இலங்கையில் அடுத்தடுத்து மூடப்படும் சூப்பர் மார்க்கெட்டுகள்!

Published On:

| By christopher

இலங்கையில் பொருளாதார நெருக்கடி கடும் உச்சத்தை அடைந்துள்ளது. அங்கு அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. குறிப்பாக எரிபொருள் தட்டுப்பாடு புதிய உச்சத்தை அடைந்துள்ளது. நாட்டில் உள்ள பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் நீண்ட வரிசையில் பல மணி நேரங்கள் காத்திருந்து எரிபொருள் பெற்று வருகின்றனர். இதில் ஆங்காங்கே சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் கையிருப்பு தீர்ந்து விட்டதால் அந்த நிலையங்கள் மூடப்பட்டன.

இதனால் ஆங்காங்கே எரிபொருளுக்காக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. எரிபொருள் தட்டுப்பாட்டினால் வாகன இயக்கங்கள் மிகவும் குறைவாக உள்ளது. தற்பொழுது வாகன போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ள நிலையில், விற்பனை கடைகள் மற்றும் சந்தைகளில் அத்தியாவசிய பொருட்கள் வரத்து குறைந்துள்ளது. இதனால் இலங்கையில் கடும் உணவு தட்டுப்பாடு நிலவும் நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரமாகவே அத்தியாவசிய பொருட்கள் வரத்து குறைந்துள்ளதால் பல சூப்பர் மார்க்கெட்டிலும், இதர கடைகளிலும் அத்தியாவசிய பொருட்களின் கையிருப்பு தீர்ந்துவிட்டது.

அத்தியாவசிய பொருட்கள் கையிருப்பு இல்லாமல் கடையை மட்டும் திறந்து வைத்து என்ன செய்வது என்று கருதி கடை உரிமையாளர்கள், தங்களது கடைகளை மூடி வருகின்றனர். இதனால் இலங்கையில் தற்போது கடைகள் அடுத்தடுத்து மூடப்பட்டு வருகின்றன. இந்த நிலைமையினால் இலங்கை மக்கள் பட்டினிச்சாவை எதிர்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்று மனித ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஏற்கனவே இலங்கையில் அனைத்து மக்களும் கடுமையான உணவு தட்டுப்பாட்டை சந்திக்க வேண்டி இருக்கும் என்று இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்க எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel