தமிழ்மொழி வளர்ச்சி, சமூக முன்னேற்றத்துக்கு பாடுபட்டதற்காக மறைந்த மற்றும் வாழும் தமிழ் அறிஞர்கள் எட்டு பேரின் நூல்களை தமிழக அரசு நாட்டுடைமை ஆக்கியுள்ளது.
சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (டிசம்பர் 21) தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் விழா நடைபெற்றது. இதில், தொழில்கள், தமிழ் ஆட்சிமொழி மற்றும் தமிழ்ப் பண்பாடு, தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
மறைந்த நெல்லை கண்ணன், கந்தர்வன், சோமலே, விருதுநகர் ராசய்யா, தஞ்சை பிரகாஷ், விடுதலை ராஜேந்திரன், நெல்லை செ.திவான், நா.மம்மது ஆகிய 8 தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டது.
தமிழ் அறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டதை அடுத்து அவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் நூல் உரிமை தொகையை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

அதன்படி, மறைந்த நெல்லை கண்ணனின் வாரிசுகளுக்கு 15 லட்ச ரூபாயும், கந்தர்வன், சோமலே, ராசய்யா, தஞ்சை பிரகாஷ் ஆகியோரின் வாரிசுகளுக்கு தலா 10 லட்ச ரூபாயும் வழங்கப்பட்டது.
வாழும் தமிழ் அறிஞர்களான நெல்லை செ.திவான், விடுதலை ராஜேந்திரன், நா.மம்மது ஆகியோருக்கு தலா 15 லட்ச ரூபாயை நூல் உரிமைத்தொகையாக முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.
இதுதவிர, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில், ‘தமிழ் இலக்கியவியல்’ என்ற தனித்துறை உருவாக்கிட, 5 கோடி ரூபாய் நிதியையும் அளித்தார். 5 கோடி ரூபாய்க்கான காசோலையை முதல்வர் மு.க.ஸ்டாலின், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சாந்திஸ்ரீ துலிப்புடி பண்டிட்டிடம் வழங்கினார்.
ஜெ.பிரகாஷ்