ஸ்ரீராம் சர்மா
ஒருபுறமாய் தமிழர்கள்
மறுபுறமாய் கன்னடர்கள்
இருவருக்கும் ஓடிவரும்
காவிரி வேண்டும் !
– அதை
மறுதலிக்கும் போதெல்லாம் மானுடம் நோகும் !
***
தமிழருக்கும் கன்னடர்க்கும்
ஆதிபகை ஏதுமில்லை
மொழிவழியே இருவருக்கும்
உறவுண்டாம் கொள் !
– அதை
வழிமொழியா திருப்போரை பிழையென்றே கொள் !
***
ஆயிரத்து தொள்ளாயிரத்
திருபத்து நான்காவது
ஆண்டுபோல பின்னப்பட்ட
சதிவலை தானே !
– அது
நூற்றாண்டுக் காலமான கெடுவினைதானே !
***
விடுதலைக்கு முன்பாக
பின்பாக இந்த நிலம்
கெடுதலையை கண்டுநொந்த காரணத்தாலே
– அண்ணா
முடிவு ஒன்றை எடுத்தாரே நா வளத்தாலே !
***
திராவிடமாய் வாழ எண்ணி
காலமெலாம் கலைஞரவர்
முரசொலித்து நின்றதுஏன் புரிகின்றதா ?
– அதன்
விவரமதில் ஏதேனும் பிழையுள்ளதுவா ?
***
இந்தியமாம் பெருமண்ணில்
மத்தியிலே ஓராட்சி
மட்டும்தான் இருக்க வேண்டும் என்போர்களே !
– எங்கள்
டெல்ட்டாவின் வாழ்விற்கோர் வழிசொல்வீரா ?
***
தமிழகத்து பயிர்களுக்கு
உரித்தான நீரிறைக்க
உமக்கேதும் தெம்பில்லை என்கின்றோமே !
– இல்லை
உண்டுஎன்று இனியேனும் எழுவீர்களா ?
***
தமிழகத்து முதலமைச்சர்
புகைப்படம் வைத்து
சில்லுண்டிச் சிலரங்கே நெருப்பேற்றினரே !
-அந்தப்
பொல்லாப் பொறுக்கிகளை சிறை வைப்பீரா?
***
இருபுறத்தும் பகையில்லை
எல்லோரும் ஓர்மக்கள்
எனவுரைத்து நலம் காண முன் வருவீரா ?
– இல்லை
போகும் வழி போகவிட்டு நின்றிருப்பீரா ?
***
காவிரிக்கு கதியில்லை
நல்ல பயிர் வாழவில்லை
காலமெலாம் விவசாயி மடிந்தப் போதும்
– அதை
கண்ணுறவோர் நாதியில்லை கோரம் கோரம் !
***
சோறுபோட்ட விவசாயி
சாகவழி விட்டபின்பு
வாழுமொரு வாழ்க்கை பெரும் பாரம் பாரம் !
– இந்தப்
பாரதம் பின் எப்படிங்க புனிதம் ஆகும் ?
***
காவிரியும் தென்பெண்ணை
பாலாறும் பொருநை நதி
யாவையுமே தமிழகத்தின் சொத்தல்லவா !
– பதினொரு
மாவட்டம் பாழாகப் பார்த்திருப்போமா ?
***
கன்னடரே, சோதரரே…
நீங்களிங்கே ; நாங்களங்கே !
ஒருவர்மீ தொருவர்சாய்ந்து வாழ்ந்திருக்கிறோம் !
– இதில்
பிரிவினைகொண் டெனிங்கே போர் செய்கிறோம் ?
***
எல்லையிலே ஆயிரமாய்
உந்து ஊர்த்திகள் நிற்க
ஆயிரங்கோடி நட்டம் இருபுறத்திலாம் !
– ஐயா
லாக்டவுனை கண்டபின்பும் இதுதகும் தானா ?
***
தாய்தமிழாள் தானவளோ
மோனகன்னடக் கிளியோ
ஏதுவாக காவிரியை நாமழைத்தாலும்
– அவள்
தாயுள்ளம் வாடும்வயல் அதையே நாடும் !
***
ஆகையினால் சொல்லுகிறேன்
ஞானமுள்ள கன்னடரே
கொஞ்சம்எனை தயவுசெய்து கேளுங்களேன் !
– எங்கள்
நஞ்சைப் பயிர்வாழ வழி தாருங்களேன் !
***
பாழுமிந்த மனித உயிர்
அதிகபட்சம் பூமியிலே
நூறாண்டு மட்டும்தான் வாழ்ந்திடக் கூடும் !
– பயிரோ
ஆயிரமாண்டும் கடக்கும் ; வாழ்ந்திட வைக்கும் !
***
போகட்டும் போகட்டும்
போனவையெல்லாம் போக
வாழட்டும் அடுத்தடுத்த தலைமுறைதான் !
– அதில்
சேரட்டும் கன்னடத்து பெருந்தனம்தான் !
***
என்னபலன் கண்டாலும்
அங்கமெலாம் கூச்சரிக்க
வந்து வந்து அன்பு பாடி ஏங்கி நிற்பேன் !
– கன்னட
காற்றுக்குள் கவிதை பாடி தூங்க வைப்பேன் !
***
தெண்டனிட்டு வேண்டுகிறேன்
கன்னடத்து சோதரரே…
பாசமுடன் திராவிடத்தின் வாசனை பாரும் !
– அதில்
சாரமில்லை எனில்என்னை தூக்கிலும் போடும் !
***
கட்டுரையாளர் குறிப்பு:
எழுத்தாளர், இயக்குநர், பாடலாசிரியர், நாடகவியலாளர், வரலாற்று ஆராய்ச்சியாளர் என்று பன்முகத் திறமை பெற்றவர். 1994லேயே தனது ‘வெட்டியான்’ என்ற குறும்படத்துக்காக யுனெஸ்கோ சர்வதேச விருதைத் தமிழுக்காகப் பெற்றுத் தந்த முதல் இந்திய இயக்குநர். 300 ஆண்டுகளாக மறைக்கப்பட்டிருந்த வேலு நாச்சியாரின் வீர வரலாற்றை 12 ஆண்டுக் கால ஆய்வுக்குப் பிறகு மீட்டெடுத்து, அதை தியேட்டர் நாடகமாக உலகமெங்கும் நிகழ்த்திக்கொண்டிருக்கிறார். அதைத் திரைப்படமாக்கும் வேலையில் இருக்கிறார். இந்த நாடகத்துக்காக அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தின் சிறப்பு விருதைப் பெற்றிருக்கிறார். திருவள்ளுவர் திரு ஓவியத்தை உலகுக்குத் தந்த ஓவியப் பெருந்தகை கே.ஆர்.வேணுகோபால் சர்மா அவர்களின் இளைய மகன்.
பின்னால் வந்த பைக்… திடீரென திறக்கப்பட்ட கார் கதவு… பறிபோன உயிர்!
கூட்டணி முறிவு: கருப்பண்ணன் கருத்துக்கு கே.பி.முனுசாமி மறுப்பு!