கிச்சன் கீர்த்தனா : செஷ்வான் சில்லி பொட்டேட்டோ

Published On:

| By Minnambalam

உருளைக்கிழங்கு இல்லாமல் சமையலா… சான்ஸே இல்லை என்பதுதான் பெரும்பாலான வீடுகளில் எழுதப்படாத விதி. எப்படிப்பட்ட எளிமையான உணவையும் சூப்பராக மாற்றும் மந்திரசக்தி உருளைக்கிழங்குக்கு உண்டு.

பொரியல், வறுவல், குருமா… இதைவிட்டால் உருளைக்கிழங்கில் வேறென்ன செய்வது என யோசிப்போர், இந்த  செஷ்வான் சில்லி பொட்டேட்டோ செய்து சுவைக்கலாம்.

என்ன தேவை?

உருளைக்கிழங்கு – 4
சோள மாவு – 2 டேபிள்ஸ்பூன்
பெரிய வெங்காயம் – 1 (நீளமாக நறுக்கவும்)
பூண்டு – 8 பல் (தோல் நீக்கிக்கொள்ளவும்)
காய்ந்த மிளகாய் – 10 (இதற்குப் பதில் பழுத்த சிவப்பு மிளகாய் கூட சேர்க்கலாம்)
சோயா சாஸ் – 2 டீஸ்பூன்
சர்க்கரை – ஒரு டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
வெங்காயத்தாள் – ஒரு கட்டு (பொடியாக நறுக்கவும்)
வினிகர் – ஒரு டீஸ்பூன்
ஆலிவ் எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன்
தக்காளி சாஸ் – ஒரு டேபிள்ஸ்பூன்
எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு

எப்படிச் செய்வது?

காய்ந்த மிளகாயை வெந்நீரில் 10 நிமிடம் போட்டு மூடிவைக்கவும். ஊறிய காய்ந்த மிளகாய், 2 டீஸ்பூன் ஆலிவ் எண்ணெய், பூண்டுப்பல், உப்பு ஆகியவற்றை மிக்‌ஸியில் சேர்த்து அரைத்து எடுக்கவும். இதுதான் செஷ்வான் சாஸ்.

உருளைக்கிழங்கைத் தோல் நீக்கி, நீளவாக்கில் நறுக்கி, தண்ணீரில் போடவும். பிறகு, வெளியில் எடுத்து ஒரு டவலில் ஈரம் போக சற்று நேரம் வைத்திருந்து, ஒரு பவுலில் போட்டு வைக்கவும். இதில், ஒரு டேபிள்ஸ்பூன் சோள மாவு சேர்த்து, எல்லா உருளைக்கிழங்கிலும் மாவு ஒட்டுமாறு நன்கு கிளறவும்.

அதை சூடான எண்ணெயில் சேர்த்து பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.
வாணலியில் மீதம் இருக்கும் ஆலிவ் எண்ணெயைச் சேர்த்து சூடானதும் வெங்காயத்தைச் சேர்த்து வதக்கி, சோயா சாஸ் சேர்த்துக் கிளறவும்.

இத்துடன் மீதம் இருக்கும் சோள மாவை சிறிதளவு தண்ணீரில் கரைத்துச் சேர்த்து நன்கு கிளறவும். பிறகு 2 டீஸ்பூன் செஷ்வான் சாஸ், சர்க்கரை, உப்பு சேர்த்து நன்கு வேகவிடவும்.

இத்துடன் வினிகரைச் சேர்த்துக் கிளறி, திக்கான பதம் வந்ததும் பொரித்த உருளைக்கிழங்கை ஒவ்வொன்றாகச் சேர்த்துப் புரட்டவும். அப்படியே பிளேட்டுக்கு மாற்றி, அதன் மேல் பொடியாக நறுக்கிய வெங்காயத்தாளைத் தூவி தக்காளி சாஸுடன் சேர்த்துப் பரிமாறவும்.

டேஸ்ட்டி பிரெட் டிரையாங்கிள்ஸ்

ஹனி சில்லி பொட்டேட்டோ

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel