தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவது தொடர்பாக மத்திய அரசு 2 வாரத்தில் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து தமிழக மீனவர்களை கைது செய்து வரும் இலங்கை கடற்படைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரியும்,
இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுக்க உத்தரவிட கோரியும் உச்ச நீதிமன்றத்தில் கே.கே ரமேஷ் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இவ்வழக்கு கடந்த 2ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது இவ்விவகாரம் தொடர்பாக உரிய உத்தரவுகளை மத்திய அரசுக்கு பிறப்பிக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
அப்போது, நீதிபதிகள் வழக்கை முதலில் விசாரணைக்கு ஏற்றுக் கொள்வதாக கூறி வழக்கை இன்றைய (செப்டம்பர் 9) தினம் ஒத்தி வைத்திருந்தனர்.
இந்நிலையில் இன்று இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் விடுவிக்கபட்டனரா? என கேள்வி எழுப்பினர்.
அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “86 மீனவர்கள் இதுவரை விடுவிக்கப்படவில்லை.
தமிழக மீனவர்களை இந்திய கடல் எல்லைக்குள் வந்து இலங்கை கடற்படை தாக்கி கைது செய்கிறது. எனவே இதற்கு தீர்வு காண வேண்டும்” என கோரிக்கை வைத்தார்.
அப்போது நீதிபதிகள், ”இந்த விவகாரம் நீதிமன்ற விசாரணை வரம்புக்குள் வருமா?” என கேள்வி எழுப்பினர். அதற்கு மனுதாரர் தரப்பில் இந்திய கடல் எல்லைக்குள் நடப்பதால் உச்ச நீதிமன்றம் இதில் தலையிட முடியும் என தெரிவிக்கப்பட்டது.
அப்போது, மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ”இந்த விவகாரத்தில் உரிய தரவுகளுடன் பதிலளிக்க வேண்டியுள்ளது.
எனவே அது தொடர்பாக உரிய அமைப்பை கேட்டு தெரிவிக்கிறோம் ”என கூறினார். இந்த கோரிக்கையை ஏற்ற நீதிபதிகள் வழக்கை இரண்டு வாரத்திற்கு ஒத்தி வைத்தனர்.
மேலும் இந்திய மீனவர்கள் எத்தனை பேர் இலங்கை சிறையில் உள்ளனர்? எத்தனை பேர் விடுவிக்கப்பட்டுள்ளார்கள்? என்பதையும் மத்திய அரசு தெரிவிக்க வேண்டும் என நீதிபதிகள் கூறியுள்ளனர்.
கலை.ரா
மீனவர்கள் கைது: வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்!