உச்ச நீதிமன்றம் அனுமதி: மறு உடற்கூராய்வு தொடங்கியது!

தமிழகம்

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவியின் உடற்கூராய்வை நிறுத்த உத்தரவிட முடியாது என உச்ச நீதிமன்றம் கூறிய நிலையில் பிற்பகல் ஒரு மணியளவில் மறு உடற்கூராய்வுக்கான பணிகள் தொடங்கியது.

கள்ளக்குறிச்சி சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மாணவி இறந்த அடுத்த நாள் நடைபெற்ற பிரேத பரிசோதனையில், அவர் இறப்பதற்கு முன்பே உடல் முழுவதும் காயங்கள் ஏற்பட்டிருந்தது தெரியவந்தது. எலும்பு முறிவு, ரத்தச் சிதைவு ஏற்பட்டதும் தெரியவந்தது.

இதனைதொடர்ந்து மாணவியின் மரணம் குறித்து சிபிசிஐடி விசாரிக்க உத்தரவிடக் கோரி அவரது தந்தை ராமலிங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், மாணவியின் உடலை தாங்கள் கூறும் மருத்துவரை கொண்டு மறு உடற்கூராய்வு செய்ய உத்தரவிட வேண்டும் எனவும் முறையீடு செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என். சதீஷ்குமார், மாணவி உடலுக்கு மறு உடற் கூறாய்வு நடத்தும் குழுவில் மூன்று அரசு மருத்துவர்கள் மற்றும் ஒரு ஓய்வுபெற்ற தடயவியல் நிபுணரை நியமித்து உத்தரவிட்டிருந்தார்.

இதனை எதிர்த்து மனைவியின் தந்தை தங்கள் தரப்பு மருத்துவரையும் உடற்கூராய்வு நடத்தும் குழுவில் அனுமதிக்க வேண்டும் எனவும் அதுவரை உடற் கூராய்வை நிறுத்தி வைக்க வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றத்தில் நேற்றிரவு மேல் முறையீடு செய்தார். இன்று காலை தலைமை நீதிபதி என்.வி.ரமணா முன்பு அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் மாணவி தந்தையின் தரப்பில் முறையிடப்பட்டது.

அப்போது தமிழக அரசுத் தரப்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்த வழக்கு விவரம் குறித்து தெரிவிக்கப்பட்டது.

இதை விசாரித்த நீதிபதி இன்று பிரேதப் பரிசோதனை நடத்த தடையில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்தார். பிரேதப் பரிசோதனைக்கு பின் வேறு எந்த பிரச்னையும் செய்யாமல் மாணவியின் உடலை அவரது தந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

இந்த மேல்முறையீட்டு மனு நாளை உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது. இந்தசூழலில் மாணவியின் வீட்டில் மதியம் ஒருமணிக்கு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் மறு உடற்கூராய்வு தொடங்கும் என்று நோட்டீஸ் ஒட்டப்பட்டிருக்கிறது.

அதேசமயத்தில், ”சின்னசேலம் பள்ளி மாணவி உடலை பெற்றோர் இல்லாமல் மறு உடற்கூராய்வு செய்ய அனுமதிக்கப்படுகிறது. பெற்றோர் வந்தால் அவர்களையும் அனுமதிக்கலாம்” என்று உயர் நீதிமன்ற நீதிபதி சதீஸ்குமார் இன்று (ஜூலை 19) பிற்பகல் உத்தரவிட்டார்.

அதன்படி ஒரு மணிக்கு மறு உடற்கூராய்வுக்கான நடவடிக்கைகள் தொடங்கியது. மாணவியின் உடல் பிணவறையில் இருந்து எக்ஸ்ரே ஆய்வுக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது. ஆனால் உடற்கூராய்வு நடைபெறும் இடத்துக்கு இன்னும் பெற்றோர்கள் வரவில்லை.

க.சீனிவாசன்

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.