12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதாத 50,000 பேர் மீண்டும் தேர்வு எழுதுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகப் பள்ளிக் கல்வித் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பதினோராம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழ் , ஆங்கிலம் ஆகிய மொழித் தேர்வுகள் முடிவடைந்துள்ள நிலையில், தமிழ் தேர்வை 50,000 மாணவர்களும், ஆங்கில தேர்வை ஏறத்தாழ 50,000 மாணவர்களும் எழுதவில்லை என அதிர்ச்சித் தகவல் வெளியானது.
இதுதொடர்பாக உயரதிகாரிகளுடன் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில் இன்று (மார்ச் 17) துணைத் தேர்வுகள் மூலம் இந்த 50,000 மாணவர்கள் மீண்டும் தேர்வெழுத நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளி கல்வித் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மார்ச் 24, ஏப்ரல் 10ஆம் தேதி சிறப்புப் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடத்த அறிவுறுத்தியுள்ள பள்ளிக் கல்வித் துறை, பொதுத் தேர்வு எழுதாத மாணவர்களின் விவரங்களைக் கண்டறிந்து அந்த மாணவர்களுக்கும், அவர்களது பெற்றோர்களுக்குத் துணைத் தேர்விற்கான ஆலோசனைகளை வழங்க வேண்டும்.
ஒவ்வொரு பள்ளியிலும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், வட்டார பயிற்சி மைய ஆசிரியர்களைக் கொண்டு குழு அமைத்து இந்த பொதுத் தேர்வை எழுதாத மாணவர்களைக் கண்டறிவதற்கு வழிவகைகளைச் செய்ய வேண்டும்.
துணைத் தேர்வு குறித்து மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்குக் குழப்பம் இருந்தால் 14417 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் என்று பள்ளிக் கல்வித் துறை கூறியுள்ளது.
பிரியா