போலீஸ் ஸ்டேஷனில் கைதி தற்கொலை! பின்னணி என்ன?

தமிழகம்

இன்று  (செப்டம்பர் 26) காலை சுமார் 7  மணியளவில் சமயபுரம் மாரியம்மன் கோயிலில்  பக்தர் ஒருவரின் செல்போனை திருடியதாக ஒருவரை  சக பக்தர்கள் பிடித்து கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர்.

அவரை விசாரித்ததில் அவர்  அரியலூர் மாவட்டம் தூத்துர் காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட ஓரியூர் கிராமத்தைச் சேர்ந்த முருகானந்தம் என்பது தெரியவந்தது.  அவரை கோயில் நிர்வாகத்தினர் சமயபுரம் காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்று  ஒப்படைத்துள்ளனர். 

அந்த நேரத்தில் சமயபுரம்  போலீஸ் ஸ்டேஷனில் காவல் அதிகாரிகள் யாரும் இல்லை. கோவையில் பதற்றமாக இருப்பதால் தமிழகத்தின் பல்வேறு போலீஸ் ஸ்டேஷன்களில் இருந்தும் போலீசாரை கோவைக்கு டூட்டி  போட்டுவிட்டார்கள்.

அதனால் சமயபுரம் எஸ்.ஐ. உள்ளிட்ட போலீஸார் கோவை டூட்டிக்கு சென்றுவிட்டனர். இந்த நிலையில் இரவு முதல்  பாரா டூட்டி பார்த்த குமரேசன் என்ற காவலர் மட்டுமே இருந்திருக்கிறார்.

அவரிடம் செல்போன் திருட்டு புகாருக்கு ஆளான முருகானந்தத்தை ஒப்படைத்தார்கள் கோயில் தரப்பினர். அவர் ஸ்டேஷனில் இருக்கும் கைதி அறையில் முருகானந்தத்தை  உட்கார வைத்திருக்கிறார்.

காலை எட்டு மணிக்கு பாரா டூட்டி மாற்றி ராம்கி என்ற காவலர் டூட்டியை ஏற்றுக் கொள்ள வந்தார். பாரா மாற்றும்போது  கைதிகள் அறையில் யார் யார் இருக்கிறார்கள் என்பது உட்பட விவரங்களை ஒப்படைப்பது வழக்கம்.

அந்த வகையில்  ராம்கி அந்த விவரங்களை செக் செய்யும்போது  கைதி அறையில் குறிப்பிட்ட முருகானந்தம் என்பவர் இல்லை.

இதுபற்றி முந்தைய டூட்டி பார்த்த குமரேசனுக்கு போன் போட்டுக் கேட்டிருக்கிறார் ராம்கி.

‘அவன் பாத் ரூம் போறேன்னுட்டு போனான்’ என்று சொல்லியிருக்கிறார்  குமரேசன்.

கொஞ்ச நேரம் காத்திருந்து பார்த்தும் அந்த கைதி வராததால் சந்தேகமடைந்த பாரா காவலர் ராம்கி,  போலீஸ் ஸ்டேஷனில் இருக்கும் பாத் ரூமுக்கு காலை 11 மணியளவில்  போய் பார்த்திருக்கிறார்.

அங்கே அதிர்ச்சி காத்திருந்தது. போலீஸ் கஸ்டடியில்  இருந்த முருகானந்தம் தனது இடுப்பில் இருந்த அரைஞாண் கயிறால் கழுத்தை இறுக்கிக் கொண்டு தற்கொலை  செய்துகொண்டார்.

இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சமயபுரம் பாரா காவலர் ராம்கி உடனடியாக மேலதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்திருக்கிறார்.

தகவல் அறிந்து திருச்சி மாவட்ட எஸ்.பி. சுஜித் குமார் நேரடியாக சமயபுரம் காவல்நிலையம் சென்று விசாரணை மேற்கொண்டார்.

பணியில் இருந்த பாரா காவலர்கள் மீது துறை நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார் எஸ்.பி.

நாம் போலீஸ் வட்டாரத்தில் விசாரித்தபோது, “மத்திய மண்டலமான திருச்சி மண்டலத்திலிருந்து ஏகப்பட்ட போலீஸார் கோவையில் பாதுகாப்பு பணிக்கு அனுப்பப்பட்டுள்ளதால்  காவல் நிலையத்தில் ஓரிரு போலீஸார் மட்டும் இருக்கிறார்கள். இதனால் தான் இந்த நிலை ஏற்பட்டிருக்கிறது.

மேலும் இறந்து போன முருகானந்தம் மீது பெற்ற  தாயை கொலை செய்த வழக்கு நிலுவையில் இருப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

அவர் தற்கொலை செய்துகொண்ட காரணம் பற்றி தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்கிறார்கள்.

வணங்காமுடி 

ஆன்லைன் ரம்மி தடைச் சட்டம்: தமிழக அமைச்சரவை ஒப்புதல்!

அன்று ஆடியோ, இன்று வீடியோ: திமுக உட்கட்சித் தேர்தலில் திருப்பங்கள்!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *