பலத்த சூறாவளிக்காற்று வீசும் : மீனவர்களுக்கு எச்சரிக்கை!

Published On:

| By Jegadeesh

குமரிக்கடல், மாலத்தீவு பகுதிகளில் இன்று (பிப்ரவரி 4 ) பலத்த சூறாவளிக்காற்று வீச வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று (பிப்ரவரி 3 ) குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மன்னார் வளைகுடா, இலங்கையின் மேற்கு கடலோர பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது இன்று (பிப்ரவரி 4 )மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவுகிறது.

இது அடுத்த 12 மணி நேரத்தில் வலுவிழக்கக்கூடும். இதன் காரணமாக, இன்று தென்தமிழக மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், வடதமிழக மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நாளை முதல் பிப்ரவரி 7 ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

பிப்ரவரி 8 ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பை பொறுத்த வரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

அதிகபட்ச வெப்பநிலை 31-32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

இன்று குமரிக்கடல் மற்றும் மாலத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் எனவே மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

மு.வா.ஜெகதீஸ் குமார்

பில்கேட்ஸை பாராட்டிய மோடி: வைரல் வீடியோ!

எப்படிடா இருக்க? நம்பர் ஒன் பவுலர் சிராஜை பாராட்டிய அஷ்வின்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel