பகடிவதையை (Ragging) வேர்விடச் செய்யாத மாணவர் பேரவை தேர்தல்கள்!

Published On:

| By Minnambalam

நா.மணி

உயர்கல்வி நிறுவனங்கள் அனைத்தும், முதலாம் ஆண்டு மாணவர் வருகையின்போது, மிகவும் உஷாராகி விடுகின்றன. பறக்கும் படைகள் போன்ற தனிப்படைகள் தனிக் குழுக்கள் அமைக்கின்றன. காலை, மதியம், உணவு இடைவேளை என ரோந்துப் பணியில் ஈடுபடுகின்றன. இத்தகைய கண்காணிப்பு பணிகளை, உயர் கல்வி நிறுவனங்கள் தன்னிச்சையாக உருவாக்குவதில்லை. பல்கலைக்கழகம் மானியக் குழுவே இதற்கான தீவிரமான வழிகாட்டுதல்களை வழங்குகிறது. கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துகிறது. ஒவ்வொரு கல்வி நிறுவனத்தையும் அறிக்கை சமர்ப்பிக்கும்படி கேட்டுக்கொள்கிறது. இவையெல்லாம் எதற்கு? ‘பகடிவதை’ என்ற பெயரில் முதலாண்டு மாணவர்களுக்கு, மூத்த மாணவர்கள் நடத்தும் வன்கொடுமைகளிலிருந்து தடுத்து நிறுத்துவதற்காகவே.

பகடிவதையில் ஈடுபடுவோருக்கு, இரண்டு விதமான தண்டனைகளை வழங்கலாம். ஒன்று, நிர்வாக ரீதியான தண்டனைகள். மற்றொன்று, இந்திய குற்றவியல் சட்டத்தின்படி வழங்கப்படும் தண்டனைகள். நிர்வாக ரீதியாக, பகடிவதையில் ஈடுபட்ட மாணவனை, இடை நிறுத்தம் செய்யலாம். திரும்பப் பெறலாம். தேர்வு எழுத தடை விதிக்கலாம். கல்வி, விளையாட்டு, கலை இலக்கியம் என ஏதேனும் ஒரு துறையில், சிறந்து விளங்கும் மாணவராக இருந்தாலும் கூட, பன்னாட்டு அளவிலான பங்கேற்பைக் கூட, தடை செய்யலாம். அனுமதி மறுக்கலாம். விடுதியில் இருந்து வெளியேற்றலாம். சேர்க்கையை ரத்து செய்து, கல்வி நிறுவனத்தை விட்டு வெளியேற்றலாம். பகடிவதையை காவல் துறையில் பதிவு செய்து, குற்றவியல் நடவடிக்கை மேற்கொண்டு, தண்டனை வழங்கப்பட்டால், 7 ஆண்டுகள் வரை கூட, சிறை தண்டனை விதிக்கலாம். பகடிவதை என்ற பெயரில், பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டிருந்தால், அதற்கு தக்க தண்டனையும் வழங்கப்படும்.

Student Body Elections that do not root out Ragging by N Mani

இத்தகைய சட்டப் பாதுகாப்புகள் இருந்தும், கூடுதலாகவோ, குறைவாகவோ, தெரிந்தோ, தெரியாமலோ, பகடிவதை நடந்து கொண்டேதான் இருக்கிறது . கடும் தண்டனைகள் கொஞ்சம் அச்சத்தைக் கொடுத்து இருக்கிறது. ஆனால் முற்றிலும் நிறுத்துவதற்கு துணை புரியவில்லை. ஏன் இந்த நிலை? பாதிக்கப்பட்ட மாணவர்கள் யாரும் புகார் அளிக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கையே, குற்றச் செயல்களுக்கு அச்சாரம். சட்டத்தின் கடுமை, கண்காணிப்பு எல்லாம் ஒப்பீட்டளவில் குறைவாக இருந்த காலத்தில், பகடிவதை மிகக் குறைவாக இருந்தது. சில கல்லூரிகளில் பகடிவதை இன்னதென்று தெரியாமல் கூட இருந்தது. அது எப்படி? உயர் கல்வியில், அறுந்து போன முக்கியக் கன்னி இது.

கல்லூரிகளில், ஆரோக்கியமான ஜனநாயகச் செயல்பாடுகள், கல்லூரி பேரவை தேர்தல்கள், உயிர்ப்புடன் இயங்கி வந்த காலத்தில், பகடிவதையில் ஈடுபட வேண்டும் என்ற மனநிலையை கூட இல்லாமல் செய்தது. சில இடங்களில் குறைவாக இருந்தது.

மாணவர் சேர்க்கை முடிந்து, முதன்முதலாக கல்லூரிக்கு பேருந்தில் வருகை புரிந்தேன். கல்லூரி வாயிலில் பெரும் மாணவர் கூட்டம். தாரை தப்பட்டை முழங்கிக் கொண்டு இருந்தன. பேருந்திலிருந்து இறங்கவே, அங்கிருந்த மாணவர்கள் அனுமதிக்கவில்லை. இறங்க, இறங்க, வாட்ட சாட்டமாக இருந்த, மாணவர் ஒருவர், என்னை வாரி அணைத்துக் கொண்டார். “மாப்பிள்ளே! எங்க டீமுக்கு ஓட்டு போடுங்க” என்று முதல் கோரிக்கையை முன் வைத்தார். ஆறு அடிக்கு குறையாத உயரம் அவர். ஒல்லியான தேகம். தலையில் ரிப்பன் கட்டியிருந்தார். ஆடி ஆடி, வியர்வையால், தொப்பலாக நனைந்து இருந்தார். நான் நகர்ந்ததும் அடுத்த மாணவரை ஆராதிக்க சென்றார்.

கொஞ்சம் நகர்ந்ததும், அடுத்த அணி மாணவர்கள் நின்றார்கள். “மாப்ளே! எந்த கிளாஸ்”? வகுப்பைச் சொன்னதும், “மாப்பிளே! நம்ம பையன். சேர்மன் பிஏ எக்கனாமிக்ஸ். தேர்ட் இயர். பார்த்து ஓட்டு போடுங்க” என்று நோட்டீஸை கையில் திணித்தார். கொஞ்சம் நகர்ந்ததும்,அடுத்த அணி, நம்மை அணுகி, “எங்க அணிக்கு ஓட்டு போடுங்க” என நோட்டீஸை கையில் கொடுத்தனர்.

கல்லூரி வளாகம் எங்கும் தேர்தல் விழாக்கோலம். வகுப்பறைக்குள் சென்று கொஞ்ச நேரம்தான். மாணவர் பேரவை போட்டியாளர்கள் வகுப்பறைக்கும் வந்தனர். போட்டியிடும் அணி ஒவ்வொன்றும், வகுப்பு ஆசிரியர் அனுமதியோடு, தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினர். தாங்கள் ஏன் தேர்தலில் போட்டியிடுகிறோம்? தங்கள் அணி வெற்றி பெற்றால் என்ன செய்வார்கள்? என்பதையெல்லாம் எடுத்துக் கூறி, தங்களுக்கு வாக்கு அளிக்கும்படி கேட்டுக் கொண்டனர்.

 

எல்லா அணியினரும், வகுப்பறை, வகுப்பறையாக வந்து வாக்கு சேகரிப்பு என பிரச்சாரம் மதியம் நிறைவடைந்தது. பின்னர், மாணவர்கள் வீட்டுக்குச் சென்று விடலாம். வந்த முதல் நாள், முதலாண்டு மாணவர்களை தழுவிக்கொள்ளும் மாணவர்களை, மறுநாள் முதல், தழுவிக் கொள்ளும் முதலாண்டு மாணவர்கள் உண்டு. முதலாண்டு மாணவர்கள்தான் என்றாலும், மூத்த மாணவர்களோடு இணைந்து, அப்பொழுது கல்லூரியில் சேர்ந்தவர்கள் கூட தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட தொடங்கி விடுவார்கள்.

தேர்தல் பிரச்சார காலம் முடிவடையும் வரை, தினந்தோறும் வருவோம். வகுப்பறையில் இருப்போம். தேர்தல் பிரச்சாரக் குழுக்கள் வந்து சென்றதும், வகுப்புகள் நிறைவடைந்து விடும். பத்து மணிக்கு தொடங்கும் வகுப்புகள், சற்றேறக்குறைய, ஒரு மணிக்குள், தேர்தல் பிரச்சார பணிகளோடு நிறைவடைந்து விடும். கல்லூரியின் சுற்றுவட்டாரம் முழுவதும், சுவர் விளம்பரங்கள், சுவரொட்டி பிரச்சாரம், தூள் பறக்கும். ஒவ்வோர் அணியும், அதன் தலைமையும், அவரது ஆதரவாளர்களும், தினந்தோறும், தங்கள் பிரச்சார பணிகளை மதிப்பீடு செய்வார்கள். மாற்று அணியின் தேர்தல் பிரச்சார உத்திகளை கள மதிப்பீடு செய்வார்கள். புதிய பிரச்சார உத்திகளை வகுத்து, மறுநாள் பிரச்சாரத்தில் களம் இறங்குவார்கள்.

இந்தத் தேர்தல் பிரச்சாரத்தின் மையமே முதலாண்டு மாணவர்கள். முதலாண்டு மாணவர்களின் வாக்குகளை எப்படி பெறுவது என்பதில் தான் அனைத்து தேர்தல் போட்டியாளர்களும் குறியாக இருப்பார்கள். முதலாண்டு மாணவர்கள் வாக்குகளே வெற்றி தோல்வியை தீர்மானிக்கும். இரண்டாம் ஆண்டு, மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்கள், தங்கள் வாக்குகளை யாருக்குச் செலுத்த வேண்டும் என்று தீர்மானகரமான முடிவோடு இருப்பார்கள். முதலாண்டு மாணவர்களுக்கு யார், எப்படி என்று தெரியாது. எனவே, எவ்வளவு தூரம் முதலாண்டு மாணவர்களிடம் இணக்கமாக, நெருக்கமாக, அன்பாக இருக்கிறார்களோ, அந்த அளவுக்கு, வாக்குகளை சேகரிக்க முடியும்.

நெருக்கத்தைப் பொறுத்து, வாக்குகள், தங்கள் பால் வந்து சேரும். ஒவ்வொரு முதலாண்டு மாணவனும், எங்கிருந்து வருகிறார்? அவனுக்கு தெரிந்த இரண்டாம் ஆண்டு, மூன்றாம் ஆண்டு மாணவர்கள், யார்? உறவினர்கள் இங்கு படிக்கிறார்களா? எனப் பட்டியல் எடுப்பார்கள். அவர்களை எப்படி அணுகுவது? அல்லது மடக்குவது என்று தீவிரமான திட்டமிடுதல் நடக்கும்.

இந்தத் தேர்தல் நடைமுறையின்போது, மது பானங்கள் சர்வ சாதாரணமாக புழங்கும். மதுவிற்கு ஆசைப்படும் அல்லது பலவீனமாக இருக்கும் மாணவர்கள் முதலாண்டிலேயே, இதற்கு அறிமுகமாகி விடுவார்கள். வாக்குகளை ஈர்க்க, நட்பு வளையத்தை அதிகரிக்க, தேர்தல் வேலைகளில் ஈடுபட மது பெரும் கருவியாக பயன்படுத்தப்பட்டது.

தேர்தலுக்கு முந்தைய நாள், முதலாம் ஆண்டு மாணவர்களை ஈர்க்க, அவர்களது வாக்குகளை கவர, அன்பளிப்புகள் வழங்க திட்டம் வகுப்பார்கள். இந்தத் திட்டங்கள் மிகவும் ரகசியமாக இருக்கும். தலைமைக் குழுவுக்கு மட்டுமே தெரியும். ஒரு குழு என்ன அன்பளிப்பு கொடுக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள, அடுத்த குழு ஆர்வமாக இருக்கும். இதனை அறிந்து கொள்ள வேவு வேலை பார்ப்பார்கள். உளவு பார்ப்பதில் அல்லது மோப்பம் பிடிப்பதில் ஈடுபடுவார்கள். இதில் யார் வெற்றி பெறுகிறார்களோ, அந்த அணிக்கு, வெற்றி வாய்ப்பு அதிகம் என்பது ஒரு கணிப்பு. ஓர் அணி என்ன தரப் போகிறார்கள் என்பதைத் தெரிந்து கொண்ட மற்றோர் அணி, அதனைக் காட்டிலும் அன்பளிப்பை பெரிதாக்கி கொடுக்க திட்டம் தீட்டுவார்கள். இத்தகைய செயல்பாடுகள் பொதுத் தேர்தலை விஞ்சும் வடிவத்தில் இருக்கும்.

தேர்தல் முடிந்து, வெற்றி – தோல்வி தெரிந்து, கொண்டாட்டங்கள் தொடங்கும். வெற்றி பெற்றவர்கள், யானை மேல் ஊர்வலம் வந்து வெற்றியை கொண்டாடுவதும் உண்டு. எல்லாம் முடிந்து தான் முறையாக வகுப்புகள் தொடங்கும். மாணவர் பேரவை தேர்தலில், சில கல்லூரிகளில், அரசியல் கட்சிகளின், நேரடி ஆதரவு பளிச்சென தெரியும். சில கல்லூரிகளில், மிகவும் நாசூக்காக தெரியும். சில கல்லூரிகளில் அரசியல் கட்சிகளின் சார்பு இல்லாமல், தேர்தல்கள் நடக்கும்.

தேர்தல் எப்படிப்பட்டதாக இருந்தாலும், இதன் தன்மை என்னவாக இருந்தாலும், பொது தேர்தல் போலவே, இவை நடைபெறும். எல்லா மாணவர்களும் தேர்தலில் நிற்க தகுதி உடையவர்கள் தான் என்றாலும், நன்கு செலவு செய்ய முடியும் என்ற மாணவர்கள் மட்டுமே தேர்தலில் நிற்க முடியும். வெல்ல முடியும். தேர்தலையொட்டி மாணவர்களுக்கு கூடாத பழக்கங்கள் கைகூடும். மது, புகை என மிகச் சாதாரணமாக, மாணவர்களிடம் தொற்றிக் கொண்டது. அது அவர்களின் வாழ்நாள் முழுவதும் உடன் பயணித்தது. சிலரை, வாழ விடாமல் அது முன்கூட்டியே பயணப்பட வைத்தது.

மாணவர் பேரவை தேர்வுக்கு, தேர்வு செய்யப்படும் பொறுப்பாளர்கள், முதல்வரோடு மோதுவார்கள். கல்லூரி நிர்வாகத்தோடு மோதல் போக்குகளைக் கடைப்பிடிப்பார்கள். ஆனால், பெரும்பாலும் இவர்கள், ஆசிரியர்களோடு தங்கள் மோதல் போக்கை கடைப்பிடிக்க மாட்டார்கள். அதிகபட்சம் போனால் வகுப்பிற்கு வர மாட்டார்கள். எப்போதாவது வருவார்கள். வகுப்பறையில், ஆசிரியர்கள் பாடம் நடத்தும்போது, குறும்பு செய்வது இந்த மாணவர் பொறுப்பாளர்களின் செயல்பாடுகளாக பெரும்பாலும் இருந்ததில்லை. அது அமைதியான மாணவர்கள் மற்றும் மாணவப் பொறுப்பாளர்கள் என்ற இருவருக்கும் மத்தியில் கவன ஈர்ப்புக்காக ஏங்கிய மாணவர்கள் செயலாக இருந்தது.

தேர்தல் முடிந்து, வகுப்புகள் தொடங்கும் போது முதலாண்டு மாணவர்கள், மூத்த மாணவர்களோடு இரண்டற கலந்து விடுவார்கள். நன்கு அறிமுகமாகி விடுவார்கள். மாமன், மச்சான், மாப்ள என்று பேசத் தொடங்கி விடுவார்கள். நட்பு, அந்நியோன்யம் அதிகரித்து விடும். பகடிவதை என்பது, அடிப்படையில், அறிமுகம் இல்லாத மாணவர்களின் மீது, படிநிலை சமூக மனநிலை கொண்ட மாணவர்களால் நிகழ்த்தும் வன்முறையாக இருந்தது. அந்த எண்ணம், வேலை செய்வதற்கே இங்கு வழியில்லாமல் போய்விடும்.

கல்லூரிப் பேரவைத் தேர்தல்கள், முறையாக நடத்தப்பட்டு வந்த இடங்களில், பகடிவதை, தன் பகடியை காட்டுவதற்கு வழியில்லாமல் போனது. உச்ச நீதிமன்றத்தின் வழிக்காட்டலின் பேரில் அமைக்கப்பட்டது, லிங்தோ குழு. முன்னாள் இந்தியத் தலைமை தேர்தல் ஆணையர் ஜே.எம். லிங்தோ. இப்படி குழு அமைத்து பரிந்துரைகள் பெற்று, பகடிவதையைத் தடுக்க இந்திய அரசும் பல்கலைக்கழக மானியக் குழுவும் போராடி வருகிறது. ஆனால் ஜனநாயக வழியில் அமைந்த கல்லூரிப் பேரவை தேர்தல்கள், தன்னியல்பாக பகடிவதையை வேர் விடாமல் செய்தது வந்தது, எவ்வளவு பெரிய ஜனநாயக மாண்பு. விழுமியம்!

பட்டப்படிப்பையும், பட்ட மேற்படிப்பையும் முடிப்பதற்குள்ளாகவே, தேர்தல் வழியாக மாணவர் பேரவை தேர்வு, தேர்தல்களை நிறுத்தி, மதிப்பெண் வழியாக மாணவர் பேரவை பொறுப்பாளர்கள் தேர்வு என்ற, இரண்டு நிலைகளையும், பார்க்க வாய்ப்பு கிட்டியவர்கள் நாங்கள். பட்ட வகுப்பு படித்த மூன்றாண்டு காலமும், முறையான தேர்தல்கள் மூலம் மாணவர் பேரவை பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இந்தக் காலகட்டத்தில், பகடிவதை என்பதே எங்களுக்கு அறிமுகம் ஆகவில்லை. நாங்கள் முதலாம் ஆண்டு படிக்கும்போது, அடுத்து, மூத்த மாணவர்களாக முந்திய காலம், என எந்தக் காலத்திலும், பகடிவதை பற்றித் தெரியாமலேயே பட்டப்படிப்பை முடித்து, கல்லூரியை விட்டு வெளியேறி வந்தோம்.

முதுகலைப் பட்டப்படிப்பில் அடி எடுத்து வைக்கும் போது, தேர்தல் முறை கல்லூரியிலிருந்து துடைத்து எறியப்பட்டது. ‘தேர்தல் வேண்டும்’ என நீண்ட நெடிய போராட்டங்களை மாணவர்கள் நடத்திப் பார்த்தார்கள். மாணவர்களின் போராட்டங்களுக்கு ஏற்ற யுக்திகளை கையாண்டு, நிர்வாகம், மாணவர் தேர்தலை நிறுத்தி விட்டது. ஜனநாயக முறையில் தேர்தல் இல்லாத கல்லூரியில், முதலாண்டு மாணவர்களுக்கும் மூத்த மாணவர்களுக்கும் இணைப்பு பாலம் இல்லாமல் போனது. அடுத்த ஆண்டே, பகடிவதை தனது கொடூரங்களை காட்டத் தொடங்கியது. பகடிவதையின் கொடூரம், அதற்கு எதிரான சட்டத்தின் வலிமை ஆகிய இரண்டையும் அடுத்த ஆண்டில் மாணவர்கள் உணரத் தொடங்கினர்.

அடுத்த வாரம்…

குறிப்பு: இந்தக்கதை கட்டுரையாளரின் கல்லூரி வாழ்க்கையில் (1982-87) நடைபெற்றது. இடத்துக்கு இடம் அதன் தன்மையில் மாறுதல்கள் இருக்கலாம்.

கட்டுரையாளர் குறிப்பு

Student Body Elections that do not root out Ragging by N Mani

நா. மணி 

பேராசிரியர் மற்றும் தலைவர் பொருளாதாரத் துறை ஈரோடு கலை அறிவியல் கல்லூரி, ஈரோடு

டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

இசையமைப்பாளர் விஜய் அண்டனி மகள் தற்கொலை!

தண்ணீருக்காக ஊருக்குள் வரும் வனவிலங்குகள்: பொதுமக்கள் அச்சம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel