டிஜிபி மாற்றம் நடக்கும்போதெல்லாம் காவல்துறையில் முதல்கட்ட, இரண்டாம் கட்ட அதிகாரிகள், ஏன் சில நேரம் கீழ் நிலைகள் வரை மாற்றங்கள் நடக்கும்.
அமைச்சர் உதயநிதியின் ஆதரவோடும் ஆசியோடும் சென்னை மாநகர கமிஷனராக இருந்த சங்கர் ஜிவால் தமிழ்நாட்டின் புதிய டிஜிபி ஆனபிறகு… உதயநிதிக்கு தோதான பல காவல்துறைகள் புதிய உயரத்துக்கு செல்லப் போகிறார்கள் என்கின்றன காவல்துறை வட்டாரங்கள்.
இந்த வகையில் காவல்துறையின் பல்வேறு மட்டங்களில் மாற்றங்கள் நடக்க இருக்கின்றன. அதிலும் சென்னையை ஒட்டிய தாம்பரம் மாநகர காவலில் மகா மாற்றம் இருக்கப் போகிறது என்கிறார்கள் காவல்துறை வட்டாரங்களில்.
“இப்போது தாம்பரம் மாநகர கமிஷனராக அமல்ராஜும், கூடுதல் கமிஷனராக மூர்த்தியும் இருக்கிறார்கள். பள்ளிக்கரணை துணை ஆணையராக ஜோஸ் தங்கையாவும், தாம்பரம் துணை ஆணையராக அதிவீரபாண்டியனும் பொறுப்பு வகிக்கிறார்கள்.
ஒவ்வொரு மாவட்ட எஸ்.பியும், மாநகர கமிஷனரும் தனித்தனியாக வாட்ஸ் அப் குரூப் வைத்திருக்கிறார்கள்.
இந்த வகையில் தாம்பரம் கமிஷனர் அமல்ராஜின் வாட்ஸ் அப் குரூபில் கூடுதல் ஆணையர் மூர்த்திக்கும் துணை ஆணையர்களான ஜோஸ் தங்கையா, அதிவீரபாண்டியன் இவர்களிடையே முட்டல் மோதல் தொடர்ந்து நடந்து வந்தது.
அதாவது களத்தில் நடக்கும் இவர்களிடையேயான மோதல் வாட்ஸ் அப் குரூப்பில் வெளிப்படையாக வெடித்தது.
இந்நிலையில் குற்றச் சம்பவங்கள் அதிகரித்துவிட்டன என இரு டி.சி.களுக்கும் கூடுதல் கமிஷனர் மெமோ கொடுக்கிறார்.
அதற்குக் காரணம் இவர்கள் வழக்கறிஞர்களோடு தொடர்பில் இருந்துகொண்டு குற்றங்களை ஊக்குவிக்கிறார்கள் என்றும் குறிப்பிடுகிறார். இந்த மெமோ காவல்துறை அதிகாரிகளுக்கான அந்த வாட்ஸ் அப் குரூப்பில் பகிரப்பட்டது.
இதனால் அதிருப்தி அடைந்த துணை ஆணையர்கள் இருவரும், “இந்த மெமோ எங்கள் இருவருக்குமா அல்லது குரூப்பில் உள்ள அனைவருக்குமா? இப்படியெல்லாம் வெளியே விடுவது முறையா?” என்று கேட்டனர். இத்தனைக்கும் தாம்பரம் காவல்துறையின் அட்மின் ஆன தாம்பரம் கமிஷனர் அமல்ராஜ் இதை கண்டுகொள்ளவே இல்லை.
புதிய டிஜிபிக்கு இதுபற்றிய தகவல்கள் போக அவர் அதிர்ச்சி அடைந்திருக்கிறார். தாம்பரத்தை ஒட்டுமொத்தமாக புரட்டிப் போட சங்கர் ஜிவால் முடிவெடுத்துவிட்டார். விரைவில் தாம்பரத்தின் அத்தனை காவல்துறை அதிகாரிகளும் மாற்றப்படுவார்கள்” என்கிறார்கள் காவல் கோட்டமான வெள்ளை மாளிகையில்.
தாம்பரம் மட்டுமன்றி தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் முக்கியமான காவல்துறை அதிகாரிகளும் அடுத்தடுத்து மாற்றப்பட இருக்கிறார்கள்.
-வணங்காமுடி
விஜய் உத்தரவின் பேரில் மிரட்டல்: டிஜிபியிடம் புகார்!
டிஜிட்டல் திண்ணை: செந்தில் பாலாஜியை ஒதுக்குகிறாரா ஸ்டாலின்?