கோடை விடுமுறையை முன்னிட்டு கூடுதலாக 71 என மொத்தம் 458 குளிர்சாதனப் பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறை இன்று (ஏப்ரல் 7) அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் தொலை தூரம் பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்காக கோடை கால விடுமுறையை முன்னிட்டு 387 குளிர்சாதன பேருந்துகள் ஏற்கனவே ஆன்லைன் முன்பதிவு திட்டத்தில் இணைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.
மேலும், பயணிகளின் தேவையையும் வசதியையும் கருத்தில் கொண்டு தற்போது கூடுதலாக 71 குளிர்சாதன பேருந்துகள் இணைக்கப்பட்டு, மொத்தமாக 458 குளிர்சாதனப் பேருந்துகள் ஆன்லைன் முன்பதிவு திட்டத்தில் பயணிகளின் வசதிக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எனவே பயணிகள் தங்கள் பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு www.tnstc.in மற்றும் TNSTC அதிகாரபூர்வ மொபைல் செயலி மூலம் முன்பதிவு செய்து சிரமமின்றி பயணிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே போன்று தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களுக்கு இந்த கோடை விடுமுறையில் குடும்பத்துடன் சென்று வரும் வகையில் சிறப்பு ரயில்களை தென்னக ரயில்வே அறிவித்து வருகிறது.
நாகர்கோவில் டூ சென்னை!
அதன்படி, “நாகர்கோவிலில் இன்று (ஏப்ரல் 7) மற்றும் வரும் 14, 21,28ஆம் தேதிகளில் (ஞாயிற்றுக்கிழமைகளில்) மாலை 5.45 மணிக்கு புறப்படும் அதிவிரைவு சிறப்பு ரயில் (06019), மறுநாள் மதியம் 12.10 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும்.
மறுமார்க்கமாக, சென்னை சென்டிரலில் இருந்து நாளை (ஏப்ரல்8) மற்றும் வரும் 15, 22, 29ஆம் தேதிகளில் (திங்கள் கிழமைகளில்) மதியம் 3.10 மணிக்கு புறப்படும் அதிவிரைவு சிறப்பு ரயில் மறுநாள் காலை 8.30 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்.
சென்னை – நாகர்கோவில் இடையே இயக்கப்படும் இந்த ரயிலானது சென்னையிலிருந்து புறப்பட்டு அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, திருப்பத்தூர், மொரப்பூர், சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், கொடைக்கானல், விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, மற்றும் வாஞ்சிமணியாச்சி, நெல்லை ஆகிய நிறுத்தங்களில் நின்று நாகர்கோவிலை சென்றடையும் என இரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா