மாத்திரையால் உயிரிழந்த பள்ளி மாணவி: நடந்தது என்ன?

Published On:

| By Monisha

students ate iron tablets more

அரசு பள்ளியில் வழங்கப்பட்ட சத்து மாத்திரையை அதிகளவு சாப்பிட்டு மாணவி உயிரிழந்த விவகாரத்தில் தலைமையாசிரியர் உள்பட 2 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு அரசு சுகாதாரத்துறை மூலம் குழந்தைகள் மற்றும் மாணவர்களுக்கு இரும்பு மற்றும் ஃபோலிக் சத்து மாத்திரைகளை வழங்கி வருகிறது.

அதன்படி நீலகிரி மாவட்டம் காந்தல் பகுதியில் உதகை நகராட்சி நிர்வாகத்திற்குச் சொந்தமான உருது நடுநிலைப்பள்ளியில் பயிலும் ஒவ்வொரு மாணவர்களுக்கும் கடந்த 6 ஆம் தேதி தலா 50 சத்து மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளது.

அதனை வாங்கி கொண்ட 13-14 வயதிற்குட்பட்ட 8 ஆம் வகுப்பு படிக்கும் 4 மாணவிகள் மற்றும் 2 மாணவர்கள் இடையில் யார் அதிக மாத்திரை சாப்பிடுவது என்று வாக்குவாதம் உருவாகியுள்ளது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் பெரிதாக, அனைவரும் மாத்திரையைச் சாப்பிடத் தொடங்கியுள்ளனர்.

இதில் மாத்திரைகளை சாக்லேட் சாப்பிடுவது போல சாப்பிட்ட 4 மாணவிகள் உட்பட 6 பேரும் ஒரு கட்டத்தில் மயங்கி விழுந்துள்ளனர். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த சக மாணவிகள் ஆசிரியர்களுக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து உடனடியாக அனைவரும் உதகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு அவர்களுக்கு அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் மேல் சிகிச்சைக்காக மாணவிகள் நால்வரும் கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மார்ச் 6 ஆம் தேதி இரவே அனுமதிக்கப்பட்டனர்.

இதற்கிடையே 4 நாட்களாக உதகை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஆஷிக் மற்றும் அமீன் ஆகிய 2 மாணவர்கள் தற்போது நலமுடன் உள்ளனர்.

மாணவி உயிரிழப்பு

ஆனால் ஜெய்பா பாத்திமா என்ற மாணவிக்கு உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளது. அவரை பரிசோதித்ததில் அவருக்குக் கல்லீரல் செயலிழந்திருப்பது தெரியவந்தது. இதனால் அவர் கோவை அரசு மருத்துவமனையில் இருந்து சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு நேற்று மதியம் மாற்றப்படுவதாக மருத்துவமனை முதல்வர் நிர்மலா தெரிவித்தார்.

நேற்று மாலை 3.30 மணியளவில் ஆம்புலன்ஸ் மூலம் சென்னைக்கு வரும் வழியில் அவருக்கு மூச்சுத்திணறல் அதிகரித்து உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளது. இதனால் அருகிருந்த சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக உடனடியாக ஜெய்பா அனுமதிக்கப்பட்டார். ஆனால் சேலம் அரசு மருத்துவமனையிலேயே சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார்.

பள்ளிகளில் இது போன்று மாத்திரைகளை வழங்கும் போது ஒரு மருத்துவ மேற்பார்வையாளர் அல்லது பள்ளியில் உள்ள ஆசிரியர் மூலம் இது வழங்கப்படுவது வழக்கம். அதிலும் வாரம் ஒருமுறை தான் மாத்திரைகளை வழங்க வேண்டுமே தவிர மொத்தமாக அதிகளவு மாத்திரைகளையும் வழங்கக்கூடாது.

அதிகளவு சத்து மாத்திரைகளை சாப்பிட்டு மாணவி உயிரிழந்த விவகாரத்தில் தலைமையாசிரியர் முகமது அமீன், நோடல் அதிகாரியும் ஆசிரியருமான கலைவாணி ஆகிய இரண்டு பேரை பணியிடை நீக்கம் செய்து தொடக்கக் கல்வித்துறை அலுவலர் ஜெயக்குமார் உத்தரவிட்டுள்ளார்.

முதல்வர் நிவாரணம்

உயிரிழந்த மாணவியின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

“நீலகிரி மாவட்டம், உதகமண்டலம் வட்டம் மேற்கு கிராமத்தில் உதகமண்டலம் நகராட்சி உருது நடுநிலைப்பள்ளியில் கடந்த 6.3.2023 அன்று 4 மாணவிகள் மற்றும் 2 மாணவர்கள் அளவுக்கு அதிகமாக சத்து மாத்திரையை உட்கொண்டதால் உடல்நலம் பாதிக்கப்பட்டனர் என்றும், இவர்களில் 4 மாணவிகளும் மேல் சிகிச்சைக்காகக் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, இதில் ஜெய்பா பாத்திமா, என்ற மாணவி சென்னைக்கு உயர் சிகிச்சைக்காக அழைத்து வரும் வழியில் உயிரிழந்தார் என்ற செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

மேலும் பாதிக்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நாசஜியா, ஆயிஷா, மற்றும் குல்தூண் நிஷா ஆகியோருக்கு சிறப்பான சிகிச்சை அளிக்க அறிவுறுத்தியுள்ளேன்.

உயிரிழந்த மாணவியின் குடும்பத்தினருக்கும் அவரது நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். உயிரிழந்த மாணவியின் குடும்பத்தினருக்கு மூன்று இலட்சம் ரூபாயும், சிகிச்சை பெற்று வரும் மாணவிகளுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாயும், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து நிதியுதவி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மோனிஷா

480 ரன்களை குவித்த ஆஸ்திரேலியா… அஸ்வின் அதிரடி!

கணவரை விவாகரத்து செய்ய முடிவு எடுத்தேன்…வி ஜே அர்ச்சனா உருக்கம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel