“இசை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களிடம் விசாரணை” – தாம்பரம் காவல் ஆணையர்

Published On:

| By Selvam

ஏ.ஆர்.ரகுமான் இசைக்கச்சேரியில் ஏற்பட்ட இடையூறுகள் குறித்து நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களிடம் விசாரணை நடத்தப்படும் என்று தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் தெரிவித்துள்ளார்.

சென்னை ஈசிஆரில் பனையூர் அருகே ஆதித்யராம் மைதானத்தில் ஏ.ஆர்.ரகுமானின் மறக்குமா நெஞ்சம் இசைக்கச்சேரி நேற்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் ரசிகர்கள் கூட்டம் அதிகரித்ததாலும் இருக்கைகள் கிடைக்காததாலும் திண்டாடினர். இதனால் அதிருப்தியில் இசைக்கச்சேரியை காணாமல் பலர் வெளியேறினர். மேலும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த நிறுவனம் கார்பார்க்கிங், கழிப்பிடம் போன்ற வசதிகளை முறையாக செய்து தரவில்லை என்றும் இணையத்தில் ரசிகர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

இந்தநிலையில் நிகழ்ச்சி நடைபெற்ற ஆதித்யராம் மைதானத்தில் தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் இன்று ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இசை நிகழ்ச்சி சரியாக ஒருங்கிணைப்பு செய்யப்பட்டதா என்பதை ஆய்வு செய்வதற்காக வந்தோம். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களிடம் நேற்று நடைபெற்ற சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த உள்ளோம். மேலும் அவர்களிடம் ஆலோசனை செய்து எதிர்காலத்தில் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைப்பு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்த உள்ளோம். காவல்துறை அதிகளவில் இருந்ததால் தான் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமலும் வாகன போக்குவரத்து நெரிசலை சரிசெய்யவும் முடிந்தது” என்று தெரிவித்தார்.

செல்வம்

இமானுவேல் சேகரன் நினைவு நாள்: மரியாதை செலுத்தியவர்கள் யார் யார்?

ரஜினிகாந்தை இயக்குகிறார் லோகேஷ் கனகராஜ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share