’தமிழ்நாட்டின் நிதி எங்கே?’ மத்திய அரசுக்கு எதிராக நூதனப் போராட்டம்!

Published On:

| By christopher

stundents protest against union govt

பல்கலைக்கழக துணை வேந்தர்களை ஆளுநர்களே நியமிக்க கோரும் யுஜிசி வரைவு அறிக்கை, பட்ஜெட்டில் தொடர்ந்து புறக்கணிப்பு, மும்மொழி கொள்கையை ஏற்காவிட்டால் கல்வி நிதி தர முடியாது உள்ளிட்ட மத்திய அரசின் நடவடிக்கைகள் தமிழக அரசியல் தலைவர்கள், மாணவர்கள், பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி வருகின்றன. stundents protest against union govt

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக மத்திய அரசுக்கு எதிராக பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகள் சார்பில் தமிழகத்தில் போராட்டங்கள் அதிகரித்து வருகிறது.

அதன்படி, பல்கலைக்கழக மானியக் குழுவின் வரைவு அறிக்கையை திரும்ப பெற வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் அரவிந்தசாமி தலைமையில் சென்னை சாஸ்திரி பவனை முற்றுகையிட்டு நேற்று போராட்டம் நடத்தப்பட்டது.

அப்போது பல்கலைக் கழக மானியக்குழுவின் வரைவு அறிக்கையை திரும்பப் பெற வேண்டும் எனவும், மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு கல்விக்கு அளிக்க வேண்டிய நிதியை வழங்க வலியுறுத்தியும் கோஷம் எழுப்பினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் அரவிந்தசாமி பேசுகையில், “மத்திய அரசு யுஜிசி வரைவு நெறிமுறைகளை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இது மாநில உரிமைகளுக்கும், கூட்டாட்சி தத்துவத்திற்கும் எதிராக உள்ளது. பல்கலைக் கழகங்களுக்கு துணைவேந்தர்களாக கார்ப்பரேட் கம்பெனியில் பணிபுரிந்தவர்கள் நியமிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 8 பல்கலைக்கழகங்கள் துணைவேந்தர்கள் இல்லாமல் செயல்பட்டு வருகின்றன. பல்கலைக்கழக வேந்தரான ஆளுநர் தமிழ்நாட்டிற்கு எதிராக செயல்பட்டு வருகிறார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த அரசுக்கு எந்த ஒரு பங்கும் இல்லாமல் கல்வியை காவிமயப்படுத்துவதும் கார்ப்பரேட் வசம் ஒப்படைப்பதையும் கண்டிக்கிறோம். மத்திய அரசு 12 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டியுள்ளது.

மும்மொழி கொள்கையை ஏற்றுக் கொண்டால் தான் மத்திய அரசு நிதி தரும் என்று அரசியல் அமைப்பு சட்டம் சொல்லவில்லை. மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானை வன்மையாக கண்டிக்கிறோம். பாஜக அரசு மாணவர்களை வஞ்சிக்காமல் நிதியை உடனடியாக ஒதுக்க வேண்டும். ஆளுங்கட்சியுடன் இணைந்து மாணவர் சங்கங்களை ஒன்றிணைத்து மிகப்பெரிய போராட்டங்களை நடத்த உள்ளோம்” என்றார்.

இதனையடுத்து போராட்டம் நடத்திய இந்திய மாணவர் சங்கத்தினரை சென்னை நுங்கம்பாக்கம் போலீசார் குண்டுக்கட்டாக கைது செய்தனர்.

இதே போன்று கோவை, திருப்பூர், மதுரை என பல்வேறு மாவட்டங்களிலும் மாணவர் சங்கத்தினர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் மும்மொழி கொள்கையை ஏற்காவிட்டால் கல்வி நிதி தர முடியாது என கூறிய மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கோலமிட்டு எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.

மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு நிதி வழங்காததை திமுக கூட்டணிக் கட்சி சார்பில் இன்று மாலையில் சென்னை ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

இந்த நிலையில் சென்னை மண்டல திமுக ஐடி விங் சார்பில், ‘தமிழ்நாட்டின் நிதி எங்கே?’, ‘Stop Hindi Impostion’ என குறிப்பிட்டு தங்களது வீட்டின் முன் கோலம் வரைந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share