“பெண்களுக்கு பாதுகாப்பில்லா சமூகம், ஒருபோதும் விடுதலை அடையாது” : கனிமொழி

Published On:

| By Minnambalam Login1

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு சர்வதேச தினத்தை முன்னிட்டு பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி மற்றும் தவெக தலைவர் விஜய் உள்ளிட்டோர் கருத்து தெரிவித்துள்ளனர்.

உலகம் முழுவதும் பெண்களுக்கு எதிரான வன்முறை தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. அவர்களது உறவினர்கள், தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என பலரால் பெண்கள் வன்முறைக்கு ஆளாகிறார்கள்.

இந்த நிலையில்தான் கடந்த 2000 ஆண்டு நவம்பர் 25ஆம் தேதியை பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு சர்வதேச தினமாக ஐநா பொதுக்குழு  அறிவித்தது. ஐநா சபையின் புள்ளி விவரங்களின் படி கடந்த 2023ஆம் ஆண்டில் ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கு ஒரு பெண் கொல்லப்பட்டுள்ளார்.

இந்தியாவிலும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நடைபெற்று வருகின்றன. இந்திய அளவில் சமீபத்தில் கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்டார். தமிழ்நாட்டிலும் சமீபத்தில் கிருஷ்ணகிரியில் போலி என்சிசி முகாம் நடத்திய சிவராமன் என்பவர் பள்ளி மாணவிகளை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கினார்.

வீடு தொடங்கி வீதி வரை… 

இந்தச் சூழலில்தான், நாடாளுமன்ற உறுப்பினரான கனிமொழி தனது எக்ஸ் வலைத் தளப்பக்கத்தில்  “பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத சமூகத்தால், ஒருபோதும் விடுதலை அடைய முடியாது. ஆண்களுக்கு நிகராய் சமூக அடுக்கின் அத்தனை படிநிலைகளையும் தனது அறிவால், உழைப்பால் கட்டியமைத்தவர்கள் பெண்கள். ஆனால், வீடு தொடங்கி வீதி வரை சமூகத்தின் எல்லா தளங்களிலும் பெண்கள் மீதான வன்முறை தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளது.

பெண்களுக்கெதிரான வன்முறை ஒழிப்பு தினமான இன்று, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளைத் தடுப்போம் என்றும், அவர்களுக்கு எதிரான வன்முறைகளை அனுமதிக்க மாட்டோம் என்றும் உறுதியேற்போம்.” என்று பதிவிட்டுள்ளார்.

பெண் பாதுகாப்பிற்கு தனி இணையத்தளம்! – விஜய்

தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” சர்வதேச அளவில் பெண்களின் முன்னேற்றம், முன்பை விட நம்பிக்கை அளிப்பதாக இருந்தாலும், அவர்களுக்கான பாதுகாப்பு இன்றும் கேள்விக்கு உரியதாகவே இருக்கிறது.

பெண் விடுதலை பேசும் தமிழ்நாட்டில், பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் நாள்தோறும் நிகழ்வதாக வரும் செய்திகள் துயரம் அளிக்கின்றன.

பெண்கள் மீதான வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதைத் தடுக்க, நீதித் துறையின் துணையோடு ஆட்சியாளர்கள் இரும்புக் கரம் கொண்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பான புகார்களுக்கு, அரசு தனி இணையத்தளத்தை உருவாக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு யோசனை தெரிவித்துள்ளது.

இதற்கு மதிப்பளித்து, தமிழக அரசு தனி இணையத்தளத்தை உருவாக்கி, பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு சர்வதேச தினத்தில் வலியுறுத்துகிறேன்.” என்று எக்ஸ் தளப்பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அப்துல் ரஹ்மான்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….

”என் பிறந்தநாள் வேண்டுகோள் இதுதான்” : தொண்டர்களுக்கு உதயநிதி கடிதம்!

கங்குவா தோல்வி… சூர்யாவுக்கு ஏற்பட்ட பெரும் பாதிப்பு என்ன தெரியுமா?

டெல்டாவில் அதிகனமழை : எந்தெந்த மாவட்டங்களில்?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Leave a Comment