கடந்த ஜூலை 7ஆம் தேதி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட டிஐஜி விஜயகுமார் தொடர்பான வழக்கை கோவை போலீசார் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.
கோவை டிஐஜியாக பணியாற்றிய விஜயகுமார் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று தகவல்கள் வந்தன. சமூகத்தின் பல்வேறு மட்டங்களிலும் விஜயகுமார் தற்கொலை அதிர்வுகளை ஏற்படுத்தியது. அரசியல் கட்சி தலைவர்களும் காவல்துறையில் சீர்திருத்தம் வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தினார்கள்.
இதற்கிடையில் முழுக்க முழுக்க இந்த தற்கொலைக்கு காரணம் என்ன என்று கண்டுபிடிக்கும் முயற்சியில் கோவை போலீசார் ஈடுபட்டு இருக்கிறார்கள். சமீப காலங்களில் குற்றச் சம்பவங்களுக்கும் எதிர்பாராமல் நிகழும் தற்கொலை போன்ற சம்பவங்களுக்கும் பின்னணி கண்டுபிடிக்க போலீசாருக்கு பெரும் உதவியாக இருப்பது சம்பந்தப்பட்டவர்கள் பயன்படுத்திய செல்போன்கள் தான்.
அந்த வகையில் டிஐஜி விஜயகுமாரின் செல்போன் மூலம் பல்வேறு தகவல்களை அறிந்திருக்கிறார்கள் விசாரணைக் குழுவினர். இதுகுறித்து விசாரணை நடத்தி வரும் காவல் வட்டாரங்களில் பேசினோம்.
“சிசிடிவி கேமராவும் செல்போனும் தான் தற்போது போலீசாருக்கு துப்புத் துலக்குதலில் பெரும் உதவியாக இருக்கின்றன. செல்போன்கள் மூலம் அவர்களது கடைசி நேரத் தொடர்புகள், ஒருவேளை அழைப்பு குரல் பதிவு செய்யப்பட்டிருந்தால் மிரட்டல்கள் எதுவும் வந்திருக்கிறதா என்ற விவரங்கள் கிடைக்கும். இந்த வகையில் டிஐஜி விஜயகுமாரின் செல்போன் பல தகவல்களை தனக்குள் வைத்திருக்கிறது.
துப்பாக்கியால் சுட்டுக்கொள்வதற்கு சற்று முன்பாக சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியின் சுற்றறிக்கையை அதாவது ரவுடிகள் பற்றிய முழுமையான விவரங்களை தெரிவிக்க வேண்டும் என்கிற சுற்றறிக்கையை டிஐஜி விஜயகுமார் தனது வாட்ஸ் அப் குரூப்பில் பதிவிட்டு இருந்தார்.
தற்கொலை செய்து கொள்பவர்களின் அந்த நேரத்தில் மனநிலை என்ன அவர்களுடைய சமீபகால எண்ண ஓட்டங்கள் எப்படி இருந்தன என்பதை அவர்களது செல்போன்களின் தேடுதல் விவரங்களிலிருந்து நாம் உணர முடியும்.
அந்த வகையில் டிஐஜி விஜயகுமார் தனது செல்போனில் பல்வேறு விஷயங்களைப் பற்றி தேடி படித்திருக்கிறார். கல்லூரிகள் மற்றும் பள்ளிகளின் ஆண்டு விழாக்களில் கலந்து கொள்ளும் விஜயகுமார் இலக்கியம் பற்றி அதிகமாக பேசுவார். அவரது செல்போனில் தமிழ் தேடுதல் தமிழ் இலக்கியம் படித்திருக்கிறார். குறிப்பாக சிலப்பதிகாரம் பற்றி தேடியிருக்கிறார்.
80, 90களில் வந்த இளையராஜா பாடல்களை யூட்யூபில் தேடிக் கேட்டுள்ள விஜயகுமார் அந்தப் பாடல்களின் வரிகளை தனியாக கூகுள் சர்ச்சில் தேடி எடுத்திருக்கிறார். அது மட்டுமில்லாமல் குறிப்பிட்ட சில ஆயுர்வேத மருந்துகள் பற்றியும் விஜயகுமார் தனது செல்போனில் தேடித்தேடி படித்திருக்கிறார்.
மனதை ஒருமுகப்படுத்தும் யோகா பற்றியும் அவர் தேடி இருப்பதாக சர்ச் விவரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் விஜயகுமார் சமீப காலங்களில் தான் உட்கொண்டு வந்த சில மருந்து மாத்திரைகளின் சைட் எஃபக்ட்டுகள் பற்றியும் ஆங்கிலத்தில் தேடி படித்திருக்கிறார். இதன்மூலம் தான் உட்கொண்டு வந்த மருந்துகளின் விபரங்களை அவர் தேடியிருக்கிறார் என்று தெரிகிறது” என்கிறார்கள்.
டிஐஜி விஜயகுமார் கடந்த சில ஆண்டுகளாகவே மன அழுத்தத்துக்கான மருந்துகளை உட்கொண்டு வருவதை அவரது டாக்டர் போலீஸாரிடம் தெரிவித்திருந்தார்.
இதற்கிடையில் மரணிப்பதற்கு சில நாட்கள் முன்பாக வேறு ஒரு டாக்டரையும் டிஐஜி விஜயகுமார் சந்தித்துள்ளார். அவரும் சில மாத்திரைகள் கொடுத்திருந்தார்.
இந்த நிலையில்தான் சிலப்பதிகாரம் முதல் தான் சாப்பிட்ட மாத்திரைகளின் சைடு எஃபெக்ட் வரை தனது செல்போனில் தேடியிருக்கிறார் என்ற விவரம் தற்போது கிடைத்துள்ளது.
வணங்காமுடி
இந்தியா – தென் ஆப்பிரிக்கா தொடர்: பிசிசிஐ அறிவிப்பு!
அசராத ஆவுடையப்பன், விடாத அப்பாவு: மீண்டும் அறிவாலயத்தில் நெல்லை பஞ்சாயத்து!