திருப்பத்தூரில் பள்ளி நேரத்தில் கூடுதல் பஸ் இயக்கக்கோரி மாணவர்கள் பஸ்ஸை சிறை பிடித்து சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் தாலுகா அனேரி, ராச்சமங்கலம், ஊராட்சியில் இருந்து சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் திருப்பத்தூர் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படித்து வருகிறார்கள். இவர்களுக்காக பள்ளி நேரத்தில் பஸ் இயக்கப்படுகிறது. திருப்பத்தூரில் இருந்து காலை 8 மணிக்கு வெங்களாபுரம் வழியாக விநாயகபுரம் சென்று மீண்டும் அங்கிருந்து ராச்சமங்கலம், அன்னேரி வெங்களாபுரம் வழியாக திருப்பத்தூர் வந்து அடைகிறது.
இந்தப் பகுதிக்கு ஒரே பஸ் மட்டும் வந்து செல்வதாலும், ஏராளமான மாணவர்கள் ஒரே பஸ்ஸில் செல்வதாகவும் பலருக்கு பஸ்ஸில் இடம் கிடைப்பதில்லை, படிக்கட்டில் தொங்கியபடி செல்லும் நிலை உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அனேரி – திருப்பத்தூர் மெயின் ரோட்டில் திடீரென 200க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ -மாணவிகள் அரசு பஸ்ஸை சிறை பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து பேசியுள்ள மாணவர்கள், “பல்வேறு ஊரிலிருந்து மாணவ – மாணவிகள் இந்த பஸ் மூலம் திருப்பத்தூருக்கு பள்ளிக்குச் செல்ல வேண்டும். இதே பஸ்ஸில் ஊர் பொதுமக்களும் வருகிறார்கள். இதனால் பஸ்ஸில் கடும் நெருக்கடி ஏற்படுகிறது, மீண்டும் மாலையில் வீடு திரும்பும் போதும் இதே நிலைமை உள்ளது எனவே இந்த பகுதிகளுக்கு பள்ளி நேரத்தில் கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும்” என்று கூறினர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் திருப்பத்தூர் தாலுகா போலீஸார் மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக அலுவலர்கள் நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்தி, உடனடியாக கூடுதல் பஸ் இயக்குவதாக கூறியதன் பேரில் சாலை மறியலை கைவிட்டு மாணவர்கள் பள்ளிக்குச் சென்றனர். பள்ளி மாணவர்கள் பஸ்ஸை சிறை பிடித்து சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
-ராஜ்