தமிழகத்தில் ஹெல்மெட் அணியாமல் செல்லும் போலீசாரின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழகத்தில், போக்குவரத்து விதிமீறல்களை கட்டுப்படுத்தும் வகையில், திருத்தி அமைக்கப்பட்ட போக்குவரத்து சட்டத்தின்படி, உயர்த்தப்பட்ட புதிய அபராதத் தொகை வசூலிக்கும் முறை கடந்த அக்டோபர் 26-ம் தேதி அமலுக்கு வந்தது.
ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் மற்றும் அரசின் அவசர போக்குவரத்திற்கு வழி விடாத நபர்களிடமிருந்து ரூ. 10,000 அபராதம் வசூலிக்கப்படும். அதன்படி, குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் மட்டுமன்றி, அவர்களுடன் பயணிக்கும் நண்பர்கள் மீதும் வழக்கு பதியப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதை நடைமுறைப்படுத்தி அபராதமும் வசூலிக்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த விதிகளை காவல்துறையினர் பின்பற்றுவதில்லை என்று பரவலாக குற்றச்சாட்டு இருந்து வருகிறது.
இந்தநிலையில் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு, காவல்துறையினருக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அதில், ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் செல்லும் போலீசார் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் போலீஸ் என்ற அடையாளத்தைக் கூறி வாக்குவாதம் செய்வோர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
ஹெல்மெட் அணியாமல் பணிக்கு வரும் போலீசாரின் வாகனங்களை பறிமுதல் செய்யவேண்டும் என்றும், முறையாக அபராதம் கட்டி ஹெல்மெட் வாங்கி அதன் ரசீதை காண்பித்தால் மட்டுமே வாகனத்தை ஒப்படைக்கவேண்டும் என்றும் டிஜிபி தெரிவித்துள்ளார்.
கலை.ரா
அமைச்சரை மிரட்டிய சசிகலா புஷ்பா: வழக்குப்பதிவு செய்த காவல்துறை
பஞ்சாப் அணி தவறு செய்து விட்டது: கிறிஸ் கெயில்