சென்னை அருகே இன்று (செப்டம்பர் 28) காவலரைக் கத்தியால் வெட்டிவிட்டுத் தப்பிக்க முயன்ற ரவுடியை துப்பாக்கிச்சூடு நடத்தி மடக்கிப் பிடித்தது குறித்து தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் விளக்கம் அளித்துள்ளார்.
இன்று காலை சோமங்கலம் காவல் ஆய்வாளர் சிவக்குமார் தலைமையிலான போலீஸ் குழு பூந்தண்டலம் காட்டுப்பகுதிக்குள் பதுங்கியிருந்த சச்சின் என்ற ரவுடியை பிடிக்கச் சென்றனர்.
அப்போது ரவுடி, காவலர் பாஸ்கரின் இடது கையில் கத்தியால் பலமாக வெட்டி விட்டு தப்பிக்க முயன்றார்.
இதனால் காவல் ஆய்வாளர் துப்பாக்கிச் சூடு நடத்தி ரவுடியை மடக்கிப் பிடித்தார்.
வெட்டுக் காயம் ஏற்பட்ட காவலர் பாஸ்கர் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ரவுடி சச்சின் மேல் சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
இந்நிலையில் தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் செய்தியாளரைச் சந்தித்து நடந்த சம்பவம் குறித்து விளக்கமளித்தார்.
“காட்டுப்பகுதிக்குள் பதுங்கியிருந்த ரவுடி சச்சினை பிடிக்க முற்பட்டபோது அவர்கள் கையில் வைத்திருந்த நாட்டு வெடிகுண்டைப் போலீசை நோக்கி வீசினர்.
ஆனால் வெடிகுண்டு வெடிக்காததால், தொடர்ந்து ரவுடியை பிடிக்க முயன்ற போது காவல் ஆய்வாளருடன் சென்ற காவலர் பாஸ்கரை ரவுடி கத்தியால் வெட்டினார்.
காவல் ஆய்வாளர் சிவக்குமார் வெட்டுப்பட்ட காவலரைப் பாதுகாப்பதற்காகவும், ரவுடியை பிடிப்பதற்காகவும் குற்றவாளியின் காலில் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தார்.
சச்சின் ஒரு கொலைக் குற்றவாளி மற்றும் அவர் மீது ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளன.
தற்போது சச்சின் எதோ ஒரு நபரைக் கொலை செய்வதற்காக வந்து காட்டுப்பகுதிக்குள் பதுங்கியிருப்பதாகத் தெரியவந்தது.
அவனுடன் வந்த பரத் என்ற மற்றொரு குற்றவாளி தப்பித்து ஓடிவிட்டார். தப்பி ஓடியவனைப் பிடிப்பதற்காகவும் முயற்சிகள் மேற்கொண்டு வருகிறோம்.
இதே போன்று கொலை, வழிப்பறி, குழுவாகச் சேர்ந்து கொலை செய்வது ஆகிய குற்றங்களில் ஈடுபடுபவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.
குற்றவாளியையும் பாதுகாப்பாகப் பிடிக்க வேண்டும் மற்றும் காவலரையும் பாதுகாக்க வேண்டும் என்பதற்காகத் தான் காவல் ஆய்வாளர் துப்பாக்கிச் சூடு நடத்தினார்.
காவல் ஆய்வாளர் மொத்தம் 5 முறை துப்பாக்கியால் சுட்டார். அதில் இரண்டு குண்டுகள் மட்டுமே குற்றவாளியின் காலில் பட்டது.
பிடிபட்ட குற்றவாளியிடமிருந்து அறிவாள், நாட்டு வெடிகுண்டுகள் போன்ற ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். இன்று மாலைக்குள் தப்பியோடிய மற்றொரு குற்றவாளியைப் பிடிக்க வேண்டும் என்று தீவிரமாகச் செயல்பட்டு வருகிறோம்” என்று கூறினார்.
மோனிஷா
”தடையை சட்ட ரீதியாக எதிர்கொள்வோம்” : பிஎஃப்ஐ தமிழக தலைவர்!
ரசிகர்களைச் சந்தித்த விஜய்: வைரலாகும் வீடியோ!