பரங்கிமலையில் ரயில் முன் தள்ளி மாணவி கொலை : குற்றவாளிக்கு தூக்கு தண்டனை!

Published On:

| By Kavi

சென்னையில் மாணவியை ரயில் முன் தள்ளிவிட்டு கொலை செய்தவருக்கு அதிகபட்ச தண்டனையான தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பரங்கிமலை காவலா் குடியிருப்பில் வசித்த கல்லூரி மாணவி சத்யபிரியாவும், அதே குடியிருப்பில் வசித்த சதீஷ் என்ற இளைஞரும் காதலித்து வந்ததாகவும் ஒரு கட்டத்தில் பெற்றோரின் கடும் எதிா்ப்பால் சதீஷுடன் பழகுவதை, பேசுவதை சத்யபிரியா நிறுத்தியதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 2022 அக்டோபர் 13ஆம் தேதி மதியம் 12.50மணிக்கு கல்லூரி செல்வதற்காக பரங்கிமலை ரயில் நிலையத்தில் காத்திருந்த சத்யாவை, காதல் விவகாரத்தில் சதீஷ் ரயிலில் தள்ளிவிட்டு கொலை செய்தார்.

தமிழகத்தை பரபரப்பாக்கிய இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. விசாரணை அதிகாரியாக இன்ஸ்பெக்டர் ரம்யா நியமிக்கப்பட்டார்.

இவர், ரயில் நிலையம் மற்றும் ரயில் நிலையத்தின் வெளியில் இருந்த சிசிடிவி புட்டேஜ்களை ஆராய்ந்தும், சம்பவத்தை நேரடியாக பார்த்தவர்களை சாட்சியாக இணைத்தும் தீவிர விசாரணை மேற்கொண்டு சதீஷை கைது செய்தார்.

இந்தநிலையில் மேல்விசாரணை நடந்தபோது, சதீஷ் பிணையில் வருவதற்கு வழக்கறிஞர் மூலம் முயற்சி மேற்கொண்டார். இந்தநிலையில் சேகரிக்கப்பட்ட ஆதாரங்களை வைத்து சதீஷை குண்டர் சட்டத்தில் கைது செய்தார் இன்ஸ்பெக்டர் ரம்யா.

தொடர்ந்து, 90 நாட்களுக்குள் அல்லிகுளம் மகளிர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தார். இதனால் கொலையாளியால் எளிதில் ஜாமினில் வரமுடியவில்லை.

இந்த வழக்கில் அரசு வழக்கறிஞர்கள் ரவீந்திரநாத் மற்றும் ஜெயபாலன் ஆஜராகி வாதாடினார்கள்.

சதீஷ் தரப்பில் குமரன் மற்றும் சாலமன் ஆகியோர் ஆஜராகி வாதாடினார்கள். “சத்யா தானாகவே ரயில் முன் விழுந்துவிட்டார். இது ஒரு விபத்து” என்று வாதங்களை முன்வைத்தனர்.

அப்போது விசாரணை அதிகாரி ரம்யா நேரடி சாட்சியான இறந்துபோன சத்யாவின் வகுப்பு தோழி தாரணியின் வாக்குமூலம், ரயில் நிலையத்தில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளையும் வழக்கறிஞர் மூலமாக முன்வைத்தார்.

சதீஷுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்றும் போலீஸ் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

கடந்த 27ஆம் தேதி இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது.

வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சதீஷ் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளது என்றும் சதீஷுக்கான தண்டனை விவரம் வரும் 30ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று தீர்ப்பு வழங்கினார் நீதிபதி ஸ்ரீதேவி.

அதன்படி இன்று, மூன்று ஆண்டுகால சிறை தண்டனைக்கு பிறகு தூக்கு தண்டனை என்று நீதிபதி ஸ்ரீதேவி தீர்ப்பு வழங்கினார்.

இதுபோன்ற கடுமையான குற்றங்களை செய்தவர்கள் மீது இரக்கம் காட்ட முடியாது என்று குறிப்பிட்ட நீதிபதி, குற்றவாளி சதீஷுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்படுகிறது. குற்றவாளியை சாகும் வரை தூக்கிலிட வேண்டும்.

25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. அபராதம் கட்ட தவறினால் மேலும் ஒராண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும்.

பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், 10 ஆயிரம் ரூபாயும் அபராதம் விதிக்கப்படுகிறது. இதை, கட்ட தவறினால் கூடுதலாக 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும்.

இறந்த பெண்ணின் இரண்டு சகோதரிகளுக்கு கடுமையான மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதால் அவர்களுக்கு 10 லட்சம் ரூபாயை தமிழக அரசு ஒரு மாதத்திற்குள் இழப்பீடாக வழங்க வேண்டும்.

சிறை தண்டனை முடிந்த பிறகு கொலை வழக்கின் கீழ் தூக்கு தண்டனையை நிறைவேற்ற வேண்டும்” என்று அதிரடியாக உத்தரவிட்டார்.

குற்றம் நடந்து 2 ஆண்டுகள் 2 மாதம் 17ஆவது நாளில் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளார் நீதிபதி ஸ்ரீதேவி.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….

வணங்காமுடி, பிரியா

’இதுதான் ஜனநாயகமா?’ : தவெகவினர் கைதால் விஜய் ஆவேசம்!

பெருஞ்சிலைகளை விஞ்சிய பேரறிவுச் சிலை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share