செம்பரம்பாக்கம், புழல், பூண்டி ஏரிகளில் நீர் திறப்பு: சென்னை மக்களுக்கு அலர்ட்!

Published On:

| By Kavi

சென்னைக்கு நீர் ஆதாரமாக இருக்கும் முக்கிய ஏரிகளான செம்பரம்பாக்கம், புழல், பூண்டி ஏரிகளில் இருந்து உபரி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

புழல்

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டத்தில் 20.86 சதுர கி.மீ பரப்பளவில் புழல் ஏரி அமைந்துள்ளது. ஏரியின் மொத்த உயரம் 21.20 அடியாகும்.

இதன் முழுக்கொள்ளளவு 3,300 மில்லியன் கன அடியாகும். இன்று (டிசம்பர் 13) காலை 6 மணி நிலவரப்படி நீர் இருப்பு 19.69 அடியாக உள்ளது. இதன் கொள்ளளவு 2,950 மில்லியன் கனஅடியாகவும் மற்றும் நீர் வரத்து வினாடிக்கு 2,281 கன அடியாகவும் உள்ளது.

ஏரியின் நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காலை 9 மணியளவில் வினாடிக்கு 500 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக மஞ்சம்பாக்கம், கொசப்பூர், மணலி மற்றும் சடையான்குப்பம் ஆகிய பகுதிகளில் கால்வாயின் இரு புறமும் உள்ள தாழ்வான பகுதிகளில் இருப்பவர்கள் அங்கிருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பூண்டி

அதுபோன்று சென்னைக்கு முக்கிய நீர் ஆதாரமான, திருவள்ளூரில் உள்ள பூண்டி ஏரி 34.58 சதுர கி.மீ. பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த நீர்த்தேக்கத்தின் நீர் மட்ட மொத்த உயரம் 35 அடியாகும். இதன் முழு கொள்ளளவு 3,231 மில்லியன் கன அடியாகும்.

இன்று (13.12.2024) காலை 10.00 மணி நிலவரப்படி நீர் இருப்பு 34.99 அடியாகவும் கொள்ளளவு 3,204 மில்லியன் கன அடியாகவும் மற்றும் பூண்டியின் நீர் வரத்து 15,500 கன அடியாக உள்ளது.

தற்போது அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் நீர்வரத்து தொடர்ச்சியாக அதிகரித்து உள்ளதால் சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.

அணைக்கு வரும் நீர் வரத்து 35 அடியை தொட்டுவிடும் என்று எதிர்பார்க்கப்படுவதால் அணையின் வெள்ளநீர் வழிகாட்டுதலின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீர்த்தேக்கத்திற்கு வரும் உபரி நீரை அணையின் பாதுகாப்பு கருதி நீர்த்தேக்கத்திலிருந்து இன்று 13.122024 காலை 6.30 மணி அளவில் விநாடிக்கு 12.000 கன அடி திறக்கப்பட்டது,

இன்று காலை 10.30 மணி முதல் விநாடிக்கு 16,500 கன அடியாக உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இதன் காரணமாக நீர்த்தேக்கத்திலிருத்து மிகை நீர் வெளியேறும் கொசஸ்தலையாறு செல்லும் கிராமங்களான நம்பாக்கம், கிருஷ்ணாபுரம், ஆட்ரம்பாக்கம், எறையூர்,பீமன்தோப்பு கொரக்கந்தண்டலம், சோமதேவன்பட்டு, மெய்யூர், வென்னியூர், தாமரைப்பாக்கம், திருக்கண்டலம், பண்டிக்காவனுர், ஜெகநாதபுரம், புதுகுப்பம், கன்னிப்பாளையம், வன்னிப்பாக்கம், அருவன்பாளையம் மடியூர், சீமாவரம் வெள்ளிசா, நாப்பாளையம், மணலி புதுநகம், சடையான்குப்பம் என இரு புறமும் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

செம்பரம்பாக்கம்

செம்பரம்பாக்கம் ஏரியின் முழு கொள்ளளவு 24 அடி. இந்த ஏரியில் நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் அணையின் நீர்மட்டம் 23.29 அடியை எட்டியிருக்கிறது.

ஏரியின் மொத்தக் கொள்ளளவான 3,645 மில்லியன் கன அடியில், தற்போது 3,453 மில்லியன் நீர் இருப்பு உள்ளது. ஏரிக்கு 6,500 கன அடி நீர் வந்துகொண்டிருக்கிறது.
இதனால் பாதுகாப்பு கருதி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன், செம்பரம்பாக்கம் ஏரி உபரி நீரைத் திறக்க உத்தரவிட்டார்.

அதன்படி இன்று அதிகாலை 5 கண் மதகுகள் வழியாக, 1000 கன அடி நீர் திறக்கப்பட்டது.

தொடர்ந்து நீர் வரத்து அதிகரிப்பால் தற்போது 4,000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
இதனால் ஏரியிலிருந்து நீர் வெளியேறும் வாய்க்கால் செல்லும் கிராமங்களான சிறுகளத்துர், காவனுர், குன்றத்துர், திருமுடிவாக்கம், வழுதியம்பேடு, திருநீர்மலை மற்றும் அடையாறு ஆற்றின் இரு புறமும் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களை உடனடியாக வெளியேற உத்தரவிட்டப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குசேனலில் இணையுங்கள்…டன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் 

பிரியா

தனுஷிடத்தில் மனசு விட்டு பேச முயன்றேன், ஆனால்! – நயன்தாரா வருத்தம்!

புரட்டி எடுக்கும் மழை…எது வந்தாலும் சமாளிக்க தயார்: ஸ்டாலின் பேட்டி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel