கனிம வளங்கள் தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு கொண்டு செல்லப்படுகிறது, ஆனால் அங்கிருந்த மருத்துவக் கழிவுகள் இங்கு வந்து கொட்டப்படுகிறது என்று உயர் நீதிமன்ற நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
தென்காசியை சேர்ந்த சிதம்பரம் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
அதில் கேரளாவில் இருந்து நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மருத்துவக் கழிவுகள் தொடர்ந்து கொட்டப்பட்டு வருகிறது. இதை தடுக்க வேண்டும் என கடந்த 2018 ஆண்டு பொது நல மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு விசாரணையின் போது, அப்போது நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில் நெல்லை மாவட்ட ஆட்சியர் தலைமையில் சுகாதாரத்துறை, காவல்துறை, போக்குவரத்து துறையின் அலுவலர்களை இணைத்து மருத்துவ கழிவுகள் மேலாண்மை குழு அமைக்கப்பட்டு
மருத்துவக்கழிவுகள் நெல்லை மாவட்டத்திற்குள் நுழையாத வகையில் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது.
ஆனால், கேரளாவில் இருந்து மருத்துவக் கழிவுகள் தொடர்ந்து கொட்டப்பட்டு வருகிறது. எனவே, மருத்துவக் கழிவுகள் கொட்டுவதை தடுக்காத நெல்லை மாவட்ட ஆட்சியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் ஜெயசந்திரன், சுந்தர்மோகன் அமர்வு முன் இன்று(ஜனவரி 10)விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இங்கிருந்து கனிம வளங்கள் கொண்டு செல்லப்படுகிறது.
கேரளாவில் இருந்து மருத்துவ கழிவுகள் தமிழகத்தில் கொட்டப்படுகிறது ஏன் இந்த நிலை? என்றனர்.
தமிழகத்தில் எல்லையோரம் உள்ள மாவட்டங்களில், பக்கத்து மாநிலங்களில் இருந்து மருத்துவக் கழிவுகள் கொண்டு வந்து கொட்டப்படுகிறதா? என்று கேட்ட நீதிபதிகள்,
அதனை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை பிப்ரவரி மாதம் ஒத்தி வைத்தனர்.
கலை.ரா
ஆளுநர் விவகாரம்: எம்எல்ஏ-க்களை எச்சரித்த ஸ்டாலின்
“எதோ முடிவோடதான் வந்திருக்கீங்க போல” – சிரித்துக் கொண்டே கேட்ட ஓபிஎஸ்