தமிழக அரசின் உயர்மட்ட குழு அனுமதி வழங்கியுள்ள கழிவுகளை மட்டுமே ஸ்டெர்லைட் ஆலை வளாகத்திலிருந்து நீக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை மூன்று வாரங்களுக்கு ஒத்திவைத்துள்ளது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி 2018-ஆம் ஆண்டு பொதுமக்கள் நடத்திய போராட்டத்தில் காவல்துறை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது.

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதி அளிக்கக்கோரி வேதாந்தா நிறுவனத்தின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில் ஸ்டைர்லைட் ஆலை பராமரிப்பு தொடர்பாக வேதாந்தா நிறுவனத்தின் இடைக்கால மனுவை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான நீதிபதிகள் அமர்வு விசாரித்து வருகிறது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது தமிழக அரசின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன், “ஸ்டெர்லைட் ஆலையில் நச்சு கழிவுகளை வெளியேற்றும் பராமரிப்பு பணிகளை அரசே செய்து வருகிறது. ஆலை நிர்வாகத்திற்கு விதிமுறைகளுக்கு உட்பட்டு சில அனுமதிகளை வழங்கியுள்ளோம். இதனால் அரசின் அனுமதி இல்லாமல் நச்சு கழிவுகளை வெளியேற்ற ஆலை நிர்வாகத்திற்கு அனுமதி வழங்க கூடாது” என்று வாதத்தை முன்வைத்தார்.
இதனை ஏற்ற நீதிபதிகள் அரசு அனுமதிக்காத எந்த பணிகளையும் மேற்கொள்ள நாங்கள் அனுமதி வழங்க மாட்டோம் என்று கூறி வழக்கின் விசாரணையை மூன்று வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.
செல்வம்
சாகுந்தலம் முதல் ருத்ரன் வரை: தமிழ் புத்தாண்டு ரிலீஸ்!
‘கை கட்டி வேடிக்கை பார்க்கமாட்டோம்’: ஆளுநருக்கு எதிராக முதல்வர் தனி தீர்மானம்!