பிறழ்சாட்சியாக மாறிய சுவாதி: உச்ச நீதிமன்றம் கொடுத்த பதில்!

Published On:

| By Kalai

swathi appeal case

பொறியியல் மாணவர் கோகுல் ராஜ் கொலை வழக்கில் பிறழ்சாட்சியாக மாறிய சுவாதி, தனக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை ரத்து செய்ய கோரி தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

நாமக்கல் மாவட்டம் கோகுல்ராஜ் கொலை வழக்கில் மதுரை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் 10 பேரை குற்றவாளிகள் அறிவித்ததோடு அனைவருக்கும் ஆயுள் தண்டனை அளித்தும், சாகும் வரை சிறையில் இருக்கவும் தீர்ப்பளித்தது.

இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி யுவராஜ், உள்ளிட்ட 10 பேரும், கோகுல்ராஜின் தாயார் சித்ரா மற்றும் சிபிசிஐடி தரப்பில், ஐவரையும் விடுதலை செய்ததை எதிர்த்தும் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இதுதொடர்பான விசாரணை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் வந்தபோது, பிறழ்சாட்சியாக மாறிய சுவாதியை ஆஜராக நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதன்படி சுவாதி ஆஜரானபோது, முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார்.

அப்போது நீதிபதிகள், இந்த வழக்கை பொறுத்தவரை, சாட்சி சுவாதி நீதித்துறை நடுவர் முன்பாக கூறிய வாக்குமூலத்திலிருந்து முற்றிலுமாக மாறுபட்ட தகவலைக் கூறுகிறார்.

அவரை சந்தித்ததன் காரணமாகவே கோகுல்ராஜ் கொலை செய்யப்பட்டுள்ளார். கீழமை நீதிமன்ற விசாரணையின் போது அதற்கான சாட்சிகளும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

சுவாதி அழுத்தத்தின் காரணமாக வாக்குமூலம் கொடுத்திருந்தால், அதனை நீதித்துறை நடுவரிடம் தெரிவித்திருக்கலாம். தற்போது அதற்கு மாற்றாக தகவலை கூறும் போது அதற்கான காரணத்தையாவது குறிப்பிடலாம்.

Swathi appeal was dismissed

இந்த நீதிமன்றமும், சத்தியப்பிரமாணம் எடுத்த பின் அளித்த வாக்குமூலத்திலிருந்து ஏன் மாறுபடுகிறார் என அறிய விரும்பியது. அதற்கான அவகாசத்தையும் வழங்கியது. சுவாதி இந்த வழக்கின் நட்சத்திர சாட்சி.

சிசிடிவி காட்சிகளை ஒளிபரப்பி, அதிலிருப்பவர் யார் என கேட்டதற்கு, தான் இல்லை என தெரிவித்து விட்டார். அந்த காட்சிகளைப் பார்க்கும் போது அது அவர் தான் என தெரியவருகிறது. இருப்பினும் சுவாதி அதனை ஏற்றுக்கொள்ளவில்லை.

கோகுல்ராஜை அடையாளம் கண்ட சுவாதிக்கு தன்னை அடையாளம் தெரியவில்லை என்பது ஆச்சரியமளிக்கிறது. அவர் நீதிமன்றத்திற்கு தவறான தகவலை அளித்துள்ளார். அவருக்கு எந்த அழுத்தமும் இல்லை. யாரும் அழுத்தம் கொடுக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

எல்லாவற்றையும் நன்கு புரிந்து கொண்ட பின்னரே தவறான தகவலை அளித்துள்ளார். நீதித்துறை நடுவர் முன்பு அளித்த தகவல் உண்மையில்லை என்றால் அவர் அவரிடம் தவறான தகவலை அளித்ததாக கருதப்படும்.

விசாரணை நீதிமன்றத்தில் அவர் சொன்ன தகவல் உண்மையில்லை என்றால் அங்கும் அவர் தவறான தகவல் அளித்ததாகக் கருதப்படும். அவருக்கு மறு வாய்ப்பு அளிக்கும் வகையில் இந்த நீதிமன்றம் வாய்ப்பளித்தும், உண்மையை தெரிவிக்கவில்லை.

எனவே இதனை இந்த நீதிமன்றம் கண்டும் காணாமல் இதனை கடந்து செல்ல இயலாது. ஆகவே மேற்கொண்ட காரணங்களைக் கருத்தில் கொண்டு, நீதிமன்றத்தில் தவறான தகவலை அளித்ததற்கான முகாந்திரம் இருப்பதாக கருதி சுவாதி மீது குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கிறது என்றனர்.

கோகுல்ராஜ் கொலை வழக்கில் சுவாதிக்கு எதிராக உயர் நீதிமன்ற மதுரை கிளை தானாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்த நிலையில் அதற்கு எதிராக சுவாதி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்தார்.

இந்த மனு இன்று(ஜனவரி 6)நீதிபதி எம்.ஆர்.ஷா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது பிறழ்சாட்சியாக மாறிய சுவாதியின் மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

கலை.ரா

இடைவேளை இல்லாமல் நடந்த அதிமுக வழக்கு: ஜன 10.க்கு ஒத்தி வைப்பு!

கலைஞர் பெயரை மறந்ததா, மறைத்ததா பபாசி? தங்கம் தென்னரசு வைத்த குட்டு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel