சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கு விசாரணைக்கு ஆஜராகும்படி, தமிழக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோருக்கு அமலாக்கப் பிரிவு அனுப்பிய சம்மனை சென்னை உயர் நீதிமன்றம் ரத்துசெய்து உத்தரவிட்டுள்ளது.
அதிமுக ஆட்சிக் காலத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜி, ஓட்டுநர் மற்றும் நடத்துநர் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்ததாக மத்திய குற்றப்பிரிவு போலீசில் 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இவ்வழக்கில் செந்தில்பாலாஜி, சண்முகம், அசோக்குமார் ஆகியோர் சேர்க்கப்பட்டனர். இந்த வழக்குகள் எம்பி – எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தன.
இதில் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு எதிரான ஒரு வழக்கை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.
மற்ற இரண்டு வழக்குகளில் உயர் நீதிமன்றம் தடைவிதித்தது. இந்த நிலையில், சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் செந்தில் பாலாஜி ஆஜராக சம்மன் அமலாக்கத் துறை சார்பில் அனுப்பப்பட்டது.
இதனை ரத்து செய்யவேண்டும் என்று செந்தில்பாலாஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த மனுவை நீதிபதிகள் டி. ராஜா, குமரேஷ் ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்தது. இதில் செந்தில் பாலாஜி தரப்பில், ’அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது தவறானது,
அமலாக்கத்துறை வழக்கை ரத்து செய்யக்கோரி 3 மனுக்கள் தாக்கல் செய்துள்ளோம். வழக்கை தீர விசாரித்தால் உண்மை தெரிய வரும்’ என்று வாதிடப்பட்டது.
சென்னை குற்றப்பிரிவு போலீசார் பதிவு செய்துள்ள வழக்குகளின் விசாரணைக்கு உயர் நீதிமன்றம் ஏற்கனவே தடை விதித்துள்ள நிலையில்,
அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருப்பதாகவும், அமலாக்கப்பிரிவு கோரிய ஆவணங்கள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
மத்திய அரசு சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஆஜராகி வாதாடினார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் தீர்ப்பை தள்ளி வைத்திருந்தார்.
இந்த நிலையில் நேற்று (செப்டம்பர் 1) தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், செந்தில் பாலாஜி உள்ளிட்டோருக்கு அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை ரத்து செய்து உத்தரவிட்டனர்.
ஜெ.பிரகாஷ்
மாவட்டப் பொறுப்பாளர்களுக்கு ஸ்டாலின் மெசேஜ்!