தனியாருக்கு வழங்கப்பட்ட சீருடை தைக்கும் பணி : ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்!
அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கான பள்ளிச் சீருடை தைக்கும் பணி தனியாருக்கு வழங்கப்பட்டதை கண்டித்து, பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான பெண்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகத்தில் கடந்த பல ஆண்டுகளாக அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கான பள்ளிச் சீருடைகள் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.
இந்த சீருடைகளை தைக்கும் பணியில் தமிழகம் முழுவதும் சமூக நலத்துறையின் கீழ் செயல்படும் பெண்கள் கூட்டுறவு சங்கங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
அதன் மூலம் ஏராளமான பெண்கள் தங்கள் வீடுகளில் இருந்தே சீருடைகளை தைத்துக் கொடுத்து வருமானம் ஈட்டி வந்தனர். இதற்காக பேண்ட் ஒன்றிற்கு 40 ரூபாயும், சட்டைக்கு 20 ரூபாயும், டிரவுசருக்கு 18 ரூபாயும் அவர்களுக்கு வழங்கப்பட்டு வந்தது.
தூத்துக்குடி மாவட்டத்தில் இந்தக் கூட்டுறவு சங்கங்கள், ஓட்டப்பிடாரம் அருகே உள்ள சிலோன் காலனி மற்றும் விளாத்திகுளம் எட்டையாபுரம் ஆகிய பகுதிகளில் இயங்குகின்றன.
இதன் மூலம் சுமார் 1500 பெண்கள் சீருடைகளை தைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த சீருடை தைக்கும் பணியில் ஈடுபட்டு வரும் பெண்கள் அந்தந்த அரசுப் பள்ளிகளுக்கு சென்று மாணவர்களிடம் சீருடைக்கான அளவுகளை எடுத்து அதை அரசுக்கு அனுப்பி உள்ளனர்.
இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான பள்ளிச் சீருடை தைக்கும் பணி கடந்த ஏப்ரல் மாதமே வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இதுவரை இந்த ஆண்டுக்கான சீருடை தைக்க உத்தரவு பெண்களுக்கு வழங்கப்படவில்லை.
இதைத் தொடர்ந்து அந்த பெண்கள் விசாரித்ததில், தமிழக அரசு இந்த ஆண்டு முதல் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடை தைக்கும் பணியை தனியாருக்கு வழங்கி உள்ளது தெரியவந்துள்ளது.
இதனால் தூத்துக்குடி சிலோன் காலனி பகுதியைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளனர்.
உடனடியாக தமிழக அரசு மீண்டும் தங்களுக்கு சீருடை தைக்கும் பணியை வழங்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மீண்டும் தங்களுக்கே சீருடை தைக்கும் பணியை வழங்கக் கோரி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனுவை அளித்துள்ளனர்.
இந்த விஷயத்தில் தமிழக முதல்வர் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் ஆகியோர் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாதிக்கப்பட்ட பெண்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
ராஜ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஹெல்த் டிப்ஸ்: ஒரு நாளைக்கு எத்தனை முறை சிறுநீர் கழிக்கிறீர்கள்?
கிச்சன் கீர்த்தனா : காளான் பெப்பர் மசாலா
வெயிலா? கோடை மழையா? – அப்டேட் குமாரு
கல்லூரி மாணவர்களுக்கு மாதம் ரூ.1000: தமிழ் புதல்வன் திட்டம் துவக்கம் எப்போது?