காற்றழுத்த தாழ்வுப் பகுதி, மண்டலமாக வலுவடைந்து புயலாக மாறும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதை அடுத்து, 6 மாவட்டங்களுக்கு பேரிடர் மீட்புக் குழுவினர் விரைந்துள்ளனர்.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ’தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனையொட்டி உள்ள பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி உள்ளது.
இது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று (டிசம்பர் 6) மாலை தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையக் கூடும்.
டிசம்பர் 8 புயல்
பின்னர் மேலும் மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து புயலாக வலுவடைந்து டிசம்பர் 8ஆம் தேதி அன்று காலை வடதமிழகம், புதுச்சேரி மற்றும் அதனையொட்டிய தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளின் அருகில் வந்தடைய கூடும்.
இதையடுத்து இன்று (டிசம்பர் 6) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நாளை (டிசம்பர் 7) தமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களிலும், தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரையில் மழை பெய்யக்கூடும்.
கடலூர், மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
தமிழகத்தில் கனமழை
டிசம்பர் 8ஆம் தேதி, தமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களிலும், தமிழக உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர், சென்னை, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், மயிலாடு்துறை, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது’ என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீட்புப் படையினர் விரைவு
புயல் காரணமாக, மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்த நிலையில், 6 மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்புக் குழு விரைந்துள்ளது.
நாகை, தஞ்சை, திருவாரூர், கடலூர், மயிலாடுதுறை, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு தலா 25 பேர் கொண்ட மீட்புக் குழு விரைந்துள்ளது.
அவர்கள், நவீன பைபர் படகு, மரம் வெட்டும் கருவிகள், ஆழ்கடல் நீச்சல் உடை கொண்ட ஆபரணங்களுடன் புறப்பட்டுச் சென்றனர்.
ஜெ.பிரகாஷ்
திருவண்ணாமலை: அதிகாலையில் ஏற்றப்பட்ட பரணி தீபம்!
அதிமுக வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை!