Summer heat: Schools must postpone opening! - Ramadoss

கோடை வெயில்… தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு ஒத்திவைக்கப்படுமா?

தமிழகம்

கோடை வெயில் சுட்டெரிப்பதால், தமிழகத்தில் பள்ளிகள் திறப்பை ஒத்திவைக்க வேண்டும் என பாமக நிறுவனர்  ராமதாஸ் இன்று (மே 31) வலியுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் கோடை விடுமுறை

தமிழகத்தில் 1 முதல் 12ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் பொதுத்தேர்வு நடத்தப்பட்டு, மாணவர்கள் தற்போது கோடை விடுமுறையில் உள்ளனர்.

ஜூன் 6ஆம் தேதி தமிழக பாடத்திட்டத்தின்கீழ் இயங்கும் அரசு, அரசு உதவிப்பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் 1 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் கோடை வெயில் அதிகரித்து வருவதால், மாணவர்களின் நலன்கருதி தமிழகத்தில் பள்ளிகள் திறப்பை ஜூன் 2வது பாதிக்கு தள்ளி வைக்கக்கோரி  ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

ராமதாஸ் அறிக்கை:

இதுத்தொடர்பாக அவர், “தமிழ்நாட்டின்  அனைத்து மாவட்டங்களிலும் கொளுத்தி வரும் கோடை வெயிலால் மக்கள் கடுமையான அவதிக்கு உள்ளாகியுள்ள நிலையில்,  ஜூன் முதல் வாரத்திலேயே பள்ளிகள் திறப்பது  நியாயமற்றது. அரசின் இந்த முடிவு பள்ளி செல்லும் குழந்தைகளை கடுமையாக பாதிக்கும்.

கடந்த சில ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நடப்பாண்டில் கத்திரி வெயிலுக்கு முன்பாகவே தமிழகத்தின் பல மாவட்டங்களில் அதிக அளவாக 113 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் பதிவானது. வெப்பவாதத்தால் பாதிக்கப்பட்டு கிட்டத்தட்ட 10 பேர் உயிரிழந்தனர்.

கோடை மழையின் காரணமாக  கத்திரி வெயிலின் தாக்கம் சற்று குறைந்திருந்தாலும், கடந்த சில நாட்களாக வெப்பம் மீண்டும் அதிகரித்து வருகிறது. சென்னையில் 108 டிகிரி வரை வெப்பம் பதிவாகியுள்ளது. இத்தகைய சூழலில்  பள்ளிகளை திறப்பது சரியான முடிவு இல்லை.

அண்டை மாநிலமான புதுச்சேரியில் ஜூன் 6-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், வெயிலின் தாக்கத்தைக் கருத்தில் கொண்டு பள்ளிகள் திறப்பு ஜூன் 12-ஆம் நாளுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) பாடத்திட்டத்தைப் பின்பற்றும் பள்ளிகளுக்கு 50 நாட்கள் கோடை விடுமுறை அளிக்கப்பட்டு, ஜுன் 21-ஆம் தேதி தான் திறக்கப்பட உள்ளன.  அவ்வாறு இருக்கும் போது தமிழகத்தில் மட்டும்  ஜூன் முதல் வாரத்திலேயே பள்ளிகளை திறப்பது நியாயமற்றது.

மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு தான் பள்ளிகள் திறப்பை அரசு தீர்மானிக்க வேண்டும். கடந்த 2023-24 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில்  பள்ளிகள் ஜூன் 1-ஆம் தேதி திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

அப்போதும் தமிழ்நாட்டில் கடுமையான வெப்ப அலை வீசியதைத் தொடர்ந்து பள்ளிகள் திறப்பை ஒத்தி வைக்க வேண்டும் என்று  வலியுறுத்தினேன். அதையேற்று பள்ளிகள் திறப்பு முதலில் ஜூன் 7-ஆம் தேதிக்கும், பின்னர்  ஜூன் 14-ஆம் தேதிக்கும் ஒத்திவைக்கப்பட்டது.

கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் மிகக் கடுமையான வெப்பம் வாட்டும் நிலையில், ஜூன் 6-ஆம் தேதி பள்ளிகளைத் திறப்பது எந்த வகையில் நியாயம்? கோடை வெயில் கடுமையாக இருப்பதால் பொதுமக்களும், தொழிலாளர்களும் பகலில் வீடுகளை விட்டு வெளியில் வர வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

இத்தகைய சூழலில் பள்ளிகளை திறந்தால் எந்த பெற்றோரும் தங்கள் பிள்ளைகளை பள்ளிகளுக்கு அனுப்ப மாட்டார்கள். எனவே, நிலைமையின்  தீவிரத்தை உணர்ந்து  தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பை ஜூன் மாதத்தின் இரண்டாம் பாதிக்கு ஒத்திவைக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

இந்து

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

3 ஆயிரம் ஆபாச வீடியோக்கள்… நாடு திரும்பிய பிரஜ்வல்: நள்ளிரவில் கைது!

என்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் ஏடிஎஸ்பி வெள்ளதுரை சஸ்பெண்ட்: ஏன்?

+1
2
+1
3
+1
1
+1
6
+1
0
+1
2
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *