திருச்சி முதல் காஷ்மீர் வரை : அகரம் இப்போ சிகரமாச்சு!

Published On:

| By Kavi

தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்துக் கொண்டு இருப்பவர் சூர்யா. நடிகராக மட்டுமில்லாமல் தன்னால் முடிந்த பல உதவிகளை செய்து வருகிறார். suriya agaram foundation student helped

அந்தவகையில் அகரம் என்ற பெயரில் அறக்கட்டளை ஒன்றை நடத்தி வரும் சூர்யா, கல்வி கிடைக்காத ஏழை, எளிய மாணவ மாணவிகளை தேர்வு செய்து படிக்க வைத்து வருகிறார்.

இந்த அறக்கட்டளை 2006ல் ஆரம்பிக்கப்பட்டது. அப்போது 160 பேர் தேர்வு செய்யப்பட்டு அகரம் மூலம் படிக்க வைக்கப்பட்டனர். அதன்பிறகு இந்த எண்ணிக்கை அதிகரித்து தற்போது 600 பேரை ஆண்டுக்கு தேர்வு செய்கிறது அகரம் அறக்கட்டளை. இந்த 600 பேரில் 50 சதவிகிதம் பேர் பெண்கள், 50 சதவிகிதம் பேர் ஆண்கள்.

இவர்கள் அரசு பள்ளியில் படித்திருக்க வேண்டும். மாணவர்களின் வீட்டுக்கும் அரசு கல்லூரிக்கும் இடையேயான தூரம் 14 கிமீட்டருக்கும் அதிகமாக இருக்க வேண்டும். குடும்பத்தில் முதல் பட்டதாரியாக இருக்க வேண்டும்

அம்மா, அப்பா இல்லாத பிள்ளைகளுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் மாணவ மாணவிகளை தேர்வு செய்து படிக்க வைக்கிறார்கள்.

2024-25ல் கல்வராயன் மலை, கொல்லிமலை, பச்சைமலை, ஏலகிரி, பர்கூர், தாளவாடி ஆகிய பகுதிகளில் படிக்கவே வசதி இல்லாத, கல்லூரியையே நினைத்து கூட பார்க்க முடியாத 300 பேரை தேர்வு செய்திருக்கிறார்கள்.

அவர்களை எஸ்.ஆர்.எம்., பனிமலர் போன்ற டாப் கல்லூரிகளில் சேர்த்து படிக்க வைக்கின்றனர். அவர்கள் அகரம் விடுதியிலும், தனியார் இடங்களிலும் தங்க வைக்கப்படுகிறார்கள். கோவை, திருச்சியில் உள்ள அகரம் விடுதியிலும் மாணவ, மாணவிகளை பராமரித்து வருகின்றனர்.

இப்படி மலை பகுதியில் இருந்து வந்து கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு தாழ்வு மனப்பான்மை வந்துவிடக் கூடாது, என்பதை கருத்தில் கொண்டு அதற்கும் தனியே கவனம் செலுத்துகிறது அகரம் அறக்கட்டளை.

ஒரு வருடத்துக்கு முதலாம் ஆண்டு, இரண்டாம் ஆண்டும், மூன்றாம் ஆண்டு, நான்காம் ஆண்டு என சுமார் 2000க்கும் மேற்பட்டோரை படிக்க வைக்கின்றனர்.

ஆண்டுக்கு சுமார் 600 பேர் படித்து முடித்துவிட்டு நர்சிங், வழக்கறிஞர், பொறியியல், மருத்துவ பட்டதாரிகளாக வெளியேறுகின்றனர்.

அப்படி படித்துவிட்டு வெளியேறிய பலர் இன்று வெளிநாட்டில் நல்ல வேலையில் இருக்கின்றனர்.

தமிழகத்தில் 6 பேர் காவல்துறை உதவி ஆய்வாளராக உள்ளனர். வனத்துறை 5 பேர் ரேஞ்சராக உள்ளனர். மருத்துவராக 10 பேர் உள்ளனர். செவிலியராக 40 பேர் உள்ளனர். ஆசிரியர்களாக 100 பேர் உள்ளனர். இன்ஜினியராக 210 பேர் உள்ளனர்.

இந்திய ராணுவத்தில் கேப்டன், ராணுவ வீரர்கள், தனியாரில் சாட்டர்டு அக்கவுண்ட்டன்ஸ் உள்ளிட்ட பணிகளிலும் உள்ளனர்.

அகரத்தில் படித்துவிட்டு வெளியேறுபவர்கள், குறைந்தது 5 பேரை தேர்வு செய்து பராமரிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இந்தநிலையில் தான் சென்னை தி நகரில் அமைந்துள்ள அகரம் அறக்கட்டளையின் புதிய அலுவலகத்தை சூர்யா கடந்த பிப்ரவரி 16ஆம் தேதி திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய சூர்யா, இதுவரையில் 5 ஆயிரத்து 813 முதல் தலைமுறை மாணவர்கள் படித்து முடித்துள்ளனர், தற்போது அகரம் மூலம் படிக்க 10 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்து கொண்டிருக்கின்றன” என்று கூறினார்.

இந்த புதிய கட்டடம் திறப்பு தொடர்பாக நம்மிடம் பேசிய அகரம் பவுண்டேசனின் செயலாளரும், இயக்குநருமான ஞானவேல், இங்கிருந்து மருத்துவம் படித்துவிட்டு வெளியே சென்ற மாணவி ஒருவரின் மனிதாபிமான செயல் குறித்து நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

“2019ல் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து பல லாரிகள் ஜம்மு காஷ்மீரின் லடாக் பகுதிக்கு சென்றன.

பல குழுக்களாக சுமார் 400 டிரைவர்கள் சென்றனர். பிற மாநிலங்களை சேர்ந்த லாரிகளாக இருந்தாலும். டிரைவர்கள் அனைவரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்.

இவர்கள் சென்றபோது லடாக்கில் பனி மூட்டம் கடுமையாக இருந்ததால் அவர்கள் பல்வேறு இடங்களில் சிக்கிக்கொண்டனர்.

அவர்கள் கையில் இருந்த அரிசி மற்றும் மருந்துகள் எல்லாம் தீர்ந்துவிட்டது. அவர்களுக்கு உணவு பொருள்களும், மருத்துவ உதவியும் தேவைப்படுகிறது. இந்நிலையில் அவர்களது நிலை குறித்த வீடியோ ஒன்று இணையத்தில் வெளியானது.

அந்த சமயத்தில் காஷ்மீரில், அகரத்தில் படித்து முடித்த கிருஷ்ணவேணி இந்திய இராணுவத்தில் கேப்டன் பதவியில் மருத்துவராக இருந்தார்.

லாரி டிரைவர்கள் சிக்கித்தவிப்பதை தெரிந்துகொண்ட கிருஷ்ணவேணி, காஷ்மீரில் இருந்தவாறு சென்னை அகரம் தன்னார்வலர் மன்சூரை தொடர்புகொண்டு பேசினார்.

லாரி ஓட்டுனர்கள் எங்கே இருக்கிறார்கள்?. தகவல் அனுப்புங்கள் என்று கேட்க, பனியில் சிக்கியிருந்த லாரி ஓட்டுனர் செந்தில்குமாரின் தொடர்பு எண் கிடைத்தது.

இதையடுத்து உயரதிகாரிகளின் அனுமதியோடு லாரி ஓட்டுநர்கள் இருந்த 19RR, 2nd பிரிவு என்ற இடத்திற்கு கேப்டன் பிரதீப் குமார் உட்பட 60 ராணுவ வீரர்களுடன் சென்றார் கிருஷ்ணவேனி.

அங்கு சுமார் 100 லாரி டிரைவர்கள் சிக்கியிருந்தனர். அவர்களை மீட்ட நிலையில் அங்கிருந்து சுமார் 40 கிமீ தொலைவில் மேலும் சில லாரி டிரைவர்கள் சிக்கியிருக்கிறார்கள் என்ற தகவல் கிடைத்தது.
தொடர்ந்து அங்கு சென்று தமிழக லாரி டிரைவர்களை மீட்டார். இவ்வாறாக லடாக்கில் 3 இடங்களில் சிக்கியிருந்த சுமார் 400 பேர் மீட்கப்பட்டனர்.

அவர்களுக்கு மருத்துவ உதவி, உணவு ஆகியவற்றை ஏற்பாடு செய்து கொடுத்தார். சளி, காய்ச்சலில் பாதிக்கப்பட்டிருந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டனர்” என்ற தகவலை பகிர்ந்துகொண்டார்.

கிருஷ்ணவேணி போன்ற பலரும் தங்கள் வாழ்வில் சாதிக்க வேண்டும். அதோடு பிறருக்கு உதவ முன் வர வேண்டும். இதுவே மாற்றத்திற்கான வழி.

இந்த கிருஷ்ணவேணி திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர்.  தன்னுடைய12ஆவது வயதில் தந்தை மற்றும் தாய் ஆகிய இருவரையுமே இழந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. suriya agaram foundation student helped

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share