தமிழகத்தில் மின்கட்டண உயர்வுக்கு தடை விதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் மின்சார கட்டணத்தை உயா்த்துவது தொடா்பாக தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் முடிவெடுக்கத் தடை விதிக்கக் கோரி தமிழ்நாடு நூற்பாலைகள் சங்கங்கள் தரப்பில் உயா் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த உயா் நீதிமன்ற மதுரை கிளை தனிநீதிபதி, தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணைய கமிட்டியில் சட்டத்துறை வல்லுநர் இல்லாததை சுட்டிக்காட்டி, அவா் நியமிக்கப்படும் வரை கட்டணத்தை உயா்த்தும் விஷயத்தில் ஆணையம் இறுதி முடிவு எடுக்கக் கூடாது என உத்தரவிட்டது.
இதை எதிா்த்து தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தின் சாா்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்குத் தடை விதித்ததுடன், கட்டண உயா்வு உத்தரவை வெளியிடலாம் என தீர்ப்பளித்தது.
இந்த உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு நூற்பாலைகள் சங்கத்தினர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனர்.
இந்த மேல்முறையீட்டு மனு நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல் மற்றும் அபய் ஓஜா அமர்வில் இன்று(அக்டோபர் 14)விசாரணைக்கு வந்தது.
அப்போது, “மின் கட்டண உயா்வு விவகாரத்தில் இரு நீதிபதிகள் அமா்வு முழுமையாக ஆய்வு செய்யாமல் தனி நீதிபதி உத்தரவுக்குத் தடை விதித்துள்ளது” என நூற்பாலைகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் தேவையான இந்த மின்கட்டண உயர்வு செய்யாவிட்டால் அரசுக்கு இழப்பீடு ஏற்படும் என தமிழ்நாடு மின்வாரியம் தனது வாதத்தை முன்வைத்தது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மின்கட்டண உயர்வுக்கு தடை விதிக்க முடியாது என்று கூறினர்.
அதேசமயம் தமிழ்நாடு ஒழுங்குமுறை ஆணையத்தில் சட்டத்துறை வல்லுநரை நியமனம் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர்.
3 மாதத்தில் சட்டத்துறை வல்லுநரை நியமனம் செய்யவில்லை என்றால் மீண்டும் உச்சநீதிமன்றத்தில் முறையிட மனுதாரர்களுக்கு அனுமதி வழங்கியும் உத்தரவிட்டுள்ளனர்.
கலை.ரா
ஹிஜாப் வழக்கு: இருவேறு தீர்ப்பு!- அடுத்து என்ன?
நயன் – விக்கி குழந்தை விவகாரம்: மருத்துவமனையை கண்டறிந்தது சுகாதாரத் துறை!