ஆபரேஷன் மின்னல் வேட்டையில் வெளி மாநிலங்களில் தலைமறைவாக இருந்த 300 குற்றவாளிகளை கைது செய்துள்ளோம் என்று தமிழக டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.
ரயில் பயணங்களின் போது பயணிகளிடம் திருடப்பட்ட சொத்துக்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி சென்னையில் இன்று (அக்டோபர் 12) நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த தமிழக டிஜிபி சைலேந்திர பாபு “ரயில்களிலிருந்து திருடப்பட்ட செல்போன்கள், லேப்டாப்கள், நகைகள், பணங்கள் என ஒரு கோடி மதிப்பிலான பொருட்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
ரயில்வேயில் குற்றங்கள் பாதி அளவிற்கு குறைந்துள்ளது. ரயில்வே போலீசார் சிறப்பாக பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
பிற மாநிலங்களிலிருந்து ரயிலில் வந்து கொள்ளையடிக்கக்கூடிய குற்றவாளிகளை கண்காணிப்பதால், கடந்த ஆண்டு ரயில் கொள்ளை சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை.
ரயில் சிக்னல்களில் கொள்ளையடிக்கக்கூடியவர்கள், ரயிலை நிறுத்திவிட்டு கொள்ளையடிக்கக்கூடிய கும்பல்கள், பணம் திருடக்கூடிய பவேரியா கும்பல்கள் என யாருமே தமிழ்நாட்டில் நுழைய முடியவில்லை என்ற சூழலை நமது ரயில்வே போலீசார் ஏற்படுத்தியுள்ளனர்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போதைப் பொருட்களை தமிழகத்தில் முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் கஞ்சாவை ஒழிப்பதற்கு அதிரடி நடவடிக்கைகள் எடுத்துள்ளோம். அதில் குறிப்பிடத்தக்க வகையில் வெற்றியும் பெற்றுள்ளோம்.
தமிழகத்தின் எல்லைப்பகுதிகளில் சோதனைச் சாவடி அமைத்து வாகன தணிக்கையில் ஈடுபடுவதால் ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து வரக்கூடிய கஞ்சா தடுக்கப்பட்டுள்ளது.
இதனால் கஞ்சா கும்பல்கள் ரயில்களில் போதை பொருளை கொண்டு வர முயற்சி செய்கிறார்கள். ரயில்வே காவல் துறை கடந்த 3 மாதங்களில் மட்டும் 1700 கிலோ கஞ்சா பறிமுதல் செய்துள்ளனர்.
போதை பொருள் கடத்துபவர்களின் வங்கி கணக்குகளை முடக்குவது, அவர்களின் சொத்துக்களை முடக்குவது, போன்ற நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்.
பல மாதங்களாக பிடி ஆணைகள் நிலுவையில் உள்ள குற்றவாளிகள் வெளி மாநிலங்களில் பதுங்கி உள்ளனர்.
எதிர்பாராத நேரத்தில் அவர்களை அட்டாக் செய்து பிடிக்க ஆபரேஷன் மின்னல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த ஆபரேஷனில் 300-க்கும் மேற்பட்ட தலைமறைவு குற்றவாளிகளை கைது செய்துள்ளோம். இவர்கள் மேல் அதிக வழக்குகள் நிலுவையில் உள்ளது.
அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினால் தான் வழக்குகளை நடத்த முடியும். அப்பொழுது தான் அவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்க முடியும். அதனடிப்படையில் தான் இந்த ஆபரேஷன் மின்னல் வேட்டை நடந்தது.” என்று தெரிவித்தார்.
செல்வம்
டி20 உலகக்கோப்பை: தீபக் சாஹர் விலகல் – மாற்று வீரர் யார்?
மணிரத்னத்துடன் இணையும் படம் : குழப்பத்தில் ரஜினி?