வயிற்றைப் பதம் பார்க்காத உன்னத உணவுகளில் இட்லிக்கு அடுத்த இடம் இடியாப்பத்துக்குதான். ஆவியில் வேக வைப்பதால் எளிதில் ஜீரணமாகிவிடும் என்பதால் குழந்தைகள் முதல் முதியோர் வரை அனைவருக்கும் ஏற்ற உணவும்கூட. சாப்பிடுவதைப்போல இடியாப்பம் தயாரிப்பது அவ்வளவு எளிதாக இருப்பதில்லை. மாவு தயாரிப்பதில் தொடங்கி, இடியாப்பமாக வேக வைத்து எடுப்பது வரை நமக்கிருக்கும் சந்தேங்களுக்காக தீர்வு இதோ..
“தேவையான அளவு பச்சரிசியை நன்றாகக் கழுவி, 2 முதல் 3 மணி நேரம் ஊற வைக்கவும். ஊற வைத்த அரிசியை ஒரு துணியை விரித்து அதில் பரப்பி நிழலில் அல்லது ஃபேன் காற்றில் காய வைக்க வேண்டும். நேரடி சூரிய ஒளியில் காயவைக்கும்போது அதிக வெப்பத்தின் காரணத்தால் ஊறிய அரிசியின் பக்குவம் மாற ஆரம்பிக்கும். இதனால் இடியாப்பம் பிழியும்போது நூல் நூலாக வராமல் உடைந்து போகும். காய்ந்த அரிசியை மாவு மில்லில் கொடுத்து அரைத்து வாங்கி வந்து, ஒரு பேப்பரில் கொட்டி அரைத்த சூடு நீங்கும் வரை ஆற வைக்கவும்.
அதன் பிறகு மாவை ஒரு வாணலியில் போட்டு குறைந்த தீயில் 5-7 நிமிடங்கள் வறுத்து, ஆற வைத்து ஒரு டப்பாவில் சேமித்து வைத்துக் கொள்ளலாம். இந்த மாவை ஒரு மாதம் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம். மாவை வறுக்காவிட்டால் நீண்ட நாள்களுக்குச் சேமிக்க முடியாது. மேலும், இடியாப்பம் பிழியும்போது கட்டிக் கட்டியாக வருவதற்கும் வாய்ப்புள்ளது. வீட்டில் மாவு தயாரிக்க வாய்ப்பில்லாதவர்கள் கடைகளில் விற்கும் மாவை வாங்கிப் பயன்படுத்தலாம்.
இடியாப்ப மாவில் உப்பு, வெந்நீர் சேர்த்துக் கலந்து வைத்துக் கொள்ள வேண்டும். வெந்நீர் சேர்க்கும்போதே மாவு பாதியளவுக்கு வெந்துவிடும். மாவு அதிக கெட்டியாக இல்லாமல் சற்று நெகிழ்வாக இருக்க வேண்டும். பிழிந்த இடியாப்பத்தை 5-7 நிமிடங்கள் ஆவியில் வேக வைத்து எடுக்க வேண்டும்.
ராகி, கம்பு, வரகு உள்ளிட்ட சிறு தானியங்களில் இடியாப்பம் செய்வதற்கு அவற்றை மூன்று மணி நேரம் ஊற வைத்து, காய வைத்து மெஷினில் கொடுத்து அரைக்க வேண்டும். அரைத்த மாவை வாணலியில் குறைந்த தீயில் 5 – 7 நிமிடங்கள் வறுத்து, ஒரு டப்பாவில் போட்டு வைத்துக்கொள்ளலாம். இடியாப்பம் செய்யும்போது சிறுதானிய மாவு 70 சதவிகிதம் பச்சரிசி மாவு 30 சதவிகிதம் என்ற அளவில் கலந்து செய்யலாம். பச்சரிசி மாவு சேர்க்கும்போதுதான் சிறுதானிய இடியாப்பம் மிருதுவாக சாப்பிட ஏதுவாக இருக்கும். இடியாப்பம் பிழிவதற்கும் எளிதாக இருக்கும். அனைத்து சிறுதானிய மாவையும் சம பங்கு எடுத்து, அதனுடன் பச்சரிசி மாவு சேர்த்தும் இடியாப்பம் செய்யலாம்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டிஜிட்டல் திண்ணை: எடப்பாடி வீட்டில் நடந்தது என்ன? போட்டுடைத்த நத்தம், வேலுமணி
அங்கேயும் ஃபேக் ஐடியா? : அப்டேட் குமாரு