தமிழ்நாட்டில் சிபிஎஸ்இ மற்றும் ஐ.சி.எஸ்.இ உள்ளிட்ட அனைத்து வகை பள்ளிகளிலும் தமிழ் கட்டாய மொழி பாடமாக இருக்க வேண்டும் என தனியார் பள்ளிகள் இயக்குநர் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் தமிழ் மொழி பாடத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக அரசு பள்ளி உட்பட தனியார் பள்ளிகளில் தமிழ் மொழி பாடம் ஏற்கனவே கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் ஒரு சில பள்ளிகளில் தமிழ் பாடத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படாமல் உள்ளது. இதனை கருத்தில் கொண்டு சிபிஎஸ்சி மற்றும் ஐ.சி.எஸ்.இ உள்ளிட்ட அனைத்து வகை பள்ளிகளிலும் தமிழ் மொழி தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
எனவே அனைத்து தனியார் பள்ளிகளும் மாநில பாடத்திட்டத்தில் தமிழ் பாடத்தை கற்பிக்க ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்று தனியார் பள்ளிகள் இயக்குனர் நாகராஜன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனியார் பள்ளி இயக்குனரகம் வெளியிட்ட சுற்றறிக்கையில், “ தமிழ் பாடத்தை கட்டாய பாடமாக்க வேண்டும் என தமிழக அரசு கடந்த 2006 ஆம் ஆண்டு உத்தரவிட்டது. ஆனால், தனியார் பள்ளிகள் தமிழை கட்டாய பாடமாக்க மறுத்து காலம் தாழ்த்தி வந்த நிலையில் கடந்த 2015 ஆம் ஆண்டு ஒன்றாம் வகுப்பு முதல் அனைத்து தனியார் பள்ளிகளிலும் தமிழை கட்டாய பாடமாக்கி மீண்டும் அரசு உத்தரவிட்டு இருந்தது.
அதன்படி, 2015 – 16ஆம் ஆண்டில், அனைத்து வகை பள்ளிகளிலும், ஒன்றாம் வகுப்பில் தமிழ் கட்டாய பாடமானது. அதற்கு அடுத்த கல்வியாண்டுகளில் ஒவ்வொரு வகுப்பாக படிப்படியாக தமிழ் கட்டாயபாடமாக அமல்படுத்தப்பட்டு வருகிறது.
கடந்த கல்வி ஆண்டில் எட்டாம் வகுப்பு வரை,, தமிழ் கட்டாய பாடம் என்று அமலானது. இந்நிலையில் 2023 – 24ஆம் கல்வி ஆண்டில் ஒன்பதாம் வகுப்பு வரையிலும், 2024 – 25ஆம் ஆண்டில் 10-ம் வகுப்பு வரையிலும் தமிழ் கட்டாயமாகிறது.
எனவே தமிழ்நாட்டில் செயல்படும் சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ உள்ளிட்ட அனைத்து வகை பள்ளிகளிலும், 2024 – 25ஆம் கல்வி ஆண்டில், 10-ஆம் வகுப்பு வரை தமிழ் கட்டாய பாடமாக பயிற்றுவிக்க வேண்டும். இந்த மாணவர்கள், பொது தேர்விலும், தமிழை ஒரு தேர்வாக எழுத வேண்டியது கட்டாயமாகிறது. இதற்கான தேர்வு முறை மற்றும் பாடத்திட்டம் போன்றவை விரைவில் வடிவமைக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர்களுக்கென தனியார் பள்ளிகள் முறையான பாடத்திட்டத்தை தயார் செய்து ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும் என்று தற்போது தனியார் பள்ளிகள் இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா
முதல்வருடன் சிங்கப்பூர் சென்றவர்கள் யார் யார்?
குடிசை பகுதி டூ சர்வதேச மாடல்: இணையத்தை கலக்கும் தாராவி சிறுமி!