இலங்கை to தமிழ்நாடு: போதை மருந்து கடத்தல் மன்னன் கஞ்சிபானி இம்ரான் எங்கே?
தமிழகம் முழுவதும் கடலோர காவல்துறை அதிகாரிகள் அனைவரும் தற்போது உஷார் நிலையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இலங்கையின் மாஸ்டர் மைண்ட் போதைப் பொருள் கடத்தல் மன்னன், நிழல் உலக தாதா என்று பல்வேறு பெயர்களால் அழைக்கப்படும் முகமது நஜிம் முகமது இம்ரான் என்ற கஞ்சிபானி இம்ரான் தமிழகத்தில் பதுங்கி இருப்பது தான் அதற்கு காரணம்.
துபாயில் கைதான கஞ்சிபானி!
சர்வதேச போதைப்பொருள் கடத்தல் வழக்கில் இலங்கை குற்றப்புலனாய்வு அதிகாரிகளால் பல ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த கஞ்சிபானி இம்ரான், கடந்த 2019-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 28-ஆம் தேதி துபாயில் உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் தனது கூட்டாளி மாகந்துரே மதூஷ் உடன் கைது செய்யப்பட்டார்.
இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட கஞ்சிபானி இம்ரான் அங்குள்ள பொஸ்ஸா சிறையில் அடைக்கப்பட்டார். 2019 ஆகஸ்ட் 23-ஆம் தேதி கொழும்பு நீதிமன்றம் அவருக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.
சிறையில் இம்ரான் அதிகாரிகளுக்கு அச்சுறுத்தல் கொடுத்ததோடு, அவர்களை பணி இடை நீக்கம் செய்யும் அளவிற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.
சிறையில் இருந்தபோது காவல்துறை அதிகாரிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக அவர் மீது பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது
சிறையில் உண்ணாவிரதம்!
மறைமுகமாக சிறையில் செல்போன் பயன்படுத்தி வந்த கஞ்சிபானி இம்ரானிடமிருந்து செல்போன் மற்றும் சிம் கார்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கஞ்சிபானி இம்ரானுக்கு உணவு பொட்டலத்தில் வைத்து இரண்டு தொலைபேசி மற்றும் சார்ஜர்களை கொடுத்ததாக அவரது தந்தை மற்றும் சகோதரரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் இந்த சம்பவத்தில் கவனக்குறைவாக செயல்பட்ட ஜெயிலர் மற்றும் சிறைக்காவலர்கள் இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
கொரோனா காலத்தில் உறவினர்கள் சந்திக்க முடியாமை, தொலைபேசி வசதியினை அகற்றியது, கைதிகளை சந்திக்க வருபவர்களை சோதனை செய்த காரணத்தினால் கஞ்சிபானி இம்ரான் உள்ளிட்ட 40 பேர் சிறையில் கடந்த 2020-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 25-ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகளின் பேச்சுவார்த்தைக்கு பிறகு ஜீன் 26-ஆம் தேதி தங்களது உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட்டனர்.
இந்நிலையில், கடந்த டிசம்பர் 20-ஆம் தேதி கொழும்பு நீதிமன்ற மாஜிஸ்திரேட்டு ஹர்ஷனா கேகுனவாலா கஞ்சிபானி இம்ரானுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். மேலும், அவர் வெளிநாடுகளுக்கு செல்வதற்குத் தடை விதித்தார்.
தமிழகத்தில் ஊடுருவல்!
ஜாமீனில் வெளியே வந்த கஞ்சிபானி இம்ரான் மற்றும் அவரது கூட்டாளிகள் இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு வந்து பதுங்கி இருப்பதாக மத்திய புலனாய்வு அதிகாரிகள் தமிழக உளவுத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
2022-ஆம் ஆண்டு டிசம்பர் 25-ஆம் தேதி ராமநாதபுரம் கடற்கரையில் இறங்கிய கஞ்சிபானி இம்ரான் மற்றும் அவரது கூட்டாளிகளை தமிழக கடலோர காவல்துறை அதிகாரிகள் தேடி வருகின்றனர்.
கஞ்சிபானி இம்ரான் மாறுவேடத்தில் நீதிமன்றத்தை விட்டு வெளியேறி தலைமன்னாருக்கு சென்றதாகவும் அங்கிருந்து ராமேஸ்வரத்திற்கு ஊடுருவுவதற்கான ஏற்பாடுகளை அவரது கூட்டாளிகள் செய்ததாகவும் மத்திய புலனாய்வு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இம்ரான் குறித்து மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தி இந்து பத்திரிகையிடம் தெரிவிக்கும்போது, “ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானைத் தளமாகக் கொண்ட ஹெராயின் மற்றும் கோகோயின் சப்ளையர்களுடன் வலுவான தொடர்பு கொண்டவர் போதைப்பொருள் மன்னன் கஞ்சிபானி இம்ரான்.
இவர் இலங்கையில் பல வழக்குகளை எதிர்கொண்டுள்ளார். துபாயில் கடந்த 2019-ல் இலங்கை குற்றப்புலனாய்வு காவல்துறை அவரை கைது செய்தது. அவரது கும்பல் கடல் எல்லை வழியாக போதைப்பொருள் கடத்தலில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது,” என்று தெரிவித்தார்.
இம்ரான் இந்தியாவுக்குத் தப்பிச் சென்றது குறித்து இலங்கையில் இருந்து முறையான தகவல் எதுவும் வெளிவரவில்லை என்றாலும், உளவுத்துறைக்கு நம்பகமான தகவல் கிடைத்திருப்பதாக பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி ஒருவர் தி இந்துவிடம் கூறியுள்ளார்.
இதனால் தமிழக கடலோர மாவட்டங்களில் உள்ள கமிஷனர்கள், காவல்துறை கண்காணிப்பாளர்களுக்கு சந்தேகப்படும் படியான நபர்களை கண்டுபிடித்தால் உடனடியாக விசாரிக்க வேண்டும் என்று உளவுத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகம் பயங்கரவாதிகளின் புகலிடம்!
இந்தநிலையில், திமுக ஆட்சிகாலத்தில் தமிழகம் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் புகலிடமாக மாறியுள்ளது என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “திமுக ஆட்சிகாலத்தில் தமிழகம் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் பயங்கரவாதிகளின் புகலிடமாக மாறியுள்ளது. துரதிர்ஷ்டவசமாக, தமிழக மாநில காவல்துறை மற்றும் உளவுத்துறை, கோபாலபுரம் குடும்பத்தின் அரசியல் எதிரிகளை சதி செய்வதில் மும்முரமாக ஈடுபட்டு, தங்கள் கடமைகளை மறந்துவிட்டனர்.
கோயம்புத்தூர் தற்கொலை குண்டுவெடிப்புக்கு முன் மத்திய புலனாய்வு அமைப்பு தமிழக உள்துறைக்கு தகவல் கொடுத்தார்கள். தற்போது, இலங்கையின் போதைப்பொருள் கடத்தல்காரன் முகமது இம்ரான் இந்தியாவுக்குள் நுழைவதைப் பற்றி மத்திய உளவுப் பிரிவினரிடம் இருந்து குறிப்பிட்ட எச்சரிக்கையைப் பெற்ற போதிலும், தமிழக அரசின் உளவுத்துறை எதுவும் செய்யவில்லை.
கஞ்சிபானி இம்ரான் இலங்கையில் ஜாமீனில் வெளியே வந்த பிறகு, கிறிஸ்துமஸ் சமயத்தில் இந்தியாவிற்குள் பதுங்கி இருக்கலாம் என்று மத்திய உளவுத்துறை வெளியிட்ட எச்சரிக்கை குறித்து தி இந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. தமிழக முதல்வர் ஸ்டாலின் அவரது கடந்த கால தடுமாற்றங்களை விஞ்சும் அளவிற்கு தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
துரதிர்ஷ்டவசமாக, இந்த தகுதியற்றவர்களைத் தேர்ந்தெடுத்ததற்கு தமிழக மக்கள் விலை கொடுக்க வேண்டியுள்ளது. திமுக அரசாங்கம் பேரழிவிற்கும், தவறான நிர்வாகத்திற்கும் எடுத்துக்காட்டாக உள்ளது.” என்று தெரிவித்துள்ளார்.
எல்லை பாதுகாப்பு குறைபாடு!
முகமது இம்ரானை உடனடியாக கைது செய்து நாடு கடத்த வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “உலகின் மிகக்கொடிய போதைமருந்து கடத்தல் கும்பல் தலைவனான முகமது நாஜிம் முகமது இம்ரான் தமது கூட்டாளிகளுடன் இலங்கையிலிருந்து தமிழ்நாட்டிற்கு ஊடுருவியிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் பெரும் அதிர்ச்சியளிக்கின்றன. எல்லையோர பாதுகாப்பு குறைபாடுகளையே இது காட்டுகிறது.
முகமது இம்ரான் இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு தப்பி வரக்கூடும் என்று தமிழக உளவுத்துறைக்கு மத்திய உளவு அமைப்புகள் எச்சரிக்கை விடுத்திருந்ததாகக் கூறப்படுகிறது. அதற்குப் பிறகும் கடலோரக் காவல்படை, தமிழகக் காவல்துறையின் பாதுகாப்பை மீறி முகமது இம்ரான் தமிழகத்தில் நுழைந்தது எப்படி?
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் செயல்பட்டு வரும் ஹெராயின், கோகெய்ன் கடத்தல் கும்பல்களுடன் முகமது இம்ரானுக்கு வலிமையான பிணைப்பு உண்டு. 2019-ஆம் ஆண்டில் துபாயில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட இம்ரான், அங்கு பிணையில் விடுதலையான நிலையில் தப்பியுள்ளான்.
தமிழ்நாட்டில் போதைமருந்து கலாச்சாரம் பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. போதைப்பொருள் கடத்தல் அதிகரித்துள்ளது. இத்தகைய சூழலில் முகமது இம்ரானின் ஊடுருவல் நிலைமையை மேலும் மோசமாக்கக்கூடும். முகமது இம்ரானை உடனடியாக கைது செய்து நாடு கடத்த வேண்டும்.” என்று பதிவிட்டுள்ளார்.
திருச்சி மத்திய சிறை வளாகத்தில், விடுதலை புலிகள் இயக்கத்திற்குப் புத்துயிரூட்டுவதற்காக ஆயுதங்கள் மற்றும் போதை பொருட்களை கடத்த முயன்ற 9 பேரை சமீபத்தில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்துள்ள நிலையில், இம்ரான் கஞ்சிபானி தமிழகத்தில் பதுங்கி இருப்பதாக உளவுத்துறைக்கு கிடைத்த தகவல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
இதனால் ராமநாதபுரம், தூத்துக்குடி, வேதாரண்யம் பகுதிகளில் கடலோர காவல்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். கஞ்சிபானி இம்ரான் தமிழக ஊடுருவல் அரசியல் களத்திலும் மிக முக்கியமான விவாதப் பொருளாக தற்போது மாறியுள்ளது.
செல்வம்
வித்தியாசமாக கேட்ச் பிடித்த வீரர்: வைரல் வீடியோ!
அதிகாலையில் சோகம்: பத்திரிக்கையாளர் மரணம்!