அரசு மருத்துவரிடம் ரூ.20 லட்சம் லஞ்சம் பெற்ற வழக்கில் மதுரை அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் இன்று (மார்ச் 20) உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2023-ஆம் ஆண்டு டிசம்பர் 1-ஆம் தேதி திண்டுக்கல்லை சேர்ந்த அரசு மருத்துவரிடம் இருந்து ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கிய மதுரை அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை திண்டுக்கல் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர்.
இதனையடுத்து மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், அங்கித் திவாரியை கஸ்டடியில் எடுத்து விசாரித்தனர். தற்போது மதுரை சிறையில் நீதிமன்ற காவலில் அங்கித் திவாரி உள்ளார்.
இந்தநிலையில், ஜாமீன் கோரி அங்கித் திவாரி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, அங்கித் திவாரிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும், வழக்கு தொடர்புடையவர்களை அங்கித் திவாரி தொடர்புகொள்ள முயற்சிக்கக்கூடாது, சாட்சியங்களை அழிக்க முயற்சிக்கக்கூடாது, அரசு அனுமதி பெறாமல் தமிழ்நாட்டை விட்டு வெளி மாநிலங்களுக்கு செல்ல கூடாது. பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை அங்கித் திவாரி திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று நிபந்தனைகள் விதித்தனர்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
வெறுப்புப் பேச்சு : மத்திய அமைச்சர் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!