தொடர்ந்து மாணவர்களை காவு வாங்கும் நீட்!

தமிழகம்

ஒவ்வொரு ஆண்டும் நீட் தேர்வு நெருங்கும் போதும், முடிந்த பின்பும் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வது தொடர்கதையாகி வருகிறது. நாடு முழுவதும் நாளை (ஜூலை 17) தேர்வு நடைபெற உள்ள நிலையில் தமிழகத்தில் கடந்த இரு வாரங்களில் மட்டும் சென்னையைச் சேர்ந்த தனுஷ்(19), கிருஷ்ணகிரியைச் சேர்ந்த முரளி கிருஷ்ணா (18) என 2 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அவர்கள் வரிசையில் அரியலூரை சேர்ந்த மாணவி ஒருவர் இன்று (ஜுலை 16) தோல்வி பயத்தில் தற்கொலை செய்துகொண்டார்.

அரியலூர் மாவட்டம் ரயில்வே காலனி தெருவை சேர்ந்தவர்கள் நடராஜன்-உமாராணி தம்பதியர். இந்த தம்பதியினருக்கு ஒரு மகள், ஒரு மகன் என 2 குழந்தைகள். நடராஜன் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். உமாராணி பிள்ளைகளை பார்த்துக்கொண்டு வீட்டில் உள்ளார். 2020-21ஆம் கல்வியாண்டில் +2 முடித்துள்ள மகள் நிஷாந்தி(16) பொதுத்தேர்வில் 430 மதிப்பெண்கள் பெற்றார். மருத்துவராக ஆசைப்பட்ட அவர் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்து, கோச்சிங் செண்டருக்கு சென்று பயிற்சி பெற்றார்.

நாளை நீட் தேர்வு எழுத இருந்த மாணவி நிஷாந்தி நேற்று இரவு வீட்டில் உள்ள தனது அறைக்கு தூங்க சென்றார். ஆனால் இன்று காலை நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவரது தாய், மகளின் அறையை திறந்து பார்த்தபோது மின்விசிறிசியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. மகள் தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சியில் உறைந்து போனார்.

பின்னர் இதுகுறித்து தகவலறிந்த அரியலூர் போலீஸார், விரைந்து சென்று உடலை கைப்பற்றி அரியலூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். தொடர்ந்து போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், மாணவி நிஷாந்தி கடந்தாண்டு நீட் தேர்வு எழுதி தோல்வியடைந்துள்ளார் என்பதும், தற்போது 2-வது முறையாக நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளார் என்பதும் தெரியவந்தது.
மேலும் மாணவியின் அறையில் கடிதம் ஒன்றையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர். தனது தந்தைக்கு நிஷாந்தி எழுதியுள்ள அந்த கடிதத்தில், வேதியியல் பாடம் தனக்கு கடினமாக உள்ளது என்றும், பயிற்சி பெற்ற போதும், தன்னால் நீட் தேர்வில் தேர்ச்சி பெற முடியாது. அதனால் தற்கொலை செய்து கொள்கிறேன் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக மாணவி மன உளைச்சலில் இருந்த நிலையில் தோல்வி பயத்தில் அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மாணவியின் இறப்பு குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள அரியலூர் போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பிற மாநிலங்களை காட்டிலும் தமிழகத்தில் நீட் தேர்வுக்கு தீவிரமான எதிர்ப்பு நிலவி வருகிறது. மாணவர்கள் தற்கொலைகளும் அதிகமாக நடக்கின்றன. நீட் வந்தபின் தமிழ்நாட்டில் 2017ல் நடந்த அனிதா தற்கொலை உள்பட கடந்த 6 ஆண்டுகளில் 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். குறிப்பாக அரியலூர் மாவட்டத்தில் மட்டும் நீட் தேர்வு காரணமாக தற்கொலை செய்த அனிதா முதல் இதுவரை 4 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர். மருத்துவம் படித்து உயிர்களை காப்பாற்றும் மருத்துவர்களை உருவாக்க வேண்டிய நீட் தேர்வு, உயிர்கொல்லியாக மாறி நிற்கிறது. நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும் சட்ட மசோதாவினை நிறைவேற்ற தமிழக அரசு போராடி வருகிறது. எனினும் மத்திய அரசு அதற்கு ஒப்புதல் அளிக்க இன்று வரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. தமிழக ஆளுநரும் நீட் விலக்கு மசோதாவை கிடப்பில் வைத்துள்ளார்.

இந்நிலையில் மாணவியின் இறப்புக்கு இரங்கல் தெரிவித்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மமக தலைவர் ஜவாஹிருல்லா உள்ளிட்டோர் நீட் தேர்வை உடனே திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

**கிறிஸ்டோபர் ஜெமா**

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0