சென்னையில் சிறுமியை நாய் கடித்து குதறியதன் எதிரொலியாக, செல்லப் பிராணிகளை வளர்ப்போருக்கு மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த மே 5ஆம் தேதி நுங்கம்பாக்கத்தில் உள்ள பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுமி சுரக்ஷாவை, 2 ராட்விலர் இன நாய்கள் கடித்து குதறியது. இதனால் படுகாயமடைந்த சிறுமி தற்போது அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சிறுமியை கடித்த நாய்களை வளர்த்து வருவது அப்பகுதியில் வசித்து வரும் புகழேந்தி என்பது தெரியவந்தது. அவர் மீது ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டார். தற்போது அவர் பிணையில் உள்ளார்.
அவர் வளர்த்த நாய்கள் மதுரைக்கு அழைத்து செல்லப்பட்டன.
இந்நிலையில் நாய், பூனை உள்ளிட்ட செல்லப் பிராணிகளை வளர்ப்போருக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது.
- செல்லப் பிராணிகளின் உரிமையாளர்கள் கட்டாயம் பெருநகர சென்னை மாநகராட்சியின் உரிமம் பெற்று இருக்க வேண்டும்.
- செல்லப்பிராணிகளுக்கு வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி செலுத்தியும், முறையாக உணவு, தண்ணீர் மற்றும் இருப்பிடம் முதலியவற்றை வழங்கி பராமரிக்க வேண்டும்.
- பொது இடங்களுக்கு அழைத்து செல்லும் பொழுது கழுத்துப்பட்டையுடன் சங்கிலி இல்லாமல் கொண்டு செல்வதை தவிர்க்க வேண்டும்.
- எக்காரணம் கொண்டும் வெளி நபர்களிடம் அச்சம் மூட்டும் வகையிலும், திடீரென பாயும் தன்மை கொண்ட நாயாக இருந்தால் அந்த நாய்களை கட்டுப்பாடு இன்றி மற்றும் முகமூடி (Muzzle) இல்லாமல் வெளியே கொண்டு செல்லக்கூடாது.
- இத்தகைய நாய்களின் உரிமையாளர்கள் பற்றி புகார்கள் இருந்தால் பொது மக்கள் 1913 என்ற தொலை பேசி எண்ணில் புகார் அளிக்கலாம்.
- தெருக்களிலோ, பொது இடத்திலோ ஒரே ஒரு செல்லப்பிராணியை குறிப்பாக ஒரே ஒரு நாயை மட்டுமே அதன் உரிமையாளர்கள் எடுத்து செல்ல வேண்டும். ஏற்கனவே குறிப்பிட்டுள்ளவாறு அந்த செல்லப் பிராணியை அழைத்து செல்லும் பொழுது மற்றவர்களின் பாதுகாப்பை கருதி அதன் வாயை மூடியிருக்க (Muzzle) செய்தும், கட்டாயம் கழுத்துப்பட்டையுடன் சங்கிலியால் (Leash) கட்டி வைத்திருக்கவும் வேண்டும்.
- சென்னை மாநகராட்சியின் உரிமம் பெற்றிருத்தல் மற்றும் வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி செலுத்தப்பட்ட நாய்கள் மட்டுமே பூங்காக்களுக்குள் அழைத்து செல்ல அனுமதிக்கப்படும்.
- தெரு நாய்கள் அல்லது கட்டி வைக்கப்படாத செல்லப் பிராணிகள் உள்ளே நுழைவது தடுக்கப்படும்.
- பூங்காக்களில் உள்ள குழந்தைகள் விளையாடும் பகுதிக்கு வளர்ப்பு நாய்களை எடுத்துச் செல்வதும் தடை செய்யப்படும்.
- அனைத்து செல்லப்பிராணிகளுக்கும் துணை தேவை. ஆனால், சரியான உரிமம் பெற்று அதன் பிறகு இனப்பெருக்கம் செய்து, விற்பனை செய்ய வேண்டும்.
- கால்நடை மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி உரிமையாளர்கள் நாய்களை பராமரிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.
பிரியா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மழையால் குளிர்ந்த சென்னை… கூடுதல் மழைக்கு குறி சொன்ன வெதர்மேன்!