சென்னை மற்றும் புறநகரில் உள்ள நீர்நிலைகள், காலி இடங்களில் கழிவுநீரை வெளியேற்றினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் காற்று, நீர் மற்றும் புவிப்பரப்பு மாசடைதல் மற்றும் ஒலி மாசு ஆகியவற்றைக் கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் பல்வேறு நடவடிக்கைகளை தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் மேற்கொண்டு வருகிறது.
சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் கழிவுநீரை அகற்றும் தனியார் லாரிகள் அவற்றை முறையாக எந்த இடத்தில் வெளியேற்ற வேண்டும் என்றும்,
நீர்நிலைகள் மழைநீர் கால்வாய் பகுதியில் விட்டுவிடுவதால் பொது சுகாதாரம் பாதிக்கப்படுவதால் கழிவுநீர் அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள லாரி உரிமையாளர்களுக்குப் பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை வானகரம் பகுதியில் கூவம் ஆற்றில் சுத்திகரிக்கப்படாத கழிவுநீரை விட்ட ஒன்பது லாரிகளின் வாகன அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்,
“கழிவுநீர் டேங்கர் லாரிகளை கையாளுபவர்கள் குடியிருப்பு, வணிக வளாகங்களிலிருந்து சேகரிக்கும் கழிவுநீரை,
சென்னை குடிநீர் வாரியத்தால் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையால் அங்கீகரிக்கப்பட்ட லாரிகள் மூலம் வெளியேற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
சட்ட விரோதமாக நீர் நிலைகள் மற்றும் காலி இடங்களில் கழிவுநீரை வெளியேற்றுபவர்கள் மீது சட்டப்படி வழக்கு தொடரப்படும்.
பொதுமக்கள் சட்ட விரோதமாகச் செயல்படும் கழிவுநீர் டேங்கர் லாரிகள் பற்றிய தகவலை அருகிலுள்ள தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரிய மாவட்ட அலுவலகம் அல்லது தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரிய உதவி எண் 18004256750,
மின்னஞ்சல் complaint@tnpcb.gov.in மற்றும் சென்னை குடிநீர் வாரியம், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் சென்னை மாநகராட்சி அலுவலகங்களில் தெரிவிக்கலாம்” என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளால் இரண்டு ஆண்டுகள் செல்லத்தக்க வாகன உரிமம் பெற வேண்டும். ரூ.2,000 கட்டணம் செலுத்தி விண்ணப்பித்தால் 30 நாட்களுக்குள் உரிமம் வழங்கப்படும்.
உரிமம் பெற்றவர் தவிர வேறு யாரும் மலக்கசடு மற்றும் கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டால் அவர்கள் மீது சட்ட விதிகளை மீறியதாக நடவடிக்கை எடுக்கப்படும்.
ஆனால் சில லாரி உரிமையாளர்கள், கழிவுநீரை லாரியில் ஏற்றி, அதை வடிகால், கால்வாய், ஏரி, குளங்களில் கொட்டிவிட்டுச் செல்கின்றனர். இதனால், நிலத்தடி நீர் மாசடைவதுடன், சுற்றுச்சூழல் பாதிப்பும் ஏற்படுகிறது.
இதைத் தடுக்க, அந்தந்த மண்டலங்களில் உள்ள கழிவு நீர் உந்து நிலையங்கள் மற்றும் சுத்திகரிப்பு நிலையங்களில் தான் கழிவுநீரை கொட்ட வேண்டும் என்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
ராஜ்
நடிகர் விஷால் படப்பிடிப்பில் மீண்டும் விபத்து!
அதிகரிக்கும் வெயில்: மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசு கடிதம்!