நாளை (மார்ச் 1) தமிழ்நாடு முழுவதும் உள்ள 3302 தேர்வு மையங்களில் 7.25 லட்சம் மாணவ, மாணவிகள் +2 பொதுத்தேர்வு எழுதுகின்றனர்.
தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தின் கீழ் 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது . அதன்படி, இந்த 2023-2024 ஆண்டுக்கான +2 பொதுத்தேர்வு நாளை (மார்ச் 1) தொடங்கி மார்ச் 22-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
முதல்நாளான நாளை தமிழ் உள்ளிட்ட மொழிப்பாடத்துக்கான தேர்வு நடைபெறுகிறது. முறைகேடுகளை தடுக்க அறைக்கண்காணிப்பாளர் பணியில் 47 ஆயிரம் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதேபோல 4,200 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இது மட்டுமின்றி மாவட்ட ஆட்சியர், முதன்மைக்கல்வி அலுவலர், வருவாய்த்துறை அதிகாரிகள் தலைமையிலும் சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் தேர்வு மையங்களில் முறையான இருக்கை, குடிநீர், மின்சாரம், காற்றோட்டம், வெளிச்சம், கழிப்பறை வசதிகள் சிறப்பான முறையில் செய்யப்பட்டுள்ளது. தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மட்டுமின்றி ஆசிரியர்களுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
தேர்வு அறைக்குள் செல்போன் உள்ளிட்ட மின் சாதனப்பொருட்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ஹால் டிக்கெட்டுகளில் உள்ள விதிமுறைகளை மாணவர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் எனத் தேர்வுத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இது மட்டுமின்றி தேர்வுகள் காலை 10.15 முதல் மதியம் 1.15 வரை நடக்க உள்ளது. தேர்வு தொடங்கும் முன் மாணவர்களுக்கு 15 நிமிட வினாத்தாள் படிக்கும் நேரம் வழங்கப்படும். அதனால், தேர்வு தொடங்கும் நேரத்திற்கு முன்னதாக மாணவர்கள் தேர்வு மையத்தை அடைய அறிவுறுத்தப்படுகிறார்கள்.
தேர்வு எழுதும் மாணவர்கள் ஹால் டிக்கெட் இல்லாமல் தேர்வு அறைக்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும், அட்மிட் கார்டு மற்றும் பள்ளி அடையாள அட்டையை எடுத்துச் செல்வது கட்டாயம் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 6-ம் தேதி அறிவிக்கப்படும்.
இதற்கிடையில், 11-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 4-ம் தேதி தொடங்கி மார்ச் 25-ம் தேதி வரை நடைபெற உள்ளது. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 26 தொடங்கி ஏப்ரல் 8-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
-இரசிக பிரியா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பா ரஞ்சித்துடன் இணைந்த ஜிவி பிரகாஷ்
குடித்து விட்டு கார் ஓட்டினேனா? ‘எதிர்நீச்சல்’ மதுமிதா வெளியிட்ட வீடியோ!