அறுசுவைகளும் கலந்த உணவை சாப்பிடுவதே அனைவருக்கும் ஏற்றது. பாதுகாப்பானது. சிறந்தது. அந்த வகையில் இந்த சுண்டைக்காய் பொடிமாஸ் வயிற்றுப்புழுக்களை வெளியேற்றும். குடல் புண்களை ஆற்றும். ரத்தத்தைச் சுத்தப்படுத்தும். ரத்தச் சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைக்க உதவும். வாரத்துக்கு ஒருநாள் இந்த பொடிமாஸ் செய்து கொடுத்து வீட்டிலுள்ளவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.
என்ன தேவை?
சுண்டைக்காய் – ஒரு கப்
வேகவைத்த கடலைப்பருப்பு – அரை கப்
சின்ன வெங்காயம் – 10
பூண்டுப் பல் – 5
தக்காளி – ஒன்று
மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள் – கால் டீஸ்பூன்
கடுகு, உளுத்தம்பருப்பு – தலா கால் டீஸ்பூன்
எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
எப்படிச் செய்வது?
சுண்டைக்காயை காம்பு நீக்கிப் பாதியாக நறுக்கி, தண்ணீரில் அலசி எடுக்கவும். வெங்காயம், தக்காளி, பூண்டு மூன்றையும் பொடியாக நறுக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டுச் சூடாக்கி கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளிக்கவும். இதில் நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும். இதனுடன் தக்காளி, பூண்டு சேர்த்து வதக்கவும். பிறகு, சுண்டைக்காயையும் சேர்த்து வதக்கவும். மிளகாய்த்தூள், உப்பு, கரம் மசாலாத்தூள் சேர்த்துக் கிளறவும். சுண்டைக்காய் வெந்ததும், வேகவைத்த கடலைப்பருப்பு சேர்த்து நன்றாகக் கிளறி இறக்கவும்.
கிச்சன் கீர்த்தனா: வாழைப்பூ பொரியல்
சண்டே ஸ்பெஷல்: எடையைக் குறைத்த பிறகு உணவுக்கட்டுப்பாடும் உடற்பயிற்சியும் ஆயுள் முழுக்க அவசியமா?