மாணவர்களின் ஊக்கத் தொகை: பெற்றோர் விழிப்புடன் இருக்க அரசு எச்சரிக்கை!

Published On:

| By christopher

Student incentives: Government warns parents to be vigilant!

பள்ளி மாணவர்களுக்கு ஊக்கத் தொகை பெற்று தருவதாகக் கூறி பெற்றோர்களிடம் பணம் பறிக்கும் கும்பலிடம் கவனமாக இருக்க வேண்டுமென பள்ளிக் கல்வித்துறை எச்சரித்துள்ளது.

இது குறித்து பள்ளிக்கல்வித் துறை இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் நேற்று அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், ‘தமிழகத்தில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் தொழிற்கல்வி பாடப் பிரிவுகளில் பிளஸ் 2 பயிலும் மாணவர்களுக்கு 10 நாட்கள் தொழிற்பயிற்சி (இன்டர்ன்ஷிப்) அளிக்கப்பட்டு வருகிறது. அந்தப் பயிற்சியை முடித்த மாணவர்களுக்கு ரூ.1,000 ஊக்கத் தொகை அவர்களின் வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்பட உள்ளது. இதற்காக அனைத்துப் பள்ளிகளிலும் ஆதார் பதிவுத் திட்டம் உட்பட செயல்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு சில மோசடி கும்பல்கள் மாணவர்களின் பெற்றோரை வாட்ஸ்அப் எண்ணில் தொடர்பு கொண்டு பணம் பறிக்கும் செயலில் திருநெல்வேலி உட்பட சில மாவட்டப் பகுதிகளில் ஈடுபட்டுவருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இந்த மோசடியில் ஈடுபடுபவர்கள் 10, 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் பெற்றோரை அணுகி கல்வித்துறையில் இருந்து ஊக்கத்தொகை பெற்று தருவதாகக் கூறி, வாட்ஸ்அப் மூலம் க்யூஆர் கோடு அனுப்பி அதை ஸ்கேன் செய்தால் உதவித்தொகை கிடைக்கும் என நம்பவைத்து ஏமாற்றி அவர்கள் வங்கிக்கணக்கில் இருந்து பணத்தை எடுத்துள்ளனர். இந்த மோசடி கும்பலிடம் ஏமாந்த சுமார் 10 பேர் சைபர் க்ரைம் போலீசில் புகார் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, பள்ளியில் பெற்றோர் கூட்டம் நடத்தப்படும்போது ஊக்கத் தொகை தொடர்பாக போனில் தொடர்பு கொண்டு அரசு தரப்பில் யாரும் பேச மாட்டார்கள் என்றும் அவ்வாறு போன் செய்யும் நபர்களிடம் வங்கிக்கணக்கு குறித்த தகவல்களை தெரிவிக்க வேண்டாம் எனவும் எடுத்துரைத்து அனைத்து பள்ளிகளின் தலைமையாசிரியர்களும் பெற்றோருக்கு உரிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இதுசார்ந்து தேவையான நடவடிக்கைகள் எடுக்குமாறு அந்தந்த மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது’ என்று அதில் கூறப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ராஜ்

பியூட்டி டிப்ஸ்: மழையால் ஏற்படும் சேற்றுப்புண்… வராமல் தடுப்பது எப்படி?

டாப் 10 நியூஸ் : 53ஆம் ஆண்டில் அதிமுக முதல் பணிக்கு திரும்பும் சாம்சங் ஊழியர்கள் வரை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel