ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றது.
ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு இரண்டு ரிட் மனுக்களை தாக்கல் செய்தது.
முதல் மனுவில், தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கும், அரசு அனுப்பும் கோப்புகளுக்கும் ஆளுநர் ஒப்புதல் அளிப்பதில்லை. இந்திய அரசியலமைப்பின் 200வது பிரிவின்படி ஆளுநர் கோப்புகளுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும். இல்லையெனில் விரைவில் திருப்பி அனுப்ப வேண்டும். ஆனால் கிடப்பில் போட்டு அரசியல் போட்டியில் ஈடுபடுகிறார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதை ஏற்கனவே விசாரித்த முன்னாள் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் ஜே.பி.பார்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா அமர்வு, இந்த விவகாரம் “தீவிர கவலையை” எழுப்புகிறது” என்று வாய் மொழியாக தெரிவித்திருந்தது.
தொடர்ந்து தமிழக அரசு, துணை வேந்தர்கள் நியமனத்தில் ஆளுநர் ஆர்.என். ரவி குறுக்கீடு தொடர்பாக புதிய கூடுதல் மனுவை தாக்கல் செய்தது. துணை வேந்தர் நியமனங்களில் யு.ஜி.சி. தலைவரையும் சேர்த்து தேர்வு குழு அமைக்க வேண்டும் என்று ஆளுநர் அறிவிப்பு வெளியிட்டார். இந்த குறுக்கீட்டை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இன்று (ஜனவரி 17)இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் அபிஷேக் மனு சிங்வி மற்றும் பி வில்சன் ஆகியோர் ஆஜராகி, கடந்த விசாரணைக்குப் பின் நடந்த விஷயங்கள் குறித்து நீதிபதிகளிடம் தெரிவித்தனர்.
இந்த இரண்டு மனுக்களையும் தனி தனியாக விசாரிக்க வேண்டும் என்று அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
மத்திய அரசு சார்பில் அட்டர்னி ஜெனரல் ஆர்.வெங்கடரமணி ஆஜராகினார்.
இந்நிலையில் துணை வேந்தர்கள் நியமனம் தாமதாவது தொடர்பான மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதிகள், விசாரணையை அடுத்த புதன்கிழமைக்கு (ஜனவரி 22) ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.
அன்றைய தினமே இறுதி விசாரணை நடைபெற்று இதற்கு தீர்வு காண்போம் என்றும் நீதிபதிகள் கூறினர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
தி கிரேட் எம்ஜிஆர்… மோடி வெளியிட்ட வீடியோ… தலைவர்கள் புகழாரம்!
பொங்கல் பரிசு இன்னும் வாங்கலையா? – உங்களுக்கான முக்கிய அறிவிப்பு!