தேசியப் பேரிடர் இல்லையா? நிதி கொடுக்க முடியாதா? நிர்மலா சீதாராமன் சொல்வது சரியா? – மக்கள் கருத்து!

தமிழகம்

கடந்த டிசம்பர் 4,5 ஆகிய தேதிகளில் மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்கள் கடுமையான சேதத்தை சந்தித்தன.

இதனை தொடர்ந்து டிசம்பர் 16,17 ஆகிய தேதிகளில் நெல்லை, குமரி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய தென் மாவட்டங்களில் அதி கன மழை பெய்தது. தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் பல வீடுகளில் வெள்ள நீர் புகுந்து சேதமானது. சாலைகள் துண்டிக்கப்பட்டது.

தமிழகத்தில் ஏற்பட்ட மழை, வெள்ள பாதிப்பைத் தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று டிசம்பர் 19-ஆம் தேதி டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தினார்.

இதுகுறித்து டெல்லியில் நேற்று (டிசம்பர் 22) செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “தமிழ்நாட்டில் ஏற்பட்ட  வெள்ள பாதிப்புகளைத் தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது. ஏனென்றால், அது தேசிய பேரிடர் என்ற வரையறைக்குள்  வராது. மற்ற மாநிலத்துக்கு அறிவிக்கிறார்கள், தமிழ்நாட்டுக்கு அறிவிக்கவில்லை என்றெல்லாம் இல்லை.

ஒருவேளை மாநில அளவில் பேரிடர் என்று அறிவிக்க வேண்டும் என விரும்பினால் அதற்கு ஏற்ற வழிமுறைகள் வழங்கப்பட்டுள்ளது.

நிதி ஆணையம் வழங்கும் பரிந்துரைகளை வைத்துக்கொண்டு, இந்த வழிமுறைகளையும் வைத்து பேரிடரை அறிவிக்கலாம். மாநிலத்திடம் இருக்கக் கூடிய மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து 10 சதவிகிதம் வரை எடுத்து, இதற்கு உபயோகிக்கலாம். அதை தவிர தேசிய பேரிடர் என்று அறிவிக்க வேண்டும் என்ற சிஸ்டமே மத்திய அரசிடம் இல்லை” என்று தெரிவித்தார்.

தமிழகத்தில் ஏற்பட்ட மழை, வெள்ள பாதிப்புகளை தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியது குறித்து மின்னம்பலம் குழுவினர் சென்னையில்  மக்களிடம் நேரடியாக சென்று கருத்து கேட்டார்கள். மக்கள் கூறிய பதில்களை இங்கு பார்க்கலாம்…

கலா

நாடாளுமன்ற தேர்தல்ல மக்கள் கிட்ட ஓட்டு கேட்க எப்படி உங்களுக்கு உரிமை இருக்கோ, அதேபோல தேசிய பேரிடரா அறிவிக்க சொல்லவும் எங்களுக்கு உரிமை இருக்கு. நாங்களும் தேசியத்துல சேர்ந்து தான் இருக்கோம். நாங்க பெத்த புள்ளைங்களும் ராணுவத்துல சேர்ந்து நாட்டு மக்கள காப்பாத்ததான் செய்யுறாங்க.

சுனாமி, நிலநடுக்கம் வந்தா தான் தேசிய பேரிடரா அறிவிப்பீங்களா?  இதுவரை இல்லாத அளவுக்கு மழை பெஞ்சிருக்கு. திருச்செந்தூர்லலாம் தலைக்கு மேல வெள்ளம் போகுது. இன்னும் எவ்வளவு ஜனம் உயிர் போயிருக்குன்றத கணக்கு எடுக்குறதுக்கு கூட அந்த ஊருக்கு போக முடியல. அந்த மாரி இருக்கும் போது தேசிய பேரிடர்னு சொன்னா என்ன?

தானே ராஜா? தானே மந்திரியா? நாங்கல்லாம் சேர்ந்து ஓட்டு போட்டா தான் யாரா இருந்தாலும் பிரதமராவும் உட்கார முடியும் முதல்வராவும் உட்கார முடியும். அவங்கெல்லாம் ஜி, ஜி-னு  இந்தில பேசுறதுனால அவங்களுக்கு நிவாரணம் ஒதுக்குறாங்க. நாங்க ஐயா, ஐயானு கேக்குறது அவரு காதுக்கு கேட்கல.

பிரதமருக்கு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடா தெரியல. அதனால இவங்களையெல்லாம் கண்ணுக்கு தெரியல. தமிழ் காரங்க மாற்றான் தாய் குழந்தைங்க. அவங்களையெல்லாம் சும்மா சைடு பார்வ பார்க்குறாரு. யாருமே இந்த காலத்துல மக்களுக்கு நல்லது செய்யனும்னு நினைக்கிறது இல்ல. அவங்களுக்கு தேவை பதவி ஆசை.

இந்தி மொழி பேசுற மக்கள் அதிகளவுல வாக்களிக்குறதுனால அவங்களுக்கு ஆதரவா செயல்படுறாரு. பாஜக திரும்பி திரும்பி தன்னை நிதியமைச்சரா போடும் நம்ம கெளரவமா மினிஸ்டர் மினிஸ்டர்னு  உலத்தை சுத்தி பார்க்கலாம்னு நினைக்கிறது தான் அந்த அம்மாவோட (நிர்மலா சீதாராமன்) ஆசை. அதான் இப்படி பேசுறாங்க.

சந்திரசேகர்

முக்கியமான நிதியமைச்சர் பொறுப்புல நிர்மலா சீதாராமன் இருக்குறாங்க. அவங்க எதையுமே வெரிஃபை பண்ணாம சொல்லியிருக்க மாட்டாங்க. மத்திய அரசு கொடுத்த பணத்த தமிழக அரசு சரியா  செயல்படுத்தியிருக்காங்களாங்கிறது தான் முக்கியம்.

மழை நீர் வடிகால் பணிகளுக்கு 4000 கோடி செலவு பண்ணிட்டதா சொன்னாங்க. ஆனால் 42 சதவிகிதம் தான் வேலை முடிஞ்சிருக்குனு சொல்றாங்க. இதுலேயே நிறைய குளறுபடி இருக்கு. மொத்தத்துல. மத்திய அரசோ, மாநில அரசோ அடிச்சிக்கிறத விட மக்களுக்கு நல்லது செய்யுங்க.

முதல் தவணையா மத்திய அரசு 450 கோடி ஒதுக்கியிருக்காங்க. மத்தியக்குழு ஆய்வு செஞ்ச பிறகு கூடுதல் நிதி ஒதுக்குவாங்க.

வீர தமிழன்

தமிழக அரசு 12 ஆயிரம் கோடி கேட்டா, 450 கோடி மட்டும் தான் தருவேனு ஏன் சொல்றீங்க? மத்தியக்குழு ஆய்வு செஞ்சாங்களே அப்புறம் ஏன் நிதி கொடுக்கலை? மக்களோட வரிப்பணத்தை ஏன் வஞ்சிக்கிறீங்க?

கடந்த 6 மாசத்துல ஜிஎஸ்டி மூலமா தமிழக அரசுகிட்ட இருந்து மத்திய அரசுக்கு 23 ஆயிரம் கோடி வரிப்பணமா வந்துருக்கு. அதுல இருந்து நிதி கொடுங்க. நீங்க கொடுக்குற பணம் அதுல ஒரு சதவிகிதம் கூட இல்லையே?

மேரி

பாதிக்கப்பட்ட மக்களுக்கு தான் அதிகமா நிவாரணம் வழங்கணும். தென் மாவட்ட மக்கள் மழை, வெள்ளத்தால ரொம்ப பாதிக்கப்பட்ருக்காங்க. மோடி சார் வட மாநிலங்களுக்கு தான் நிறைய நல்லது பண்றாரு. தமிழ்நாட்டுக்கு எதுவும் செய்யலையே. செஞ்சா நல்லா இருக்கும்.

ரமேஷ்

மக்கள் வாழ்வாதாரம் ரொம்ப இழந்துருக்காங்க.  ஆறாயிரம் நிவாரணங்குறது அவங்களுக்கு பத்தாது. கண்டிப்பா மத்திய அரசு இப்படி செய்யுறது சரி கிடையாது. நாங்க என்ன இந்தியாவிலிருந்து வெளிய பாகிஸ்தான்லயா இருக்கோம்? தமிழகத்துல தான் இருக்குறோம்.

பாரத மாதாங்குறது எல்லாருக்கும் ஒன்னு தான். நாங்களும் பாரத மாதாவோட ஓரு அங்கம் தான். எல்லாம் மாநிலத்தையும் நீங்க ஒன்னா தான் பார்க்கனும். கண்டிப்பா மழை, வெள்ள பாதிப்ப தேசிய பேரிடரா அறிவிக்கணும். மாநில அரசும், மாநகராட்சி நிர்வாகமும் மழை, வெள்ள பாதிப்பை சரியாக கையாண்டாங்க. நம்ம அவங்கள தப்பே சொல்ல கூடாது.

ஷகாப்

சென்னையை விட இரண்டு மடங்கு தூத்துக்குடி மாவட்டம் மழை, வெள்ள பாதிப்பால சேதம் அடைஞ்சிருக்கு. டெல்லியில் இருந்து பேசாம நிர்மலா சீதாராமன் களத்துல வந்து மக்களை சந்திக்கணும். அவங்க வேலை செய்யாம மாநில அரசை குறை சொல்றாங்க. தமிழ்நாட்டு மக்களுக்கு அநீதி செய்யுறாங்க.

ராஜ்குமார்

நாங்க குடிக்குற டீ வரைக்கும் ஜிஎஸ்டி போட்றாங்க. நிவாரணம் ஒதுக்குனா என்ன? தமிழ்நாட்ட ஓரவஞ்சனை செய்யுறாங்க. இங்குள்ள மக்களுக்கு எதுவும் செய்யுறது கிடையாது.  பாஜகவால தமிழகத்துல கால் ஊன முடியல. ஒரு சீட் கூட ஜெயிக்க முடியல. தமிழன் ஓட்டு போட்டு அவங்கள தேர்ந்தெடுத்தா நிதி ஒதுக்குவாங்க.

ராவ்

தென் மாவட்ட மழை, வெள்ள பாதிப்புல  1,000 வீடு இடிஞ்சிருக்கு. அவங்களுக்கெல்லாம் இந்த அம்மாவா  வீடு கட்டி கொடுக்கப்போறாங்க? சும்மா வேணும்னு பழி வாங்குறாங்க. இத்தனைக்கும் அவங்க தமிழ்நாட்ட சேர்ந்தவங்க தான். அவங்க இப்படி தவறா பேசலாமா? மக்கள் எவ்வளவு கஷ்டப்படுறாங்க. பணம் கொடுக்காம ஏமாத்துறதுக்கு இப்படிலாம் பேசுறாங்க.

நாராயணன்

தமிழகத்துல மொத்தம் 8 மாவட்டம் ரொம்ப பாதிப்பாகியிருக்கு. பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் ரூ.6000 நிவாரணம் அறிவிச்சாங்க. இது எல்லாருக்கும் வந்து சேர்ந்துருச்சு. இதுக்கெல்லாம் மாநில அரசுக்கு பணம் வேணும். மத்திய அரசு நிதி கொடுத்தா தானே தமிழக அரசு மக்களுக்கு நிவாரணம் வழங்க முடியும்.

ஜொய்ஸ்

பிரதமர் மோடி சரியில்லை. அவரால தான் நாங்கள் நிறைய பிரச்சனைகள சந்திக்கிறோம். விலைவாசி உயர்வுக்கு மத்திய அரசு தான் காரணம். வெள்ள நிவாரணமா தமிழகத்துக்கு ரூ.450 கோடி ஒதுக்குனது ரொம்ப கம்மி. கூடுதல் நிதி ஒதுக்கணும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

”மரியாதை குறைவாக எந்த வார்த்தையும் பேசவில்லை” : உதயநிதி ஸ்டாலின்

எண்ணூர் எண்ணெய் கசிவு: நிவாரணம் எவ்வளவு?

சந்திப்பு: கிட்டு

தொகுப்பு: செல்வம்

+1
1
+1
0
+1
0
+1
15
+1
0
+1
0
+1
1

4 thoughts on “தேசியப் பேரிடர் இல்லையா? நிதி கொடுக்க முடியாதா? நிர்மலா சீதாராமன் சொல்வது சரியா? – மக்கள் கருத்து!

  1. Elections to loksabha round the corner and political parties fight with each other quite natural. Ultimately people are sufferers.

  2. இந்த வாட்டியும் 40 பேர் எம்பி அனுப்பி வைத்து பெஞ்ச் துடைக்க நம்ம எல்லாரும் ஓட்டு போட்டு மீண்டும் அனுப்ப வேண்டும். இங்கே இருக்கிற வெள்ள நிவாரணத்தை பற்றி பேசாமல் பார்லிமென்ட் உள்ளே ஏன் வந்தாங்க மணிப்பூர் பிரச்சனை இதைப்பற்றி பேசிக்கொண்டு இருந்தால் இவங்களுக்கு ஓட்டு போட்ட நாம் அனைவரும் இன்னும் முட்டாள் நினைச்சுட்டாங்க . இந்த முறை ஓட்டுப் போடும் முன் திமுக எம் பி வேட்பாளர்கள் அனைவரும் எங்களால் சாதிக்க முடியவில்லை என்றால் ராஜினாமா செய்கிறோம் என்று ராஜினாமா கடிதம் மக்களிடம் வழங்க வேண்டும்

  3. என்னடா இது 200ரூக்கி இந்த முக்கு முக்குறீங்க. தேசிய பேரிடர் என்ற வார்த்தையை இந்திய அரசு எந்த மாநிலத்துக்கும் சூட்டவில்லை என்ற உண்மையை மறைத்த 200கிராக்கி ஸ்டாலின் சொம்புகளா.. என்னடா உருட்டு இது..

  4. வெள்ளத்தை தடுக்கவோ ஆறுகளை தூர் வாரவோ மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தரவோ 4000 கோடியை முழுமையாக செலவு செய்யாமலோ இருந்து முழுக்க தோல்வி கண்ட அரசு மத்திய அரசு மீது வீண் பழி போட்டு தப்பிக்க ஊடகம் காசு வாங்கி கொண்டு உதவி செய்வது மகா கேவலம்..
    மக்கள் முட்டாள்கள் அல்ல…காலம் காத்திருக்கிறது..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *