ராஜன் குறை
கேரளாவில் இரண்டு பெண்களை நரபலி கொடுத்தார்கள், நர மாமிசத்தை உண்டார்கள் என்ற தகவல் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
கல்வியில் சிறந்து விளங்கும் கேரளத்தில் இப்படியெல்லாம் நடக்குமா என்றெல்லாம் கேட்கிறார்கள். உண்மையில் கல்விக்கும், பகுத்தறிவுக்கும் தொடர்பில்லை. நன்றாக கல்வி கற்றவராக இருப்பார். பத்திரிகையாளராக, ஆடிட்டராக இருப்பார். பெண்களுக்கு மாத விடாய் வந்தால் தீட்டு, வீட்டுக்குள் புழங்கக் கூடாது என்று நினைப்பார்.
அந்த நாட்களில் வீட்டுக்கு விலக்கு என்பார், தீண்டாமை கடைப்பிடிப்பார். கேட்டால் மத நம்பிக்கை, சனாதன தர்மம் என்று எதையாவது கூறுவார். அறிவியல் கல்வியில் முந்நூறு ஆண்டுகளாக பெரும் முன்னேற்றம் கண்ட மேற்கத்திய நாடுகளிலும் மூட நம்பிக்கைகளுக்கும், முட்டாள் சடங்குகளுக்கும் குறைவில்லை.
அமெரிக்காவில் சையண்டாலஜி என்ற ஒரு நவீன, ரகசிய மத அமைப்பினர் பல்வேறு கற்பனைகளை மூட நம்பிக்கைகளைக் கொண்டுள்ளார்கள் என்பது அனைவரும் அறிந்ததுதான். ஆனால் அந்த அமைப்பு தொடர்ந்து செயல்படுவதுடன், பலரையும் உறுப்பினர்களாக அழைத்தபடிதான் உள்ளது. ஏராளமான சொத்துகளைக் குவித்துள்ளது. ஏன் இப்படி நடக்கிறது, மனிதர்கள் ஏன் மூட நம்பிக்கைகளில் ஆழ்கிறார்கள், பகுத்தறிவு ஏன் அவர்களுக்குள் செயல்பட மறுக்கிறது என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
அதே சமயம் எல்லா நம்பிக்கைகளுமே மூட நம்பிக்கைகள்தானா, மூடிய நம்பிக்கைகளுக்கும், திறந்த நம்பிக்கைகளுக்கும் என்ன வேறுபாடு என்பதையும் பகுத்து அறிய வேண்டும்.
நம்பிக்கை
நம்பிக்கை என்பதே தீயதா என்றால் நிச்சயம் அப்படிச் சொல்ல முடியாது. நாம் பலருடைய வார்த்தைகளை நடைமுறையில் நம்பித்தான் வாழ வேண்டும். உதாரணமாக ஒருவர் நம்மிடம் நாம் உண்ண நினைக்கும் கனியை உண்ண வேண்டாம்; அது கெட்டுவிட்ட து என்று சொன்னால் நாம் என்ன நினைப்போம்? சரி, அவர் அப்படிச் சொல்லும்போது சாப்பிட்டே ஆக வேண்டிய அவசியம் இல்லை என்றுதான் நினைப்போம். அவர் கூறுவதை நம்புவதால் ஆபத்தில்லை.
அதே போல மருத்துவர் ஒரு மருந்தைக்கொடுத்துச் சாப்பிடச் சொன்னால் அதை நம்பி சாப்பிடுவோமே தவிர, அதை சந்தேகிக்க மாட்டோம். இப்போதெல்லாம் மருந்தின் விலை அதிகமாக இருந்தால், மருத்துவர் மருந்து கம்பெனியின் லாப நோக்குக்காக நம்மை அதைச் சாப்பிடச் சொல்கிறாரோ என்ற ஐயம் வரலாம். ஆனால், ஆபத்தான சந்தர்ப்பத்தில் மருத்துவரை நம்புவதுதான் உசிதம்.
சுருங்கச் சொன்னால் வாழ்வில் நாம் அனைத்து செயல்களையுமே நாம் பட்டறிந்து ஆராய்ந்த பின்னரே செய்வோம் என்று நினைக்க முடியாது. பல செயல்களை பொது அறிவை, பிறர் கூறுவதை நம்பித்தான் செய்ய வேண்டும். குறிப்பாக நம் மீது அன்பு செலுத்துபவர்கள், நண்பர்கள் கூறுவதை நம்புவதுதான் நல்ல பண்பும். எல்லோரையும் ஐயுறுவது மிகவும் தீங்கானது.
இதை அப்படியே நீடித்தால் நம்மால் பல இயற்கை நிகழ்வுகளுக்கு, உதாரணமாக மரணத்துக்கு, காரணம் என்னவென முழுமையாகக் காண முடிவதில்லை. ஒரே விதமான நோய் வந்தவர்களில், ஒரே விதமான விபத்தில் சிக்கியவர்களில் ஒருவர் உயிர் பிழைக்கிறார்; மற்றொருவர் இறந்து விடுகிறார். இதை ஒரு தற்செயலாகத்தான் பார்க்க முடிகிறதே தவிர, முழுமையாக காரணம் கண்டு விளக்க முடிவதில்லை.
அதனால் மருத்துவர்களே அறுவை சிகிச்சை முடிந்த பிறகு எங்களால் இயன்றவரை முயற்சி செய்துள்ளோம்; இதற்குமேல் கடவுளை வேண்டிக் கொள்ளுங்கள் என்று கூறுவதைப் பார்க்கிறோம். இந்த இடத்தில்தான் இறை நம்பிக்கை உருவாகிறது.
மனித எத்தனத்துக்கு அப்பால், அது பலிக்குமா, இல்லையா என்பது தற்செயலானதாகத்தான் இருக்குமோ என்ற நிலையில் கடவுளை வேண்டிக்கொள்வோம் என்று மனிதர்கள் நினைப்பது இயல்பாக உள்ளது. சரியாகச் சொன்னால் காரணம் காண முடியாத தற்செயல் நிகழ்வின் பெயர்தான் கடவுள்.
இந்த பிரபஞ்சம் எப்படித் தோன்றியது என்று கூட யோசிக்கலாம்; எதற்காகத் தோன்றியது என்று யோசிப்பது கடினம்,. அதனால் அது கடவுளின் சித்தம் என்று கூறும்போது மனித சிந்தனை ஆறுதல் அடைகிறது. இதுவே இறை நம்பிக்கையின் அடிப்படையாக வெகுகாலம் விளங்கி வருகிறது. அப்படிப்பட்ட நம்பிக்கை ஏன் மூட நம்பிக்கையாக மாறுகிறது என்பதே கேள்வி.
நம்மால் எல்லா நிகழ்வுகளுக்கும் புலன்களின் மூலம் காரணம் கண்டுபிடிக்க முடியவில்லை என்பதால், எதை வேண்டுமானாலும் காரணமாக கற்பித்துக்கொள்வதிலிருந்தே மூட நம்பிக்கை தோன்றுகிறது.
நண்பர்கள் இரண்டு பேர் ஒரு நேர்காணலுக்கு செல்கிறார்கள். அதில் அதிக கெட்டிக்காரர் என்று அறியப்பட்டவருக்கு வேலை கிடைக்கவில்லை; மற்றவருக்குக் கிடைக்கிறது.
இதற்கான காரணம் என்னவென்று எவ்வளவு யோசித்தாலும் புலனாவதில்லை. இது ஒரு தற்செயல்தான். நேர்காணல் செய்தவருக்கு ஏதோவொரு அம்சத்தில் ஒருவரை அதிகம் பிடித்துப்போகிறது. அது என்னவென்று கேட்க முடியாது; சில சமயம் கேட்டாலும் கூட தேர்வு செய்தவரால் விளக்கம் கொடுக்க முடியாது. என் மனதுக்கு அப்படி தோன்றியது என்று கூறிவிட்டால் ஒன்றும் செய்ய முடியாது.
அது போன்ற நிலையில் வேலை வாய்ப்பை இழந்தவரிடம் ஒருவர் உனக்கு ஜாதகத்தில் தோஷம் உள்ளது; ஒரு குறிப்பிட்ட கோயிலுக்கு வாராவாரம் சனிக்கிழமையன்று சென்று நூற்றியெட்டு தேங்காய் உடைத்தால் அந்த தோஷம் போய்விடும் என்று கூறினால் அவர் நம்பிவிடுவார்.
இதனால்தான் வர்த்தகத்தில் ஈடுபடுபவர்களுக்கு ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் கடவுள் பக்தி தோன்றுவது இயல்பு. தற்செயலாக அவர்களுக்கு ஏற்பட இருந்த பொருள் இழப்பு தவிர்க்கப்படும். அல்லது இழந்த தொகை மீண்டும் ஈட்டப்படும். அதனால் அவர் மனதில் அது இறைவன் செயல் என்ற எண்ணம் தோன்றும்.
மூட நம்பிக்கை
இது போன்ற நம்பிக்கைகள் ஒருவருடைய முயற்சியை பாதிக்காத வரையில் அதனால் தீங்கு இல்லை. அதாவது தன்னால் செய்யக்கூடிய முயற்சிகள் அனைத்தையும் செய்த பிறகு, இறைவனை வேண்டினால் அது அவருடைய தனிப்பட்ட பிரச்சினை. ஆனால் நான் வர்த்தகத்திலோ, தேர்விலோ வெற்றிபெற இறைவனை வேண்டினால் போதும் என்று நினைக்கத் தொடங்கும்போது பிரச்சினை உருவாகிறது.
தேர்வுக்கு நன்றாகப் படித்துவிட்டு செல்லும் மாணவன் கடவுளைக் கும்பிட்டுவிட்டு சென்றால் அதில் தவறில்லை. அது ஓர் ஆறுதல்; தன்னம்பிக்கை என்ற அளவில் செயல்படலாம். ஆனால் படிக்காமலேயே நான் பிள்ளையாருக்கு தேங்காய் உடைத்துவிட்டேன், அதனால் தேர்வில் வெற்றி பெறுவேன் என்று ஒரு மாணவன் நினைத்தால் அது மூட நம்பிக்கை.
மனிதர்களிடம் பேராசை, பொறாமை போன்ற உணர்ச்சிகள் அதிகமாகும்போது இது போன்ற மூட நம்பிக்கைகள் பேயாட்டம் போடத் தொடங்குகின்றன. நரபலி கொடுத்தால் பெரும் செல்வம் கிடைக்கும், வீட்டுத் தோட்டத்தில் முன்னோர் புதைத்து வைத்த புதையலின் இருப்பிடம் தெரிந்துவிடும் என்றெல்லாம் கூறும்போது பேராசைக்காரர்கள் மதியிழந்து அதைச் செய்யத் துணிகிறார்கள்.
பகுத்தறிவு
பகுத்தறிவு என்பதே நம்பிக்கை, மூட நம்பிக்கையாக மாறாமல் பார்த்துக்கொள்வதுதான். அப்படியானால் இரண்டுக்கும் இடையில் வேறுபாடுகள் என்ன என்ற கேள்வி வரும்.
முதலில் நம்பிக்கை ஒரு நபரின் தன்னூக்கத்தை, முயற்சியைக் கெடுப்பதாக அமையக் கூடாது. அதனால்தான் வள்ளுவர் “தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும்” என்று கூறினார். வள்ளுவர் ஆன்மிகவாதியா, தெய்வத்தை ஏற்றுக்கொண்டாரா என்றெல்லாம் விவாதிக்கிறார்கள்.
பிரச்சினை தெய்வம் இருக்கிறதா, இல்லையா என்பதல்ல. நம் முயற்சி தெய்வத்தாலேயே செய்ய முடியாததையும் செய்துவிடும் என்ற அளவு சுயமரியாதையும், தன்னம்பிக்கையும் இருந்தால் பிறகு தெய்வத்தையும் வழிபடுவதில் ஒரு பிரச்சினையும் இல்லை.
இரண்டு நம்பிக்கையின் பேரில் செய்யும் எதுவும் பிறருக்கு தீங்கிழைப்பதாக இருக்கக் கூடாது. நூறு பேருக்கு உணவளித்தால் ஒருவருக்குச் சாலை போடும் ஒப்பந்தம் கிடைக்கும் என்று நம்பிக்கை ஏற்பட்டால் அதில் தவறில்லை. ஆனால் ஆதரவற்றோர் இல்லத்துக்கு செல்லும் பாலை தெய்வச்சிலையின் தலையில் ஊற்றினால் ஒப்பந்தம் கிடைக்கும் என்று நம்புவது தீமையானது. இது நம்பிக்கையில்லை. சக மனிதர்களின் துயரத்தைப் பார்க்க மறுப்பதால் மனதை மூடும், உணர்வுகளை புதைத்து மூடும், மூட நம்பிக்கையாகிறது.
மூன்றாவது மிக முக்கியமானது. எந்த ஒரு ஆசையின் பேரில் நாம் சில நம்பிக்கைகளை ஏற்கிறோமோ, அந்த ஆசை அவசியமானதா என்பதை சிந்திக்க வேண்டும். நூறு கோடி ரூபாய் சொத்து உள்ளவர் இன்னொரு நூறு கோடி ரூபாய் ஈட்ட வேண்டும் என்பதற்காக யாகம் செய்கிறேன் என்று பொருட்களை பாழாக்கினால், உயிர்களை வதைத்தால் அது தேவையா என்பதை முதலில் கேட்பதே பகுத்தறிவு.
கலைஞரின் புதையல் நாவலில் கதாநாயகன் சிறுவயதில் தன் தங்கையான சிறுமியுடன் அகதியாக இலங்கையிலிருந்து இந்தியா வருவான். துறவி போல வேடமணிந்த ஒருவன், சிறுமியை ஒரு கிணற்றில் இறக்கி புதையல் ரகசியத்தை எடுக்கச்சொல்வான். அந்த சிறுமி இறந்தே போவாள்.
அந்த புதையல் ரகசியத்துக்காக தொடர்ந்து பல கொலைகள் நடக்கும். உள்ளூர் பணக்காரர் அந்த புதையல் மீது பித்துக்கொண்டு யாரையும் கொல்லத் தயாராக இருப்பார். ஆனால் அவரே குண்டடி பட்டு கடலில் மூழ்கி இறந்துபோவார்.
நாவலின் இறுதியில் கதாநாயகனும், கதாநாயகியும் கடற்கரையில் நிற்கும்போது அவரது பிணம் கரை ஒதுங்கும். அதன் கரத்தில் அந்தப் புதையல் ரகசியம் அடங்கிய ஓலைச்சுவடி இருக்கும். கதாநாயகன் அந்தச் சுவடியைக் கடலில் எறிந்து விடுவான். அவன் காதலி ஏன் என்று கேட்டவுடன், நீதான் என் புதையல் என்று சொல்வான்.
இது எதனால் முக்கியத்துவம் பெறுகிறது என்றால், இது பகுத்தறிவின் மிக முக்கியமான அம்சத்தைச் சுட்டிக்காட்டுவதால்தான். பிரச்சினை அந்த ஓலைச்சுவடியில் குறிப்பிட்ட இட த்தில் புதையல் இருக்கிறதா, இல்லையா என்பதல்ல. அந்தப் புதையல் நமக்கு தேவையா, இல்லையா என்பதுதான்.
மனிதர்கள் ஒருவரை ஒருவர் நேசித்து, அன்புடன், மகிழ்ச்சியுடன் வாழ முற்படுவதுதான் பகுத்தறிவு. அவரவர் மன ஆறுதலுக்காக ஒரு இறைவனை நம்புவதோ, வழிபடுவதோ பிரச்சினையில்லை. ஆனால் அந்த நம்பிக்கை பிறருக்கு தீங்கு செய்வதாக மாறுவதுதான் பிரச்சினை.
உதாரணமாக ஒருவர் தன்னை சைவர் என்று கூறிக்கொண்டாலோ, இந்து என்று கூறிக்கொண்டாலோ அதில் ஒரு பிரச்சினையும் இல்லை. அது அவர் நம்பிக்கை என்று எடுத்துக்கொண்டு விட்டுவிடலாம். ஆனால் ஒரு கட்சியினர் இந்தியாவில் இந்துக்கள்தான் தொண்ணூறு சதவிகிதம்; அவர்களே பெரும்பான்மை.
இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்களெல்லாம் அந்நியமானவர்கள் என்றெல்லாம் வெறுப்பரசியல் செய்ய முற்படும்போதுதான். அது வன்முறையில் முடியும்போதுதான் நமக்கு யார் இந்து என்ற பெயரைக் கொடுத்தது, அந்த அடையாளம் எப்படி உருவாகியது என்று பகுத்தறிய நேர்கிறது.
ஒருவரது நம்பிக்கை அவருக்கோ, பிறருக்கோ தீங்கு விளைவிக்காதவரை அது திறந்த நம்பிக்கை. தன்னை பகுத்தறிவின் விசாரணைக்கு உட்படுத்திக்கொள்ள தயங்காத நம்பிக்கை. அதனால்தான் உண்மை இறை நம்பிக்கை உள்ளவர்கள் நாத்திகர்களை வெறுக்க மாட்டார்கள். ஏனெனில் அவர்கள் தங்கள் நம்பிக்கையின் நல்விளைவைத்தான் நம்புகிறார்கள்.
ஆனால் தன் நம்பிக்கையை அடையாளமாக மாற்றிக்கொள்பவர்கள், அதை மூடிய நம்பிக்கையாக, மூட நம்பிக்கையாக மாற்றுகிறார்கள். அவர்கள் அவர்களது நம்பிக்கையை ஏற்காதவர்களை வெறுக்கிறார்கள். அவர்கள் சமூகத்தில் வன்முறையைத்தான் விதைப்பார்கள்.
மூட நம்பிக்கையின் பிரச்சினை நரபலி மட்டுமல்ல; பேராசை, அடையாளப் பித்து, அதிகாரப் பித்து, வன்முறை நோக்கு எல்லாமேதான். பகுத்தறிவு மட்டுமே அதற்கான மருந்து.
கட்டுரையாளர் குறிப்பு:
ராஜன் குறை கிருஷ்ணன் – பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி. இவரைத் தொடர்புகொள்ள: rajankurai@gmail.com
இங்கிலாந்து மகாராணி மரணமும், இந்தியாவின் வாரிசு அரசியல் தலைமை பிரச்சினையும்… – ராஜன் குறை
காங்கிரஸ் தேர்தல்: வாக்களிப்பது எப்படி?
சிறப்பு கட்டுரை அருமையாக தந்தமைக்கு வாழ்த்துக்கள் : நாட்டில் பாரத மாதாக்கீ ஜே என்ற கோசம் போட்டே மக்கள பிளவு படுத்துவதும் ஒரு வகையான மூட நம்பிக்கை, பகுத்தறிவு மக்கள் இருப்பதால் அவ்வப்போது எதிர்வினை ஆற்ற முடிகிறது.