது அரசு விதிகளை மீறியதாக அமைந்து விடும். இதுபோன்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுபவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று உங்கள் கீழ் பணி செய்யும் அலுவலர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும்.
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வேலைநிறுத்தம் போராட்டம் அறிவித்துள்ள தேதிகளில் அலுவலகங்களுக்கு வரவில்லை என்றால் அவர்கள் பணிக்கு வரவில்லை என்று கருதி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம்.
போராட்டம் அறிவிக்கப்பட்ட 15ஆம் தேதி மருத்துவ விடுப்பைத் தவிர வேறு விடுப்புகள் தரக்கூடாது.
அரசு ஊழியர்களின் வருகை நிலை குறித்து 15ஆம் தேதி காலை 10.15 மணிக்குள் மனிதவள மேலாண்மைத் துறைக்குத் தவறாமல் தெரியப்படுத்த வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக அரசு ஊழியர்கள் வேலைக்கு வரவில்லை என்றால் நோ வொர்க் நோ பே என்ற அடிப்படையில் ஊதியமும் வழங்கப்பட மாட்டாது என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
பிரியா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
இரவிலும் விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டு வீச்சு!
கிச்சன் கீர்த்தனா: பிரெட் கட்லெட்!