சென்னை திருவொற்றியூரில் 10 நாட்களுக்கு பிறகு திறக்கப்பட்ட தனியார் பள்ளியில் இன்று (நவம்பர் 4) மீண்டும் வாயுக்கசிவு ஏற்பட்டு மாணவர்கள் மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை திருவொற்றியூர் கிராம தெரு பகுதியில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் 1000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.
கடந்த மாதம் 25ஆம் தேதி இப்பள்ளியில் வாயு கசிவு ஏற்பட்டு 35 மாணவிகள் மயங்கி விழுந்தனர். உடனடியாக அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதனையடுத்து கல்வித்துறை அதிகாரிகள் பள்ளியில் ஆய்வு செய்தனர். தொடர்ந்து அப்பள்ளி கடந்த 10 நாட்களாக மூடப்பட்டது.
எனினும் வாயுக்கசிவிற்கான காரணத்தை மாணவிகளின் பெற்றோர் கேட்டபோதும் பள்ளி நிர்வாகம் பதில் தெரிவிக்கவில்லை.
இந்த நிலையில் மாவட்ட கல்வி அலுவலர் அறுவுறுத்தலின் படி இன்று பள்ளி மீண்டும் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. மேலும் பள்ளி மாணவர்களுக்கு முழு பாதுகாப்பான சூழ்நிலைகள் கொடுக்கப்பட்டுள்ளது என்றும் பெற்றோரிடம் தெரிவிக்கப்பட்டது.
அதன்படி இன்று பள்ளி மீண்டும் திறக்கப்பட்ட நிலையில் திடீரென வாயுக்கசிவு ஏற்பட்டு 8 மாணவிகளுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. இதனையறிந்து பதறியபடி பள்ளிக்கு வந்த பெற்றோர் தங்களுடைய பிள்ளைகளை அவசரமாக வீட்டுக்கு அழைத்துச் சென்றனர்.
மேலும் வாயுக்கசிவு ஏற்பட்டதற்கான காரணத்தை தெரிவிக்கக்கோரி பெற்றோர்கள் பள்ளி ஆசிரியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போலீசாரும் குவிக்கப்பட்ட நிலையில் அப்பகுதியில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
டெபாசிட் போனது மட்டும் 1 கோடி… 245 வது முறையாக களம் இறங்கும் பத்மராஜன்
குடலில் ஒரு சொட்டு பருக்கை இல்லை… மைனர் பணிப்பெண் கொலையில் வெளியான அதிர்ச்சி தகவல்!